Friday, January 21, 2011

மரணத்தின் வாசனை!


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது வலைப்பூவில் வெளியாகி வெறும் பத்து வாசகர்களால் மட்டுமே படிக்கப்பட்ட பதிவு. சொல்லப்போனால் இது ஒரு நிராகரிக்கப்பட்ட பதிவு. உங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்.


மாணிக்கம் அண்ணனுக்கு 90 வயது இருக்கும். என் தாத்தாவும், மாமாவும் அண்ணன் என்று அழைத்ததால் நானும் அப்படியே அழைக்கத் தொடங்கினேன்.

எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே மாணிக்கம் அண்ணனை தெரியும் என்றாலும், அவரின் முகம் என் நினைவில் அழியாமல் நின்றது; ஒரு மரண நிகழ்வின் போது தான்.

எங்கள் வீட்டில் வளர்ந்த மணி (நாய்) வெகு நாளாக ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போதேல்லாம் பெரியவர்களைப் பொறுத்த வரையில் நாய் ஊளையிட்டால் தெருவில் ஒரு பிணம் விழப்போகிறது என்று அர்த்தம். எங்கள் மணி தெருவில் ஊளையிட்டு வயதானவர்களையும், உடல்நிலை சரியில்லாதவர்களும் கதி கலங்க வைத்துக் கொண்டிருந்தது. தெருவில் உள்ளவர்கள் மணி மீது புகார் பத்திரம் வாசிக்க ஆரம்பித்தனர்.

வேறு வழி இல்லாமல் எல்லோருமாக சேர்ந்து மணியின் சாவுக்கு நாள் குறித்தார்கள். 1994 ம் ஆண்டு பொங்கல் விழா முடிந்து கரும்பு சக்கைகள் தெருவெங்கும் சிதறிக் கிடந்தது. மாணிக்கம் அண்ணன் கனமான கடப்பாரையுடன் (குழி தோண்ட உதவும் கருவி) கம்பீரமாக நடந்து வந்தார்.

ஜனவரி மாத வெயில் தெருவில் இறங்கி உலாவிக் கொண்டிருந்தது. வீட்டு வாசலில் படுத்திருந்தது மணி. கடப்பாரைக் கம்பியுடன் மாணிக்கம் அண்ணன் வருவதை கண்டு குலைத்துக் கொண்டே நடுத் தெருவுக்கு வந்தது. அவர் கம்பியால் மணியை அடிக்கும் வரை, மணியைக் கொல்லப் போவது அவர் தான் என்பது எனக்குத் தெரியாது.


கண்ணிமைக்கும் நேரத்தில் மணியின் மூளை சிதறியது. வாயிலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. மணியின் இரண்டு மூன்று பற்கள் நொறுங்கிய நிலையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. வார்த்தைகளற்று நின்று கொண்டிருந்தேன். மணியின் துடிப்பு சிறிது நேரத்தில் அடங்கியது. கொசுவை அடித்து தூக்கிப் போடுவது மாதிரி சர்வ சாதாரணமாக மணியின் கால்களை பிடித்து தரத் தரவென இழுத்துச் சென்றார் மாணிக்கம் அண்ணன்.

தெருவே பெருமூச்சு விட்டது. அன்றைய நாளில் எங்கள் வீட்டை அழ்ந்த மவுனம் கவ்விக்கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவது கூட வேதனையை அதிகரிப்பதாக இருந்தது. நாய் விளையாடித் திரிந்த இடங்களை பார்த்து தனிமை பரிகாசம் செய்து கொண்டிருந்தது. மாணிக்கம் அண்ணனின் முகம் அன்றைய நாள் என் நினைவிலிருந்து அகலாத ஒரு முகமாக பதிந்துவிட்டது.

பின்பு, 'தென்னங்கன்று நடுவது, இளநீர் பறிப்பது, கிணறு தூர் வாருவது, வீடு கட்ட மணல் அள்ளுவது, தாத்தாவுக்கு மருத்துவமனையில் உதவியாக இருப்பது' என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எங்கள் வீட்டுக்கு மாணிக்கம் அண்ணன் வந்து செல்லவது உண்டு. மாணிக்கம் அண்ணன் எந்த வேலையாக எப்போது வந்தாலும் சரி, கடப்பாரைக் கம்பி விழுந்து மூளை சிதறிய மணியின் முகம் தான் என் நினைவுக்கு வரும்.

