Friday, November 27, 2009

கொடுங் கோடையில்!


தார் ஒழுகும் சாலையில்
பாதத்தின் ரேகைகள்...

வெயிலைக் கிழித்து
கிளை தேடும் பறவைகள்.
கிறங்கித் திரியும்
கால் நடைகள்.

இலைகள் உதிர்த்து
மெளனித்திருக்கும்
வேம்பு.
சில் வண்டுகளற்றுப் போன
நகர வீதியில்
தியானத்தை
உடைக்கும் பேருந்து.

காற்று இல்லாத
கட்டிடக் காடுகளுக்கிடையே
கனவுகள் நிரம்பிய
உறக்கத்தில்
எவ்வளவு ஓடியும்
கண்களன்றி
கைகளால்
பிடிக்க முடிந்ததில்லை
கானலை!

Saturday, November 21, 2009

குறும்பட இயக்குனர்கள் கவனத்திற்க்கு....


குறும்படம் எடுப்பது ஒரு இயக்கமாகவே மாறிவரும் இன்றைய சூழலில், இயக்குனர்களுக்கு அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது பெரிய சவாலாகவே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாற்று ஊடகங்களை முன்னிறுத்தும் எங்கள் "மந்திரச்சிமிழ்" இதழ் தற்போது குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் பற்றி பெருவாரியான மக்கள் அறியும் பொருட்டும், பரந்த அளவிலான பார்வையாளர்களை உருவாக்கவும் மிகுந்த ஆர்வமாக உள்ளோம். ஆகவே நண்பர்களே உங்களின் படைப்புகளை CD அல்லது DVD-யாகவும் அனுப்பலாம். அனுப்பும் பொழுது, முகவரி, அலைப்பேசி அல்லது தொலைப்பேசி எண், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரம், இயக்குனரின் முகவரி ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். அடுத்த இதழ் ஜனவரியில் வெளியாகும் என்பதால் டிசம்பர் 10 தேதிக்குள் அனுப்பிவையுங்கள். சிறந்த விமர்சனத்துடன் உங்கள் படைப்புகள் வெளியாகும்.


படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:
பதிப்பாசிரியர்
க. செண்பகநாதன்,
24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.
கே. கே. நகர்.
சென்னை: 600078.
செல் : 9894931312



மிக்க அன்புடன்,
த.கிருஷ்ணமூர்த்தி (உதவி ஆசிரியர்)


"மந்திரச்சிமிழ்" இதழ் பற்றிய விபரங்களுக்கு....
http://starmakerstudio.blogspot.com/2009/11/blog-post_17.html

Tuesday, November 17, 2009

மந்திரச்சிமிழ்

நண்பர்கள் ஒன்றிணைந்து தரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சிறந்ததொரு
சிற்றிதழை (மந்திரச்சிமிழ்) உருவாக்கி உள்ளோம். எக்காரணம் கொண்டும் எழுத்தின் தரம் குறைந்து விடக் கூடாது என்ற காரணத்தால் காலாண்டிதழாக வெளி வருகிறது. நுண் அரசியல், நுண் இலக்கியம் மற்றும் நுண் சினிமா என ஆழ்ந்த பதிவுகளைககொண்டது. தங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பி தங்களின் ஆதரவைதரும் படியும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதழ் தேவைப் படுவோர் அணுக வேண்டிய முகவரி.

க. செண்பகநாதன்,
24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.
கே. கே. நகர்.
சென்னை: 600078.
செல் : 9894931312

ஆசிரியர் குழு:

பதிப்பாசிரியர்
க.செண்பகநாதன்
ஆசிரியர்
செல்வ புவியரசன்
உதவி ஆசிரியர்
கிருஷ்ணமூர்த்தி
ஆலோசகர்
சுமா ஜெயராம்



