Sunday, October 26, 2008

என்ன கொடுமை சார் இது!

3iorn:
இயக்குனர்: கிம் கி-டுக்
மொழி :கொரியா

Filmography

Year English title Korean title Transliterated title
1996 Crocodile 악어 Ag-o
Wild Animals 야생동물 보호구역 Yasaeng dongmul bohoguyeog
1998 Birdcage Inn 파란 대문 Paran daemun
2000 Real Fiction 실제 상황 Shilje sanghwang
The Isle Seom
2001 Address Unknown 수취인불명 Suchwiin bulmyeong
Bad Guy 나쁜 남자 Nabbeun namja
2002 The Coast Guard 해안선 Haeanseon
2003 Spring, Summer, Autumn, Winter... and Spring 봄, 여름, 가을, 겨울 그리고 봄 Bom yeoreum gaeul gyeoul geurigo bom
2004 Samaritan Girl 사마리아 Samaria
3-Iron 빈집 Bin-jip
2005 The Bow Hwal
2006 Time 시간 Shi gan
2007 Breath Soom
2008 Sad Dream 비몽 Bimong


குரு என் ஆளு(உலக சினிமா):

இயக்குனர்: செல்வா
மொழி: தமிழ்
திருடியது: கொரியத் திரைப்படத்திலிருந்து....
இயக்குன செல்வாவிட்க்கு தமிழக முதல்வர் அவர்களால் 2009 இல் கலைமாமணி விருது வழங்கப்படும்.

அடங்கப்பா கதையத்தான் திருடினிங்க, போஸ்டரையுமா? உங்கள் கலைப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

Thursday, October 23, 2008

காலம் மறந்த கலைஞன்

தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களைத் தந்ததில் இயக்குனர் மகேந்திரனின் பங்கு மிகப் பெரியது. மிகக் குறைவான திரைப்படங்களில் தன்னுடைய ஆளுமையை நிருபித்தவர். (பாரதியின் கவிதையைப் போல). ஆனால், இன்று கேளிச் சித்திரங்களை உருவாக்கும் பேரரசு போன்றோரின் அளவுக்குக் கூட இயக்குனர் மகேந்திரனின் பெயர் உச்சரிக்கப்படாமல் போனது, மிகப் பெரிய அவலம்.


மகேந்திரன் இயக்கிய திரைப்படங்கள்:
1) முள்ளும் மலரும்
2) உதிரிப் பூக்கள்
3) பூட்டாத பூட்டுக்கள்
4) ஜானி
5) நெஞ்சத்தைக் கிள்ளாதே
6) மெட்டி
7) நண்டு
8) கண்ணுக்கு மை எழுது
9) அழகியக் கண்ணே
10) ஊர் பஞ்சாயத்து
11) கை கொடுக்கும் கை
12) சாசனம்
13) அர்த்தம் (Teleplay)
14) காட்டுப் பூக்கள் (Teleplay)
மேலும் 26 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

லீலா மணிமேகலை அவர்களால் நடத்தப்பட்ட (இப்போது நின்றுவிட்டது) 'திரை' மாத இதழில் (ஜனவரி 2006), புதிய தலைமுறை தமிழ் சினிமா பற்றிய கேள்விக்கு இயக்குனர் மகேந்திரன் அளித்த பேட்டியின் சிறு பகுதி:

புதிய தலைமுறை தமிழ் சினிமா பத்தி உங்கள் கருத்து?
"இப்ப உள்ள இளைஞர்கள் சினிமாவில் வெற்றி பெறணும்னு நினைக்கிறாங்களே தவிர அதற்குரிய உரத்தை ஏற்றிக்கொள்ள மறுக்குறாங்க. இலக்கியம் படிக்கிறதில்லை. சமுகத்தை அவதனிக்கிறதில்லை. ஒரே ஒரு கேள்வி, காதலைத் தவிர நமக்குச் சொல்லறதுக்கு வேற ஒன்னும் இல்லையா? சர்வதேச அரங்கில் தமிழ்ப்படங்களைப் பார்ப்பவர்கள் தமிழர்களுக்கு ஐ லவ் யூ சொல்றதைத் தவிர வேறு பிரச்சினையே இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இரவில் நிர்வாணமாக இருப்பார்கள் கணவனும், மனைவியும், பகலில் மனைவி உடை மாத்தும்போது கணவன் வந்துட்டா அய்யய்யோ என்று பதறி கதவைச் சாத்துவாங்க. அது அழகு. வாழ்கையில் ஆழமான விஷயங்கள் இருக்கு. அதை விட்டுட்டு டூயட், குத்துப்பாட்டு என்று எடுப்பது சரியில்லை. கணவனும், மனைவியும் உடலுறவு வைத்துக் கொள்வதைக்கூட காட்சிக்குத் தேவைப்படும்போது அப்படியே காட்டுவதில் தவறில்லை. ஆனால் கையை வெட்டி, காலை வெட்டி, pelvic movements காட்டி, ஆபாசமாக நடனமாட விடுவது கோரம்.



