Friday, February 20, 2009

தமிழ் சினிமாவில் ரஜினியும்,சிம்புவும் மட்டும் தான் உப்புப் போட்டு சாப்பிடுகிறார்களா?

எம்.ஜி.ஆர்:
தம்பி கணேசா, இப்ப உள்ள நண்டு சுண்டு நடிகனுக்கெல்லாம் உன்னோட நடிப்ப கொஞ்சமாவது சொல்லிக் கொடுத்துட்டுப் போயிருக்கக் கூடாதா? நானும் நடிக்கிறேன் பாருன்னு... ஐயோ அம்மா...

ஏட்டு(அழுதபடியே):
சரியா சொன்னிங்க வாத்தியாரே... நேத்தெல்லாம் ஒரு படம் பாத்தேன்... அதுல்ல நடிச்சவன் மட்டும் என் கையில சிக்குனா... அம்மனக்கட்டயா ரோட்டல போட்டு பொச்சுல அடிச்சுக் கொண்ருவேன்.
-நான் கடவுள் பட வசனம்.

'படிக்காதவன்' படம் பார்க்கும் போது எனக்கும் அதே உணர்வு தான் வந்தது.உங்களுக்கும் வந்திருக்கும்.

நான் கடவுள் திரைப்படத்தை மதுரையில்,காரைக்குடியில்,சென்னையில் 2 முறையென்று மொத்தம் 4 முறை பார்த்தேன். படத்தை ஒவொரு முறை பார்க்கும் போதும் திரை அரங்கில் பெண்கள் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. படிக்காதவன்,வில்லு,சிலம்பாட்டம் மாதிரியான ஆகப் பாடாவதி படங்களுக்கெல்லாம் பெண்கள் கூட்டம் குவியும் போது, நான் கடவுள் மாதிரியான மாற்று முயற்சிகளுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காதது மிகுந்த வேதனையாயிருக்கிறது.

நான் கடவுள் பற்றி ரஜினி கூறுகையில்:
'இந்த படத்தைப் பார்த்த பிறகு, நானும் தமிழ் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்க்காக பெருமைப்படுகிறேன்'.

சிம்பு கூறுகையில்:
பாலா மாதிரி கலைஞன் தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும். தயவு பண்ணி கலைஞனைக் கொண்டாடுங்க.இங்க இருக்கிற யாரையாவது, 'நான் கடவுள்' படத்தின் நாலு ஷாட் கம்போஸ் பண்ணச் சொல்லுங்க. பார்கிறேன்.

தமிழ் சினிமாவில் ரஜினியும்,சிம்புவும் மட்டும் தான் உப்புப் போட்டு சாப்பிடுகிறார்களா? ஏன் சகக் கலைஞனை பாராட்ட யாருக்கும் மானம் வரவில்லை?

'75 வருடங்களாக, 6100 திரைப்படங்களில் (குறிப்பிட்ட சில படங்களைத் தவிர்த்து) நீங்கள் கடை பிடித்து வந்த மட்டரகமான மரபையெல்லாம், பாலா தனது படைப்புச் சுத்தியலால் அடித்து நொறுக்கி விட்டார்' என்ற கோபமா?

'மனநோயாளி(சேது), சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வந்தவன்(நந்தா), வெட்டியான், லங்கா கட்டை உருட்டுபவன், கஞ்சா விற்பவள்(பிதாமகன்), பிணம் தின்னும் அகோரி சாமியார்கள், பிச்சைக் காரர்கள்(நான் கடவுள்)' என்று தமிழ் சினிமாவின் எல்லைகளை பெரும் அதிர்வுடன் கடந்து சென்றவர் பாலா. மறுப்பதற்கில்லை.

பத்திரிக்கையாளர் ஞானி, நான் கடவுளை 'அராஜகமான படம்' என்று குறிப்பிடுக்கிறார். 'ஈரான்' போன்ற மூன்றாம் உலக நாடுகளின் இயக்குனர்கள் மொசான் மாக்மல்பப், மஜீத் மஜிதி ஆகியோர், விளிம்பு நிலை மக்களின் துயர வாழ்க்கையைப் படமாக்கி உலக அளவில் கவனம் பெற்றார்கள். அவர்களையெல்லாம் சிலாகித்துவிட்டு, நம்மவர் பாலா விளிம்பு நிலை மனிதர்களைக் காட்டினால், அராஜகமா? ஞானி அவர்களே தயவு செய்து உளருவதை நிறுத்துங்கள்!

நான் கடவுள் படத்தின் வசனம் ஓன்று...
வயோதிகர்: அழுகாத ராமப்பா. எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பாத்துக்கிட்டு இருப்பான்.

ராமப்பா: பாத்துப் புழுதுறான்.. தேவுடியா மகெ...நம்மள மாதிரி ஈனப் பிறவிக்கெல்லாம் சாமியே கிடையாது.(வெடித்து அழுகிறார்)

இது வெறும் கெட்ட வார்த்தையில்லை. உச்சகட்ட வலியில், வெறுமையில், கிளர்ந்தெழுந்த உக்கிரத்தில் வெடித்த 'ரணம்'. அதனால் தான் திரைஅரங்கில் அதனை பலத்த கைதட்டல். கை தட்டிய பலர் குடும்பத்து ஆட்கள் என்பது இங்கே குறிப்பிட பட வேண்டிய ஓன்று.

படம் நல்லாயிருக்கு, நல்லாயில்லை என்பதையெல்லாம் கடந்து 'கடவுளை' தரிசிக்க வேண்டியது ஆரோக்கியமான பார்வையாளனின் கடமை. நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.