நாயை அடிக்கும் போது இருந்த கொடூர முகம் மாணிக்கம் அண்ணனின் நிஜமான முகம் கிடையாது. திடமான உடலமைப்புக் கொண்டவர். பழகுவதற்க்கு மிகவும் இனிமையானவர். குரல் கூட அதிராத வண்ணம் இருக்கும்.

அதன் பிறகு 'பள்ளி ஹாஸ்டல், சென்னை வாழ்க்கை' என்று பத்து வருடங்கள் உருண்டோடிவிட்டன.

சமீபத்தில் நான் ஊருக்கு சென்றிருந்த போது எங்கள் தெருவை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு டீ கடை அருகே ஒரு கனமான கம்பை தாங்கிய படி சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்தார் மாணிக்கம் அண்ணன்.

அவருக்கு பக்கத்தில் சென்றேன். கண்கள் பழுபேறியிருந்தன. வயோதிகத்தால் உடல் மிகவும் தளன்று போயிருந்தது. என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. என் தாத்தாவின் பெயரைச்சொல்லி சொன்னதும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். ரெம்பவும் தடுமாறி "நல்லா இருக்கீங்களா தம்பி?"என்றார். தலையாட்டினேன். கையில் இருபது ரூபாய் கொடுத்தேன் வாங்கிக் கொண்டார்.

பிறகு நான் அவரைப் பார்க்கும் சமயங்களில் எல்லாம் சாலையின் ஓரமாக மாமர நிழலில் அமர்ந்து சாலைகளில் செல்பவர்களையெல்லாம் இமைகளை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். யாரிடமும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதில்லை. சாலைகளில் யார் இரைச்சலை எழுப்பிக்கொண்டிருந்தாலும் அதை சலனமே இல்லாமல் அவதானித்துக் கொண்டிருப்பார். துடிதுடித்துக் கொண்டிருந்த மணியின் கால்களைப் பிடித்து நடந்து சென்ற மாணிக்கம் அண்ணனின் கம்பீரத்தை முழுவதுமாக முதுமை விழுங்கிக் கொண்டது.

கடைசியாக அவரை ஒரு சாவு வீட்டில் வைத்துப் பார்த்தேன். "மவுனத்தை எதிர் கொள்வதும், புரிந்து கொள்வதும் தான் முதுமை" என்பது போல அவரின் கண்கள் அந்த சடலத்தின் மீது நிலை குத்தி நின்றது. அந்த தருணத்தில் 'கைகளை முறுக்கிக் கொண்டு நாயின் மூளையை சிதறடித்த மாணிக்கம் அண்ணனுக்கு இதனை வருடம் கழித்து அந்த நாயின் ரத்தக் கவிச்சி அடித்திருக்கும்' என்றே நினைக்கிறன்.

Friday, January 7, 2011

கலைஞர் குடும்பத்தார் எடுக்கும் படங்களுக்கு இலவச டிக்கெட்?


மந்திரசிமிழ் தலையங்கம்!

