Monday, June 29, 2009

சாருநிவேதிதாவும், தெருச் சண்டையும்!

நான் கடந்த ஐந்து வருடங்களாக சாருவின் எழுத்துக்களை தொடந்து படித்து வருகிறேன். 'உயிர்மை' இலக்கிய இதழின் வாயிலாகத்தான் முதலில் நான் சாருவை அறிந்தேன். முதன் முறையாக அவரது கட்டுரைகளை படித்த பொழுது எல்லையற்ற பரவசம் அடைந்தேன். அரேபிய இலக்கியங்களை தொடந்து அறிமுகப்படுத்திய விதம் மிகவும் சிறந்த முயற்சியாகும்.

ஆனால், சமீப காலமாக உயிர்மையின் பக்கங்களை a.r.ரகுமானுக்கு பாராட்டுப் பத்திரம் எழுதுவதிலும், இளையராஜாவை திட்டித் தீர்ப்பதிலுமே ஓட்டிக்கொண்டிருக்கிறார். சாருவின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதன் மூலமாக அவருடைய உளறல்கள் எனக்கு புரிய ஆரம்பித்தது.

அவரது உளறல்களுக்கு உதாரணமாக, 'நான் கடவுள்' திரைப்படத்தின் விமர்சனக் கட்டுரையில் "எனக்கு பிடிக்கவே பிடிக்காத இளையராஜாவும், ஜெயமோகனும் இந்த படத்தில் வேலை பார்த்தாலே, நான் அந்த திரைப் படத்தைப் பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டு கட்டுரையைப் ஆரம்பிக்கிறார். 'விமர்சனம்' என்பது நடுநிலையான கருத்துக்களை வாசகர்கள் முன்னிலையில் வைப்பதாகும். இந்த சின்ன நடைமுறை கூட தெரியாதவரா சாருநிவேதிதா?.. அடுத்ததாக 'பசங்க' திரைப்பட விமர்சனம்; உலக அபத்தம்! நம்ம ஊரில் சிறந்த படமாக 'பசங்க' படம் அமைந்தால் பாராட்ட வேண்டியதுதான். அதற்க்காக "childran of heaven" எனும் உலகின் ஒப்பற்ற திரைப்படத்தைவிட 'பசங்க' படம் பல மடங்கு உயர்ந்தது' எனும் கோமாளித்தனமான (கேவலமான) கட்டுரையைக் குறிப்பிடலாம்.

தன்னுடைய சரக்கு(அறிவு) காலியாகிவிட்டதை வாசகன் அறிந்து கொள்ளக்கூடாது என்பதை மிகுந்த கவனத்தில் கொண்டு, உளறல்களையும், அபத்தங்களையும் கிடைத்த பத்திரிக்கைகளில் எல்லாம் தொடர்ந்து எழுதி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சாரு தன் அபத்தங்களை குமுதத்தில் 'கோணல் பக்கங்கள்' என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து பாதியில் நின்று போனது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதன் விளைவாக, மற்ற எழுத்தாளர்களை திட்டி எழுதி பெரிய ஆளாக ஆகிவிடலாம் என்ற நினைப்பும் இப்போது தலை தூக்கி வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு எஸ்.ராமகிருஷ்ணனின் "உறுபசி" குறுநாவலை 'வெறும் காட்சிகள் மட்டுமே உள்ளது. நாவலை காணவில்லை' என்றும்; "நெடுங்குருதி" நாவலை 'தலையணை அளவிற்க்கு உள்ளதே தவிர வேறொன்றும் இல்லை' எனக் குறிப்பிட்டார். மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு ராமகிருஷ்ணனின் நாவல்களையும், சாருவின் 'ஜீரோ டிகிரி மற்றும் ராசலீலா' நாவல்களையும் படித்துப் பாருங்கள். சாரு, ராமகிருஷ்ணனின் நாவல்களை விமர்சிக்கும் தகுதி அற்றவர் என்பது புரியும்.

மேலும், ஜெயமோகனை தனது தளத்தில் மிகவும் தரக்குறைவாக குறிப்பிட்டு, ஒரு தெருச் சண்டைக்கு தயாராகி வருகிறார் சாரு.
http://www.charuonline.com/June2009/jeya.html
உலக இலக்கியங்களை உயர்வாகக் குறிப்பிடும் நீங்கள் இப்படி தெருச் சண்டைக்கு முனைப்பாக இருந்தால் எப்போது நம் தமிழ் இலக்கியம் உலக அளவில் பேசப்படும். உங்களின் தெருச் சண்டையைக் கைவிடுங்கள். சாளரங்களில் இரைச்சல்களை எழுப்பாதீர்கள்!