முன்னுரை:
தமிழ்ச்சூழலில் சிறுபத்திரிக்கைகளுக்கான வெளி என்பது தீர்க்கமற்றதாய் இருந்து வருகிறது. காலத்திற்கு ஏற்றதான வெளிப்பாடு என்பது அறவே இல்லை. இத்தகைய நிலையில் தான் இந்த இதழை தொடங்க வேண்டியுள்ளது. அதே போல் இதழ் முழுவதும் நான் வியாபித்திருக்கும் நிலையும் துரதிருஷ்டவசமாக ஏற்பட்டுள்ளது. உரிய படைப்புகளுக்காக 4 மாதங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு நானே சில கட்டுரைகளை எழுதினேன். இத்தகைய சூழலில் உயரிய படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்களுக்கான பஞ்சம் தமிழில் அருகி வருவதை கூர்ந்து கவனித்து வரும் நான் நன்றாகவே உணர்ந்துள்ளேன். சிறு பத்திரிக்கைகளுக்கென்று ஓர் அரசியல் உண்டு. அந்த அரசியல்தான் எழுத்தின் போக்கை எதிர்காலத்திற்கு வித்திடுவது. புறவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அதனால் அகம் சார்ந்து ஏற்படும் விளைவுகள், உலகமயமாதல் குறித்த சந்தேகங்கள், நியாயப்பாடுகள். இன்றைய பொருளாதார சிக்கல்கள், மொழியியல் ஆகியவை குறித்து வரும் இதழ்களில் விரிவாக அலசி ஆராயப்படும். உலகளாவிய படைப்பாக்கம், அரசியல் மற்றும் ஊடகங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்தும், கடந்த மற்றும் நிகழ்கால சிந்தனைப் போக்குகள் குறித்தும் உரிய எழுத்தாக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த இதழை வாசகர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதன் சாதக பாதகங்களை உரிய விமர்சனங்களாக ஒப்படையுங்கள். ஆனால் செம்மையான படைப்புகள் மற்றும் உருப்படியான கட்டுரைகள் மட்டுமே இதழில் பிரசுரம் செய்யப்படும் என்பதை உறுதியுடன் கூற விரும்புகிறேன். மந்திரச்சிமிழ் இதழில் நவநவீன சிந்தனைகள் , மாற்று மற்றும் நுண்ணரசியல், மாற்று ஊடகம்(உலகளாவிய), நேர்கோடற்ற படைப்பாக்கம் ஆகியவையே முதன்மையாக கொள்ளப்படும் என்பதனையும் தெளிவாக்க விரும்புகிறேன். காலாவதியான பிம்பங்களுக்கும், பெரும் கதையாடல்களுக்கும் இங்கே சிறிதும் இடமில்லை என்பதை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். படைப்புகள் மற்றும் கட்டுரைகள் கிடைக்கப்பெறாததற்கு இதுவும் ஒரு காரணமே. அப்படி ஒரு நிலை தொடர்ந்து ஏற்பட்டால், அதனால் எக்காரணத்தைக் கொண்டும் இதழ் நிறுத்தப்பட மாட்டாது. இதழின் அரசியலைக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் கொண்டோ அல்லது நானோ இதழை நிரப்புவோம் என்று கூறிக் கொள்கிறேன். சமகால பிரச்சானைகள் விருப்புவெறுப்பின்றி பிரசுரிக்கப்படும் என்பதையும் கூற விரும்புகிறேன்.

- பதிப்பாசிரியர்


இதழின் உள்ளடக்கம்

பிராந்தியவாதம்: தேசியத்தின் இரட்டைமுகம்-
செல்வ புவியரசன் 4

உலகமயமாதலும் அதன் இயலாமையும்-
க.செண்பகநாதன் 9

வெண்ணிறம் கொண்ட கரும்பறவை-
ஆல்பெரட் டி முஸோட்(தமிழில்:க. செண்பகநாதன் 13

ஷியாம் பெனகல் - மாற்று சினிமாவுக்கான இந்திய முகம்-
க. செண்பகநாதன் 30

பருவ காலங்களுடன் ஊடாடும் வாழ்வின் சரிதம்-
க. செண்பகநாதன் 44

பின்காலனிய நாடகங்கள்:
ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கன்டயரை முன்வைத்து -
தமிழச்சி தங்க பாண்டியன் 50

திருச்சாரணத்து மலைக் கோயில் -
ப. சோழநாடன் 55

Sunday, November 15, 2009

தசாவதாரம் கமலும், சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும்...


தசாவதாரம் படத்தை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படத்தில் வரும் flash back காட்சிகள் ஆதாவது 12-ஆம் நூற்றாண்டு காட்சிகள்; வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. பெருமாள் இருந்த இடத்தில் சோழ மன்னன் சிவனின் திருவுருவை நிறுவ முயற்சிப்பார். பராகிரமசாலியான நம்பி (கமலஹாசன்) தனது புஜ வலிமையால் சோழ மன்னனின் படை வீரர்களை அடித்து துவம்சம் செய்துவிடுவார்.