அன்பார்ந்த வாசகர்களுக்கு,
மந்திரச்சிமிழ் முந்தைய இதழுக்கும் இப்போதைய ஐந்தாவது இதழ் வெளியாகும் இடைவெளிக்குள் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளேன். பாபர் மசூதி குறித்த கட்ட பஞ்சாயத்து முதல் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வரை இந்திய உளவியலின் கோர முகமும், தமிழ் இலக்கியச் சூழலையும் ஒன்றாக கருத வேண்டியுள்ளது. எல்லாம் ஆளுமைகளால் நேரும் விபரிதம். தமிழில் இலக்கியம் என்ற பெயரில் வெளி வந்து கொண்டிருக்கும் வரண்ட நதியின் தீராத வேட்கையும், உயிரற்ற பிரதிகளையுடைய ஆளுமைகளும் அதனதன் போக்கில் நெடிய பாதக விளைவிகளை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.
சென்னை புத்தக கண்காட்சி நடைபெறும் காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். அதை முன்னிட்டு முக்கிய இலக்கிய கர்த்தாக் களின் பதிப்பகம் பல நூறு புத்தகங்கள் அச்சிடும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவையான தாள்களை முன்க்கூட்டிய வாங்கி சேமித்து வைக்கவும், அதே போல் மலம் துடைப்போர் முன் கூட்டிய காகிதங்களை வாங்கி வைத்து கொள்ளும் படி எச்சரிக்கைப் படுகிறார்கள். அப்படியில்லையென்றால் சற்று பொறுத்திருத்து புத்தக வெளியானதும் உபயோகத்திற்கு கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். கழுதைகள் மிகவும் அருகி வரும் காலக்கட்டத்தில் அவசியம் உங்களுக்கு வெற்று தாள்களுக்கு பதிலாக அச்சிட்ட தாள்களே கிடைக்கப்பெறும்.
இலவசங்களே தீர்ந்து போகும் அளவுக்கு கலைஞரின் இலவசத்திட்டங்களுக்கு அடுத்தப்படியாக கலைஞர் வீட்டு கட்டும் திட்டம் நிறைவேறி வருகிறது. வரும் தேர்தலில் இலவசங்கள் குறித்து அறிவிப்பு விடுவதற்கே அவருக்கு பஞ்சம் நேரலாம். அதற்காக பண்ணாட்டு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்நத் தோடு இலவசங்களை ஆராய்வதற்கே ஒரு ஆய்வு மையம் அமைக்கும் நெருக்கடி கூட கலைஞருக்கு வரலாம். ஆகையால் எங்களின் சிற்றறிவுக்கு எட்டிய யோசனையாக அடுத்த தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பத்தார் எடுக்கும் படங்களுக்கு இலவச டிக்கெட் தரவேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைக்கிறோம். ஏன் 2ஜி ஸபெட்ரத்தை கூட இலவசமாகத் தரலாம்.
வெகுஜன பத்திரிகையில் வெளியான தங்களது படைப்புகள் சிறுப்பத்திரிக்கையில் வெளி வருவதற்கான ஆனைத்து தகுதிகளும் கொண்டவைகள் என்பதாக சிலர் தெரிவித்து வரும் வேளையில் இது குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது. சிறு பத்திரிக்கை என்ன என்பது இவர்கள் முதலில் அறிந்து கொள்ளட்டும். சிறு பத்திரிக்கையில் முதல் கடமையே அறம் சார்ந்த விஷயம். அத்தகைய பத்திரிகையும் அறமுள்ளதாக இருக்க வேண்டும். எழுதுபவரும் அந்த அறத்துடன் இருக்க வேண்டும். அயல் இலக்கிய படைப்புகளை அங்கும் இங்கும் மாற்றி தன் படைப்பாக வெளியிடுவது எத்தகைய சிறு பத்திரிகை தரம் என்பது புலப்பட்ட வில்லை. வெகு ஜன ரசனை என்பதோடு தன்னை இணைத்து கொண்டும், அதில் சுக்கில சுகம் அடைந்து விட்ட இந்த பராகிரம பாக்கியசாலிகளுக்கு இம்மாதிரியாக சிறுப்பத்திரிகை மீது ரோமான்டிசம் அவசியமில்லை.