கோவிலில் நிர்வாண சிலைகள் இருக்கு. ஆனா அதை ஏன் கோவிலில் வச்சாங்க. இவ்வளவுதாண்டா, பார்த்துகோங்க என்று கோவிலில் தெய்வங்களை நிர்வாணமாக்கியிருந்தங்க நம்ம முன்னோர்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள்களிலை. இங்கு கதை இல்லாமல் கூட படம் எடுக்கிறார்கள். ஆனால் தொப்புள் இல்லாமல் படம் எடுக்கிறார்களா? ஆண் லுங்கியைத் தூக்கிக் காட்டுகிறான். பெண் பாவாடையைத் தூக்கிக் காட்டுகிறாள். மானக்கேடு".

இயக்குனர் மகேந்திரனின் சாதனைகள் சொல்லில் அடங்காது. மனதுக்கு நெருக்கமானது. இளம் இயக்குனர்கள் யாராவது, ஏதாவது ஒரு பத்திரிக்கையில் 'தனக்கு பிடித்த படம் உதிரிப் பூக்கள்' என்று பேட்டி கொடுப்பதோடு மகேந்திரன் மறக்கப்படுக்கிறார். இயக்குனர் மகேந்திரனின் சாதனைக்கு நிகரான மரியாதையை நாம் வழங்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

Monday, October 20, 2008

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய்ப் போகும்!

அன்று:
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பொழுது, அரசியல்வாதிகள் பலராலும் கோமாளியாக சித்தரிக்கப்பட்டார். ஆனால் எந்த குரலுக்கும் நடுங்கி விடாத விஜயகாந்த் தொடர்ந்து தன்னுடைய குரலையும் உயர்த்திப் பேசினார்.

அரசியல் அனுபவம் வாய்ந்த கருணாநிதி, விஜயகாந்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்து வந்தார். விஜயகந்திட்கு பதில் தந்து அவரை பெரிய ஆளாக மாற்ற வேண்டாம் என்பதே கருணாநிதியின் நோக்கமாக இருந்தது.



இந்த நேரத்தில் தான் ஜெயலலிதா, விஜயகாந்தைப் பார்த்து 'குடிகாரன்' என்று சொல்ல, பதிலுக்கு விஜயகாந்தும் 'ஆமாம், நீங்க தான் ஊதிக் கொடுத்திங்க' என்று சொல்ல, அரசியல் நாடகத்தின் 'பன்ச்' பறக்க ஆரம்பித்தது. காலை, மாலை, வார, மாத இதழ்கள் எல்லாம் இந்த டீக்கடை சண்டையை புலனாய்வு செய்தன.


அடுத்து வந்த மாநிலங்களவை தேர்தலில் தே.மு.தி.க கணிசமான வாக்குகளைப் பெற, அரசியல் வாதிகள் பலரும் ஆடித்தான் போனார்கள். அதைத் தொடந்து உள்ளாட்சித் தேர்தலிலும் தே.மு.தி.க 27% வாக்குகள் பெற, விஜயகாந்தின் கோமாளி பிம்பம் களைய ஆரம்பித்தது. இந்த நேரத்தில் தான் தயாநிதி மாறனுடனான மனமுறிவிட்கு பிறகு சன் குழுமத்திலிருந்து இருந்து வெளியேறியது தி.மு.க. நுழைந்தது தே.மு.தி.க.

நேற்று:

18.10.08 சனிக்கிழமை தீவுத் திடலில் நடைபெற்ற தே.மு.தி.க. இளைஞரணி மாநாட்டில் பதினைந்து லட்சம் பேர் திரண்டனர். விஜயகாந்தும் கார சாரமாக வார்த்தைகளை அள்ளி வீசினார். குறிப்பாக குடும அரசியலைப் பற்றி பேசினார். (மனைவியையும், மைத்துனரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு முதலில் காமெடியாக, நேரம் ஆக ஆக இன்னும் காமெடியாக). சன் குழுமம் அதனை வரிந்து கட்டிக் கொண்டு ஒளிபரப்பியது.