இந்த படத்தை பார்த்ததிலிருந்தே சிதம்பரம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.அது கடந்த மாதம் தான் நிறைவேறியது.

முந்தைய நாள் இரவே சிதம்பரத்தில் தங்கிவிட்டு விடியற் காலையில் கோவிலுக்குள் நுழைந்தேன். பொதுவாகவே வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் மனது பின்னோக்கி செல்லவது இயல்பானதாகி விடுகிறது.அதுவும் என்னை மாதிரி கனவுலக வாசிகளுக்கு சொல்லவே வேண்டாம். குலோத்துங்க மன்னனின் யானை நிலம் அதிர நடந்து சென்றதும் , படை வீரர்கள் அணிவகுத்து வந்த குதிரைகளின் குளம்படி ஓசைகளும், தீட்சிதர்கள் முணுமுணுத்த மந்திரங்களும் என் காதுகளில் ரிங்காரமிட்டபடியிருந்தது. "லொள்" ஒரு நாய் குலைத்த போது தான் நிகழ் காலத்திற்க்கு வந்தேன். அப்போதுதான் என்னைக் கடந்து இரண்டு நாய்கள் கடந்து ஓடின.

மற்ற கோவில்களைக் காட்டிலும் சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டிருந்தது. நடராஜர் சிலைக்கு காலை ஏழு மணியளவில் பூஜை வெகு சிறப்பாக நடந்தது. அக்காலத்திலேயே மக்கள் கலைகளுக்கு உரிய மரியாதையை அளித்து வந்தது அவர்கள் வாழ்ந்த வளமான வாழ்வின் சான்று என்று தான் சொல்ல வேண்டும்.

அங்குள்ள தீட்சிதருடன் வரலாற்று நிகழ்வு பற்றியும், தற்போதைய அரசியல் நிகழ்வு பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அந்த தீட்சிதர் பார்பதற்க்கு மிகவும் மெலிந்தவராகவும், கேட்ட கேள்விக்கு மட்டுமே அமைதியாக பதில் சொல்பவராகவுமே இருந்தார்.
அப்போது மீண்டும் தசாவதாரத்தின் காட்சிகள் மீண்டும் ஞாபகத்திற்க்கு வந்தது.

ஆளவந்தானின் இரண்டாம் பாகம் போல் எதிரிகளை துவம்சம் கமலஹாசனின் உடலையும், அங்கிருந்த தீட்சிதர்களையும் ஒப்பிட்டு பார்த்த போது சிரிப்பு தான் வந்தது. 12-ஆம் நூற்றாண்டிலேயே தீட்சிதர்கள் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாக காட்டியது படத்தின் சிறந்த காமடி காட்சிகளில் ஓன்று. கடவுளின் பெயரால் விரதங்கள் மேற்கொண்டு, நாமம் பாடும் பக்கதன் 'அர்னால்டின்' தம்பியைப் போலவா இருப்பான். ஆனால் நான் பார்த்த தீட்சிதர்கள், ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டினான் கூட "same to you" என்று சொல்பவராகத்தான் இருந்தார்கள்.

உண்மையிலேயே வரலாறு என்பது "வென்றவர்கள் தங்களுக்கு தாமே வரைந்து கொள்ளும் வரைபடம். நாமும் அதைத்தான் பின்பற்ற வேண்டும். தோற்பவர்களுக்கு அதில் இடம் கிடையாது. வென்றவனின் பொய்களும், தோற்றவனின் உண்மையும் நிரந்தர மவுனம் கொள்ளுமிடம்." என்று மனதிற்க்குள் ஏதேதோ தோன்ற மீண்டும் அந்த நாய்கள் குலைத்துக் கொண்டே என்னைக் கடந்து சென்றன. பொதுவாக வரலாற்றைப் பற்றிய அக்கறை, கவலையெல்லாம் மனிதனுக்குத்தான். நாய்களுக்கு இல்லை.

Wednesday, November 11, 2009

இந்தியா ஒரு poor country-இல்லையா?


சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள குரூஸ் கப்பலில் photographer வேலைக்காக நானும் எனது நண்பர் சரவணனும் தி.நகரில் உள்ள கிளை அலுவலகத்திட்க்குச் சென்றோம். அந்த நிறுவனத்தின் மேலாளர் நாங்கள் எடுத்த புகைப் படங்களைப் பார்த்து விட்டு "உங்கள் புகைப்படங்கள் இந்தியாவை, ஒரு poor country-ன்னு சொல்லற மாதிரி இருக்கு" என்று நிராகரித்து விட்டார்.