Sunday, June 7, 2009

தமிழகத்தில் திறந்தவெளி விபச்சாரம்!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அலுவல் காரணமாக நள்ளிரவு 1:30 மணியளவில் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு, நண்பனுடன் காரில் பயணித்தேன். பயண அழுப்பு தெரியாமல் இருக்க இருவரும் பேசிக் கொண்டே சென்றுகொண்டிருந்தோம்.

பின்னிரவு வேளையில் எங்களது வாகனம் திண்டிவனத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது ஊரைத் தாண்டிய ஒரு வெளியில் டார்ச் லைட் வெளிச்சம் எங்கள் வாகனத்தின் மீது விழுந்தது. நாங்கள் வந்து கொண்டிருந்தவேகத்தில் வெளிச்சம் வந்த இடத்தைக் கடந்து சென்றோம். மீண்டும் சிறிது நேரம் கழித்து அதே போல எங்கள் வாகனத்தை நோக்கி டார்ச் லைட்டின் வெளிச்சம் வரவே, நண்பன் வாகனத்தின் வேகத்தைக் குறைத்து வெளிச்சம் வரும் திசையை நெருங்கினான். அப்போது அங்கே 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் எங்களை நெருங்கி வந்து என்னையும் என் நண்பனையும் நோட்டமிட்டாள். அப்போது அவள் எங்களை நோக்கி "வரிங்களா?" என்றாள். ஆம்; அவள் ஒரு விபச்சாரி! ஒருநிமிடம் அதிர்ச்சி தாளாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, 'வேண்டாம்' என தலையசைத்தவாறே வாகனத்தை அங்கிருந்து நகர்த்தினான் நண்பன்.

தொடர்ந்து நாங்கள் செல்லச் செல்ல உளுந்தூர்பேட்டை எல்லை முடிவு வரையிலும் டார்ச் லைட்டின் வெளிச்சம் எங்களையும், எங்களோடு பயணிக்கும் கார், மற்றும் லாரிகளை நோக்கியும் அந்த ஒளி நீண்டு கொண்டே வந்தது. அன்றைய பயணத்தில் நாங்கள் கண்ட பெண்கள் 13 வயதிலிருந்து 45 வயது மதிக்கதக்கவர்களாக இருந்தார்கள்.

என்னுடைய நண்பன் ஒரு டிரைவர் என்பதாலும், இது போல பல வெளிச்சங்களை கடந்து சென்றவன் என்பதாலும், இந்த நிகழ்வை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எங்கள் பயணம் முடியும் வரையிலும் இது போல பல கதைகளை சொல்லிக் கொண்டேவந்தான். அன்றைய இரவு, என்னுள் மிகுந்த பிசுபிசுப்புடனும், ஆழ்ந்த துயரத்தோடும் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

நண்பன் சொன்ன பல சம்பவங்களில் வரும் வேசைகள் 50க்கும், 100க்கும் படுக்கையை பகிர்ந்து கொள்பவர்களாகவும், கணவர்களால் கைவிடப்பட்டவர்களும், சிறுமிகளும், விதவைகளும், குறைந்த பட்ச கூலி வேலை கூட கிடைக்காதவர்களும் தான். இதில் பாலியல் நோய்களால் பீடிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

இந்த நிகழ்வுகள் வெறும் சம்பவங்கள் மட்டுமல்ல... மிகப் பெரிய அரசியல்! கடந்த ஆட்சியில் 10க்கும் மேற்பட்ட மத்திய மந்திரிகள் தமிழகத்தில் இருந்தும் அந்த பகுதியில் எந்த ஒரு தொழில் சாலைகளும் துவக்கப்படவில்லை. எல்லா தொழில் வளங்களும் சென்னையில் தான் குவிக்கப்படுக்கிறது. சென்னையைத் தவிர்த்த மற்ற தமிழகத்தின் பல பகுதிகளும் வெகுவாக புறக்கணிக்கப்படுகின்றன. இம்முறையும் தமிழகத்திலிருந்து 9 மத்திய அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

கடத்த முறையைப் போல இம்முறையும் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப் பட்டால் கூடிய விரைவில் தமிழகம் ஒரு திறந்தவெளி விபச்சார விடுதியாக மாறிவிடும். எல்லா தொழில் வளங்களும் சென்னையிலேயே அமையும் பட்சத்தில், ஒட்டு மொத்த தமிழ் மக்களும் சென்னைக்கு படையெடுக்க வேண்டி வரும். அப்புறம் எழுத்தாளர் கோணங்கி சொன்னதைப் போல " ஒருநாள் வெளி ஊரிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, அவர்கள் பெய்யும் மூத்திரத்தில் சென்னை முழ்கிப் போகப்போகிறது".