இன்று:

பிரியாணி பொட்டலங்கள் கொடுக்காமலேயே பதினைந்து லட்சம் பேர் திரண்டதால் பொறுக்காத தி.மு.க ஆதரவு மாலை நாளிதழான எதிரொலி, 19.10.08 அன்று வெளியிட்ட செய்தியின் விபரம்:

"கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி கோட்டைக்கு வந்து விட முடியாது. அரசியல் பயணம் இதுவல்ல. சில ஜென்மங்களுக்கு சொன்னால் தெரியாது. பட்டால் தான் புரியும். விஜயகந்திட்கு போகப் போகத்தான் புரியும். இன்னும் அரசியல் சோதனைகள் அவருக்கு ஆரம்பிக்கவே இல்லை. எல்லாம் இனிமேல் தான் இருக்கிறது."

இதில் திருக்குறள் வேறு;

"உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பல

கற்றும் கல்லார் அறிவிலாதார்"

(நல்லவேளை திருவள்ளுவர் உயிரோடு இல்லை)


இந்த வார்த்தைகளின் நோக்கம் விஜயகந்திட்க்கு அறிவுரை தருவதல்ல; எச்சரிக்கையை முன் வைக்கிறது. எதிரொலி நாளிதழ் இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருக்க வேண்டாம்.

நாளை:

இதையெல்லாம் மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் ரசிப்பார்களா?

பின்குறிப்பு:

கட்சிகளும், தலைவர்களும் தீவிர கதியில் கேவலங்களாக மாறிக்கொண்டிருக்க, நாடு நாசமாய் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு கருப்பு, வெள்ளைத் திரைப்படத்தில் (பெயர் தெரியவில்லை) நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்கள் "இந்த நாடும் நாடு மக்களும் ஒரு நாள் நாசமாய்ப் போகும்" என்று நக்கலாகச் சொல்வார். இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் பி.எஸ்.வீரப்பாவின் வார்த்தைகள் நிஜமாகக் கூடும்.

Friday, October 17, 2008

முற்றுப்பெற்ற கவிதையும், முடிவில்லாத கோபங்களும்...

நாய்கள் யாவும்
நிலை குலைந்து ஓட
முடிந்த மட்டும்
சிறகடித்துப் பறக்கிறது
ஒரு பெட்டைக் கோழி

அதிர்ந்து அடங்குகிறது
பாதசாரியின் மனம்
சிறகொடிந்து விழுகின்றன
வண்ணத்துப் பூச்சிகள்

ஆனாலும்
கானலை விரட்டியபடி செல்கின்றன
நெடுஞ்சாலை வாகனங்கள்!
.................................
................................
இலைகளின்
......................................
மண்டியிட விருப்பமில்லாததால்
அவஸ்தைகள் நீள்கிறது
ஆனாலும்
மண்டியிட முடியாது
என்னால்!
......................................
இனி
அப்பாவின் தயவு தேவையில்லை
வேலை கிடைத்து
அடிமை சாசனம் எழுதுகிறேன்
பிழைத்துக் கொள்வேன்!

Sunday, October 12, 2008

நடிகர், நடிகைகள் தேவை!

என்னுடைய கல்லூரி நண்பன் விஜய்வரதராஜன் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்க உள்ளான். சிறப்பான கதை அம்சத்துடன் உருவாகும் இத் திரைப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருகிறது. டிஜிட்டல் முறையில் தயாராகும் இத் திரைப்படம், இந்தியாவிலேயே முதல் முறையாக "DEPTH OF FIELD ADAPTER" எனும் தொழில் நுட்பத்தில் உருவாகும் முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிப்பில் ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள் சமீபத்தில் எடுத்த புகைப்படத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

vijayvaratharajan
Phone: 9840855156

E-mail:
vijayvedha01@yahoo.co.in

Thursday, October 9, 2008

தேவதைகள் உலாவும் வீதி

புளிய மரத்தின் கிளைகளில் தலைகீழாகத் தொங்கியபடி அலறும் பேய்களும், என் மாரில் கால் வைத்து கூட்டம் கூட்டமாக ஓடும் டைனோசர்களுமாக என் கனவில் வந்து கொண்டிருந்த காலத்தில், என் கனவுலக நாடகத்திட்க்கு தேவதைகளை அனுப்பி வைத்தவள், அவள். (இங்கே 'அவள்' என்ற வார்த்தை இப்போதைக்கு போதுமானது)

மிகச் சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு மழை நாளில் அவள் என் முன் தோன்றினாள். அப்போது அவள் என்னிடம் ஏதேதோ சொன்னாள்.அவள் உதடு குவியும் புள்ளியில் லயித்துக் கிடந்ததால் எதுவும் புரியவில்லை எனக்கு. அன்றிலிருந்து ஒவொரு நாளும் என் கனவுகளை அலங்கரிக்க தேவதைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறாள். (அவர்கள் பாரதிராஜா படங்களில் வரும் தேவதைகளைப் போல அவலட்சணமாக இல்லாமல், அழகாகவே இருக்கிறார்கள்)