தமிழில் புதிய போக்கு சமீப காலமாக மேலோன்றி வருகிறது. தினக்கழிவு போல் எழுதித் தள்ளுகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தலையனை அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார்கள். அந்த நூல்களை எவரொருவராவது முழுவதுமாக படித்திருப்பார்களென்றால் அது சாத்தியமில்லை. ஏனென்றால் அளவு பொருட்டல்ல. அதில் படிக்கும் அளவுக்கு ஏதும் இல்லை என்பதே நிதர்சனம். வாசிப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி தன்னை ஒரு மேதைமைமிக்கவராக காட்டிக்கொள்ளும் விதம் மிக அற்பமானது.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட அரங்கத்தில் நடைப்பெற்ற ஒப்பற்ற தமிழ் இலக்கிய கர்த்தா சாரு. நிவேதா’வின் புத்தக வெளியீட்டில் கலையுலக மாமேதை கனிமொழி அழைக்கப்பட்டிருக்கிறார். உலகமே அவரது அரும்பெரும்(அருவருப்பான) சாதனையான 2ஜி ஸபெகட்ரம் குறித்து உமிழ்ந்துகொண்டிருக்கையில் அவருக்கு தார்மீக ஆதரவை தரும் வகையிலும், இலக்கிய கர்த்தா என்ற அங்கீகாரத்தை தூக்கிப் பிடிப்பதற்கும், முன் பெற்ற பிச்சைகளுக்கு ப்ரயசத்தத்திற்மாக கூட இதை கொள்ளலாம். அரசியலில் தன்னாலான மேதகு காரியங்கள் போதாதென்று அந்த அம்மையாரும் புறப்பட்டு வந்துவிட்டார்.
ஆட்சிமாறினால் அடுத்து வரும் ஆட்சியாளர்களை விமர்சித்து கவிதை புனைய இலக்கிய கூலிகளை தேற்ற தனது அடிவருடிகளை தேடி வந்து விட்டார் போலும். இல்லை அனைத்து துறை போலவே இத்துறையிலும் தாங்கள் குடும்பத்தின் ஏகபோகம் என்பதாக எண்ணி கொண்டார் போல். அதுவும் சாத்தியம் தான் தமிழ் நாடு அடிவருடிகளின் சொர்க்க பூமி. உயிர்மை மீது கொண்டிருக்கும் அனுதாபத்தை சாதகமாக்கி கொண்டு மனுஷியபுத்திரன் ஆடும் ஆட்டத்தை அடக்கிக் கொள்வது அவருக்கு நல்லது.
இலக்கியம் என்பது மொழியை சிலேகித்து எழுத வேண்டிய ஒன்று, அதில் எத்தகைய விரசமும் இருக்க வாய்ப்பில்லை. எஸ். ராமகிருஷ்ணன் பற்றி பேசும் சாரு. அவரது மொழியின் இலகுத்தன்மை குறித்து அறிந்துள்ளாரா என்பது சந்தேகமாக உள்ளது. எஸ். ராமகிருஷ்ணனின் பரந்தபட்ட வாசிப்பாளர். அவரது முற்பகுதி எழுத்துகள் சிறப்பானவை. தமிழில் காலம் கடந்து முன்னணி இலக்கியவாதியாக திகழ வேண்டிய எஸ். ராமகிருஷ்ணன் அரசியல்வாதி போன்ற செயல்களில் ஈடுபடுவது உகந்ததாக அமையாது. அதற்கு பதிலாக தனது படைப்புகளின் மீது அக்கரை கொண்டு இதுவரை அவர் வீண்டித்த காலங்களுக்கு பிரயாசித்தம் தேடிகொள்ள வேண்டும்.
கலைஞர் ஒரு இலக்கியவாதி அல்ல என்று தனது ஞானத்தின் மூலம் கண்டறிந்த ஜெயமோகனின் எழுத்துகளும் இலக்கிய தரமற்றது என்று யாவரும் அறிந்ததே. எழுத்து என்பது ஒரு வித பித்து நிலையிலிருந்து வெளியாகும் அம்சம். அத்தகைய நிலையில் ஜெயமோகன் ஒரு சைக்கோ என்று கூறி, அவருக்கு ஒரு பித்தநிலை வழங்கி ஆசித்தந்த கனிமொழியை வைத்து புத்தக வெளியீட்டை நடத்திய சாருக்கு ஜெயமோகனைப் பற்றி அத்தகைய ஆவேசம் அவசியமில்லை. ஒருவேளை ஜெயமோகன் சினிமா துறையில் பிரவேசிப்பதால் சாருவுக்கு ஆதங்கம் இருக்கலாம். இலக்கியம் என்று எடுத்துகொண்டால் இருவருமே பூஜியம். தமிழ் வாசகர்களுக்கு எழுதுவது குறித்து அடிக்கடி வருத்தம் கொள்ளும் சாரு, அத்தகைய உவகையற்ற பணியை விடுத்து சந்தோஷம் தரும் ஏனைய செயல்களில் அவர் ஈடுப்படலாம். குறிப்பாக புகழ்மிக்க உலகத்தரம் வாய்ந்த அரசியல் விமர்சகரிடம் தன் டவுசரை கிழற்றி காட்டி புணரச்செய்ய கட்டாயப்படுத்தியது போல்.
மந்திரச்சிமிழ் இதழ் இரண்டாம் ஆண்டை எடுத்து வைக்கும் வேளையில் அரசியலை முற்றிலும் தவிர்க்க எண்ணியுள்ளோம். இனி இதழில் அரசியல் தொடர்பான விஷயங்கள் அறவே இருக்காது. ஆகையால் இதழில் எழுதும் எழுத்தாளர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம். இதழ் முற்றிலும் கலை இதழாகவே இனி பிரவேசிக்கவுள்ளது. இதழில் அயல்மொழி படைப்புகள் அதிகம் வெளி வருவது குறித்து பலர் வருத்தப்படுகிறார்கள். பத்திரிகை தமிழில் தான் வருகிறது என்பதையும், அயல் மொழிகளில் வருவதில்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

