Sunday, September 28, 2008

மதுவில் வீழ்ந்த காதல்!


உங்களுக்கு எத்தனையோ நெருக்கமான நண்பர்கள் இருக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களை முதல் சந்திப்பிலேயே முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படி எத்தனையோ நண்பர்களை, நான் முதல் சந்திப்பில் புரிந்து கொண்டதற்க்கும், இன்று அவர்களோடு நெருங்கிப் பழகுகையில் நான் புரிந்து கொண்டதத்குமான இடைவெளி மிகவும் நீளமானது.

இப்படியான ஒரு நட்புதான் எனக்கும் நண்பன் பொன்முடிக்குமான உறவு. பொன்முடியின் சொந்த ஊரின் பெயரைக் கேட்டால் '௨.பி' என்பான். நான் வெகு நாட்களாக 'உத்திரப்பிரதேசம்' என நினைத்திருந்தேன். பின்னொரு நாளில் தன் தெரிந்தது அவன் 'உளுந்தூர்பேட்டை' என்று.

பொன்முடியைப் போல நகைச்சுவை உணர்வு கொண்ட நபரைப் பார்ப்பது மிகவும் அரிது. அவனோடு படம் பார்க்க சென்றால், அருகில் இருப்பவர்கள் படம் பார்க்க முடியாது. இது எழுதப்படாத விதி. வார்த்தைக்கு வார்த்தை கமெண்ட் அடிப்பான்.

இப்படி எப்போதும் சிரித்தும், சிரிக்க வைத்துக் கொண்டும் இருக்கும் அவன், பிப்ரவரி மாதத்தின் முதல் நாளிலிருந்து மொவ்னம் கொள்ள ஆரம்பித்தான். அறையில் உள்ள நண்பர்களோடு பேசுவதைக் கூட முற்றிலும் தவிர்த்தான்.

பிப்ரவரி இரண்டாம் தேதி மாலை மருத்துவமனை சென்று ரத்த தானம் செய்து விட்டு இரவு தாமதமாக வந்தான். யார் யாரோ ஏதேதோ கேட்டுப் பார்த்தும் கூட எதுவும் பேச மறுத்தான்.

சூரியன் இறங்கி முகத்தில் விளையாடும் வரை தூங்கும் அவன், பிப்ரவரி மூன்றாம் தேதி சூரியனுக்கு முன்னமே எழுந்து கோவிலுக்குச் சென்றான். திரும்பி வரும் போது மது பாட்டிலோடு வந்து குடிக்க ஆரம்பித்தான். குடிப்பதற்க்கு காரணம் தேவைப் படாத நண்பர்களும் அவனோடு சேர்ந்து கொண்டார்கள். மதியம் தாண்டியும் யாவரும் மதுவோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த மயக்கம் பொன்முடிக்கு சற்று ஆறுதல் தந்திருக்க வேண்டும். மெதுவாக பேச ஆரம்பித்தான். "பள்ளி நாட்களில் கண்மணி என்றொரு பெண்ணை காதலித்ததாகவும், அவள் ஒரு போதும் தன்னையும், தன் காதலையும் ஏற்க்கவில்லை" என்று நேற்று நடந்ததைப் போல எல்லாவற்றையும் எங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும் போதே ஒரு குழந்தையைப் போல தேம்பி அழ ஆரம்பித்தான்.

மது அருந்திய உதடுகள் என்ன பேசுவது என்று தெரியாமல் வெறுமையை பருகத் தொடங்கின. காரணமற்ற மவ்னம் யாவரையும் நிலை குலைய வைத்திருந்தது. சூரியன் வடக்கே ஓடி ஒளிந்து கொண்ட மாலை நேரத்தில் மது புட்டிகளும், பிரியாணி பொட்டலங்களுமாக அறை முழுவதும் சிதறிக் கிடந்தது. அறையின் அந்த கோலமே மனதில் வலியை உருவாக்கியிருந்தது. பொன்முடி நிலை குலைந்து போய் உறங்கிக் கொண்டிருந்தான். கண்களில் கண்ணீர் வழிந்து உறைந்து போயிருந்தது. பின்னாளில் அவன் தன்னிலைக்கு வருவதற்க்கும், உதட்டில் புன்னகை குடிகொள்வதற்க்கும் ஒரு வார காலமாகியது.

பொன்முடியின் காதலை ஏற்பதும், ஏற்காமல் போவதும் அவளின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், "யாருக்காக இப்படி ஒருவன் மதுவில் வீழ்ந்து கிடக்கிறான்? இரவில் தலையணையோடு காதலில் தலை சாய்த்தபடியே உறங்கிப் போய்கிறான். அவள் நினைவிலேயே, அவன் நாட்கள் மூர்க்கம் கொண்டு நகர்கிறது" என்பதையோ அவள் அறிந்திருக்கவில்லை என்பதில் தான் அவனுடைய துயரம் தாளாமல் நீண்டு கொண்டிருக்கிறது.

பின்குறிப்பு:
வரும் பிப்ரவரி 3ம் தேதி நீங்கள் பொன்முடியை சந்திக்க நேர்ந்தால், உங்களுக்கு நிச்சயமாக நெப்போலியன் ஹாப்போ, குவாட்ரோ கிடைக்கும். ஆனால், அதில் போதை ஏறாது. வெறுமையும், துயரமும் உக்கிரத்தாண்டவமாடும். அருந்திப் பாருங்கள்!

1 comment:

அ. இ . said...

இது போன்ற நபர்கள் மனநல மருத்துவரின் உதவியை நாடுவதே சால சிறந்தது !
தோல்விகளை ஏற்க மனமில்லாதவர்கள் உணமியிலேயே கோழைகள்!
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவரின் இந்த குறையை அவர் காதலித்ததாக சொல்லும் பெண் கவனித்திருக்க கூடும் .

எந்த விதத்திலும் ஏற்க முடியாது , காதல் தோல்வியினால் குடிப்பது, தற்கொலை செய்து கொள்வது !