எப்போதும் என்னைச் சுற்றிக் கொண்டிருந்த தேவதைகள் இரவில் தூக்கத்தையும், பகலில் நிஜங்களையும் தின்று கனவுகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். அவளின் சார்பாக சில பரிசுகளையும் வழங்கினார்கள். அந்த பரிசுகள் யாவும் பரிசளித்தவளையே நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன.
தேவதை தந்த பரிசுகள் :
. தூக்கம் மறந்த விழிகள்
. நிலை கொள்ளாத மனது
. பசிகளை அறியாத வயிறு

. வருடிய படியே யோசிக்கத் தாடி
. சிதறிய நட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கும் பொறுமை

. இரவின் நீளத்தை அளந்து பார்க்கும் திறமை
. அம்மாவிடம் பரிந்து பேச ஒரு வார்த்தை
. எப்போதும் பூக்கும் ஒரு புன்னகை
. உலகை வெல்லும் நம்பிக்கை
. அவள் வந்து போன மழை நாளின் ஈரம்
. இளைப்பாற விருட்சம்; அதற்க்கான விதைகள்
. கனவுகளைக் கட்டிப்போ சில கவிதைகள்...















அவள் வந்து போன
ஒரு மழை நாளில்
புட்கள் பணிந்தன
இலைகள் சிலிர்த்தன
மண் கரைந்தது
கூடவே நானும்...
. . . . . . . . . .

எனக்கென்று இருந்த
ஒரு சிலவும்
இல்லாமல் போனது
நீ போனதும்...
. . . . . . . . . .

இருப்பதற்க்கும்,
இறப்பதற்கும்

அர்த்தம் வேண்டும்
நீ வேண்டும்!
. . . . . . . . . .

எப்போதும் போல்
இருந்தேன்

நான்
நீ வந்தாய்

நான்
இல்லாமல் போனேன்.
. . . . . . . . . . .


மனிதனுக்கும், விலங்கிட்க்குமான

இடைவெளியை

அதிகப்படுத்திக் கொண்டிருந்தாள்
அவள்
அனுபவித்துக் கொண்டிருந்தது
காதல் .
. . . . . . . . . . .


முத்தங்கள் கொடு

எனக்கு உணர்வுகள் போதும்
உதடுகளை நீயே வைத்துக்கொள்.
. . . . . . . . . . .


தூக்கம் வேண்டாம்

நிஜங்களைத் தின்று
கனவுகளை வளர்க்கிறது
அது.

. . . . . . . . . . .


பிரிவு...

நீ வந்தால் மரிக்கும்.

. . . . . . . . . . .

(நீங்கள் இதை கவிதை என்றும் சொல்லிக் கொள்ளலாம். கவிதை இல்லை என்றும் சொல்லிக் கொள்ளலாம். கவிதையென்று சொல்லிக் கொள்வதால் நான் சந்தோசப்படுகிறேன். அதனால் கவிதையென்றும் சொல்லிக் கொள்கிறேன்.)

கனவுகளையும், தேவதைகளையும் விலக்கி வைத்து விட்டு, தேவதைகளின் தேவதைகளை தொடர்ந்து தேடிக் கொண்டிருந்த ஒரு பொழுதில், அவள் அன்று சொல்லி புரியாமல் போன வார்த்தைகளுக்கு தேவதைகள் கூறிய விளக்கம்...

"உன் கனவுகளை அலங்கரிக்க தேவதைகளை அனுப்பியுள்ளேன். கனவுகளை இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நிஜங்களை மட்டும் நீயே பார்த்துக்கொள். நீ என்னை பரிசாகக் கேட்காதே. என்னை ஒரு போதும் உனக்கு பரிசளிக்க முடியாது. என்னைப் பற்றி எழுதிச் சாக, உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கூழ் முட்டைகளை அடைகாப்பதால் எந்த பயனும் இல்லை. நினைவில் கொள். என்னை மற!"


நிலை கொள்ளாமல் ஒரு மவுனம் நீள்கிறது...



Saturday, October 4, 2008

திருடி எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள்!

தொடர்ந்து என் எழுத்துக்களை உங்கள் விமர்சனத்திற்கு திங்க கொடுப்பதிலோ, அதற்க்கு பதில் சொல்லிக் கொண்டும் என் காலத்தை வீணடிக்க விரும்பாத காரணத்தால் இப் பகுதியை நீக்குகிறேன்.