-க.செண்பகநாதன் (பதிப்பாசிரியர்)

Thursday, January 6, 2011

சாருவின் "தேகம்" - "மலக்கிடங்கு"

சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்க்கு சென்று வந்த கையோடு அவரது "தேகம்" நாவலையும் "ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி" சிறுகதை தொகுப்பையும் வாங்கிவந்தேன். தேகத்தை அன்றைய தினமே வாசித்து முடித்தேன். இதனைத் தொடர்ந்து நாவலைப்பற்றிய என்னுடைய கருத்துக்கு நேர்மாறான விமர்சனம் சாருவின் வலைப்பதிவில் வெளியாகிக் கொண்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் வாசித்தேன். இந்த இரண்டாவது வாசிப்பில் எனக்கு மேலும் சில விஷயங்கள் தெளிவாகின.

1) சாருவின் தேகம் வதையைப் பற்றியது என்றார். ஆனால் வதையானது நாவலின் கதாபாத்திரங்களுக்குள் நிகழ்கிறதா? அல்லது சாரு வாசகன் மேல் நிகழ்த்துவதா? என்பது குறித்த விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

2) நாவலை படித்து முடித்த இரண்டு முறையுமே, ஒரு மலக்கிடங்கிற்குள் விழுந்து எழுந்த அசூசையான உணர்வு எழுந்தது.

3) நாவலைப் பற்றி வலைப்பூக்களில் எழுதப்படுவது யாவும் விமர்சனமல்ல. வெறும் பாராட்டுரைகளே.

4)இவர்கள் யாவரும் சாருவின் வலைப்பதிவில் இடம் பெற்று பெருந்திரளான வாசகர்களால் தானும் அறிவுஜீவியாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையுடையவர்களாகவே படுகிறார்கள்.

5) பன்றி குறித்தும், சிறுவனின் மன ஓட்டம் குறித்தும் வரும் பகுதிகள் மட்டுமே நாவலின் சிறப்பான பகுதிகளாக குறிப்பிட முடியும்.

6) "சரோஜா தேவி புத்தகம்" என்று மிஷ்கின் குறிப்பிட்டதை, தேகம் நாவலுக்கான அதிகபட்ச பாராட்டாகவே கருதுகிறேன்.

7) பல விதமான ஆண் குறிகளையும், பல விதமான மனித மலத்தையும், பெண்களின் உடலையும், குறிப்பாக குறுகிய எலிப் பொந்துகளையும் பற்றி எழுதினால் நாவல் உலகத்தரமானதாக மாறிவிடுமா?

8) மேலும், அரசால் தடைசெய்யப்பட்ட செக்ஸ் புத்தகங்கள் தற்போது உயிர்மை மூலமாக தரமான அட்டை மற்றும் தாள்களில் வெளியாவது மனதுக்கு மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் ஒருசேரத் தருகிறது.

9) இது போன்ற புத்தகங்களை படிக்கும் அளவிற்க்கு எனக்கு சகிப்புத்தன்மை அதிகரித்திருப்பது குறித்தும் மிகுந்த மகிழ்ச்சி.

10)சாரு வெகுநாளாகவே தான் நோபெல் பரிசுக்கு தகுதியானவர் என்று சொல்லி வருகிறார். சாருவுக்கு கொடுக்கலாம் தான், ஆனால் நோபெல் கமிட்டி தன்னுடைய தகுதியை இழக்க தயாராக உள்ளதா? என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். (போர்கேஸ்- க்கே நோபெல் வழங்கப் படவில்லை)

11) Auto-Fiction வகையின் முதல் எழுத்தாளர் சாரு என பிரகடனம் செய்வதில் சில சங்கடங்கள் உள்ளது. ஏனெனில் எல்லா படைப்பாளியும் தனுடைய ஏதோ ஒரு அனுபவத்தின் வழியாகவே உருவாக்குகிறான். முழுக்க கற்பனை என்று இந்த உலகத்தில் ஓன்று உள்ளதா என்ன?

12)மேலும், சாருவின் அடிவருடிகள் என்னை பின்னூட்டங்களால் பின்னி எடுக்க வேண்டாம். ஏனென்றால் நான் கருணாநிதி மாதிரி எதையும் தாங்கும் இதயமல்ல!