ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்டிக்
நிறைய ஐஸ்
ஒரு புட்டி
பிராந்தி
வத்திப்பெட்டி\சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்க்கு நீ
நண்பா
இந்த சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
-கவிஞர் நகுலன்
2004ம் ஆண்டு கல்லூரி ஹாஸ்டலில் தான் முதன் முறையாக விஜேந்திரனைச் சந்தித்தேன். அப்போது விஜேந்திரன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, "உனக்கு என்னன்ன கெட்ட பழக்கம் இருக்கு?" சற்று தடுமாறிய நான் "ரெம்ப பேசுவேன்" என்றேன். மறுத்த விஜேந்திரன் "அது இல்ல தண்ணி, தம் வேற ஏதாவது?" என்று கேட்க, நான் இல்லை என தலையாட்டினேன். அன்று அவன் பார்த்த பார்வைக்கு இன்று தான் அர்த்தம் புரிகிறது.(சரியான 'பழம்' வந்து மாட்டிக்கிட்டான் என்பதே அது)

பின் நாட்களில் ஹாஸ்டல் வார்டன் மற்றும் வாட்ச்மேனிடம் சிக்காமல் சரக்கை பாதுகாப்பாக அறைக்குக் கொண்டுவருவதில் நான், விஜயின் வலது கரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.(ஒரு 'பாடிகாட்' போல) இதில் கவனிக்க வேண்டிய ஓன்று நாங்கள் ஒரு நாளும் மாட்டிக் கொண்டதில்லை.
விஜயின் விருப்பமான ப்ராண்ட் 'signature' விஸ்கி. கைச் செலவு குறையக் குறைய 'vintage'ஆக மாறி கடைசியில் 'nepoleon'இல் வந்து நிற்கும். 2005 மார்ச் 3ம் தேதி விஜயின் பிறந்த நாள். ஹாஸ்டலின் முதல் மாடியே போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. யாவரும் போதையில் மூழ்கிப் போன பின்னிரவில், " விஜேந்திரன் பிறந்த நாள்னா பசங்களுக்கு மறக்க முடியாத நாளா இருக்கணும்!" என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான், நான் 'யாருக்காவது உதவலாமே?' என்றேன். ( விஜயின் அடுத்த இரண்டு பிறந்த நாளுக்கும் பல்லாவரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்க்கு அரிசி மூட்டைகள் வங்கிக் கொடுத்தான்.)
எனக்குத் தெரிந்து விஜயுடனான மூன்றாண்டுகளில் அவன் குடிக்காமல் இருந்தது, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதங்கள் மட்டும் தான்.
விஜயின் வகுப்பு நண்பர்களில் ஒரு சிலரைத் தவிர பலரும் ஓசியில் குடிப்பதற்காகவே அவனோடு அலைந்து கொண்டிருந்தனர். ஓசிக் குடியோடு நிறுத்தாமல் அறைகளில் வாந்தி எடுத்து வைப்பதும், நான் சுத்தம் செய்வதுமாக சில விஷயங்களில் விஜயோடு சண்டை போட்டிருக்கிறேன்.'ஓசிக் குடிகளிடம்' நான் எத்தனையோ முறை சொல்லியும் அவர்கள் எங்கள் அறைக்கு வருவதை நிறுத்தவே இல்லை.
விஜய் ஒரு முறை 'காக்டெயில்' கலக்குவதாகச் சொல்லி பிராந்தி+விஸ்கி+ஒயின்+பழச்சாறு+உப்பு என எல்லாவற்றையும் கலந்து கொடுக்க அறையில் உள்ள எல்லோரும் வாந்தியும், பேதியுமாக அலைந்தது போன்ற சம்பவங்களும் உண்டு.
குடித்து விட்டு போதையில் விழுந்து கிடப்பவர்களை மட்டுமே பார்த்த எனக்கு, மது அருந்தி விட்டு விஜய்,கோகுல்,வினோத்,பாண்டி என்று யாவரும் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும், வெளிநாடுகளில் உள்ள வாய்ப்புகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தது, ஆச்சரியத்தை தருவதாகவே இருந்தது.
கோழியின் கால்கள் குப்பையைக் கிளறுவதைப் போல, மது பலருக்கும் வேதனையான நினைவுகளை கிளறிவிடுகிறது. அப்போதெல்லாம் அவர்கள் ஏதாவது புலம்புவதும்,வாய் விட்டு அழுவதும், விழுந்தடித்து தூங்கிவிடுவதுமாக அமைந்து விடுகிறது. ஆனால், விஜயைப் பொறுத்த வரை 'மது' என்பது கண்ணுக்குத் தெரியாத உற்சாகத்தை கொணரும் ஒரு மாயத் திரவமாகவே இருந்து வந்தது. அதை பல நேரங்களில் நான் நேரடியாகவே பாத்திருக்கிறேன்.
விஜய் குடிப்பதோடு மட்டுமே நிறுத்தி விடாமல் படிப்பிலும் சிறந்து விளங்கினான். சென்னையில் B.com., முடித்தான். சிங்கப்பூரில் M.B.A., முடித்து விட்டு தற்போது அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். இப்போது குடிப்பதில்லயாம்!? நம்புகிறோம்!

விஜய் தன்னையும் அறியாமல் ஒரு பழமொழியைப் பின் பற்றியிருக்கிறான்.'களவும் கற்று மாற' என்பதே அது.
இவை எல்லாம் நேற்று நடந்ததைப் போலவே இருக்கிறது. ஆனால், காலம் நமக்கு மிச்சம் வைப்பது வெறும் நினைவுகளை மட்டும் தான். அந்த நினைவில் விஜயின் உற்சாகமும், பிராந்தி கிளாசின் மனமும் நிறைந்திருக்கிறது. நினைவில் அமிழ்ந்து போவது போல சுகம் எதுவும் உன்ன்டா இந்த உலகில்?