இந்த நிகழ்வை மறந்து போன ஒரு நாளில் பாண்டிச்சேரி, சிதம்பரம், தரங்கம்பாடி, காரைக்கால், திருநள்ளார், நாகூர், வேளாங்கண்ணி, தஞ்சை மற்றும் மதுரை என்று நானும் நண்பரும் ஊர் சுற்றக் கிளம்பியிருந்தோம். வழக்கம் போல் இல்லாமல் இந்தமுறை கோவில், கோவிலாக சுற்றிக்கொண்டிருந்தோம். பாண்டிச்சேரியைத் தவிர.

இந்த ஊர் சுற்றலின் போது எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவானது. ஓன்று நம்முடைய தெய்வ நம்பிக்கைகளைப் பற்றியது. இதனை இங்கே பேச இயலாது. சர்ச்சைக்குரியதாக மாறிவிடும்.

இன்னொன்று, பல்வேறு வகையான நில அமைப்புக்களை சார்ந்து வாழும் மக்க்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றியது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லச் செல்ல அப்பகுதி மக்களின் நம்பிக்கைகள், வாழும் முறை, பழக்க வழக்கங்கள், வட்டார மொழி என்று மாற்றங்களின் தொடர்ச்சியாக நீண்டு கொண்டிருந்தது.

சென்ற இடங்களில் எல்லாம் மாறாமல் இருந்தது குடிநீர் பிரச்சனைகளும், நீக்கமற நிறைத்திருக்கும் பிச்சைக்காரர்களும் தான்.

எங்கு பார்த்தாலும் சுகாதாரமற்ற குடிநீரே கிடைத்தது. இது ஒரு விதமான வாழ்வாதார பிரச்சனை என்றால் இனொரு புறம் பிச்சைக்காரர்கள். கோவில்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் அதனை இடங்களிலும் நோயால் பீடிக்கப்பட்டவர்களும், வயோதிகர்களும், உழைக்க மறந்தவர்களும் பிச்சைக்காரர்களாக சுற்றிதிரிந்தனர்.

வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே உள்ள கேசட் கடைகளில் பக்தி பாடல்களும், நமீதா க்ளாமர் பாடல்களும் ஒரே கடைகளில் சூடு பறக்க விற்பனையானது. தஞ்சை பெரிய கோவிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள், வெளிநாட்டினரை விரட்டி விரட்டி பிச்சை எடுத்தனர். இதற்க்கு ஒரு படி மேலே இருந்தது நாகூர் தர்ஹா. மசூதி முழுக்க மன நோயாளிகள் நிரம்பி வழிந்தனர்.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்க்கும் ஒரு சமூகத்தில், மூத்திரம் பெய்ய இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் குடிநீர் 15 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

இன்றைய சூழலில் "இந்தியா முழுக்க 4 மில்லியன் மக்கள் ரத்தக் கொதிப்பு நோயாலும், 10 மில்லியன் மக்கள் இதய நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

'உலகம் முழுவதிலும் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் வாழக்கூடிய மக்களில் 80% பேர் இந்தியர்கள்' என ஐ.நா அறிக்கை விடுகிறது. தினமும் 4 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது. (இந்த அழகில் வல்லரசு கனவு வேறு.)

இப்படியாக வயிற்றுப்பாட்டிட்க்கே அலையும் பெருந்திரளான மக்கள் கூட்டத்தையும், குஷ்பூ, நமீதாவின் பெருத்த ......களைக் கொண்டாடி கோவில் எழுப்பியும், எழுப்ப முயற்சி செய்துகொண்டிருக்கும் சிந்தனை வறட்சி கொண்டவர்களையும்; வறுமையும், ரோகமும், ஊழலும், பொய்யும், புரட்டும், கொலையும், கற்பழிப்பும் தேசிய அடையாளமாகக் கொண்ட ஒரு நாடு 'poor country' இல்லையா? எனக்கு அப்படிதான் தோன்றுகிறது. உங்களுக்கு?

ரகசியங்கள்!



இலைகளின் நிழல்
இரவில்
அழிந்து போவதில்லை
மாறாக அவை
நீந்தித் திரிகின்றன
இருளில் மூழ்கி
இரவின் தீராத ரகசியங்களை
பேசிய படி...