Tuesday, November 11, 2008

வாழ்க்கை கருணையற்றது!


டென்சிங். இரண்டாம் உலகப் போரில் விமானத்தில் பறந்தபடி குண்டு மழை பொழிந்த அமெரிக்க வீரரென நினைத்து விடாதிர்கள். காரைக்குடியில் எனது சிறு வயது தோழன்.இப்போது மினி லாரி ஓட்டுனராக உள்ளான்.

நீலகிரி மாவட்டம் உயிலட்டி கிராமத்திற்க்கு, காரைக்குடியிலிருந்து தேக்கு கட்டைகளை எடுத்துக்கொண்டு ஒரு இரவில் இருவரும் பயணமானோம். அன்றைய இரவு பேசிக் கழித்த படியே இருளில் கரைந்தது. எதிரே வரும் வாகனங்களின் விளக்கொளிகள், கண்களில் வலிஏறச் செய்திருந்தன. தூக்கம் கண்களை அழுத்த தேநீர் அருந்தி விட்டு மீண்டும் உதகை நோக்கி பயணித்தோம். காற்றைக் கிழித்தபடி லாரி விரைந்து கொண்டிருந்தது.

லாரி ஓட்ட ஆரம்பித்த புதிதில் தடுமாறிய டென்சிங், இப்போது ஒரு இரும்புக் குதிரையை போல் லகுவாக செலுத்தினான்.அவனுக்கு முதல் மலை பயணம் என்பதால் இயற்கையை ரசிக்க விடாத படி பயம் குளிரைப்போல இருவரின் உடலுக்குள்ளும் கசிந்து கொண்டிருந்தது.

உயிலட்டி நாங்கள் நினைத்ததை விடவும் மிகவும் அழகாக இருந்தது. தேக்கு கட்டைகளை இறக்கி வைத்த பின்பு படுகர் இனத்தை சேர்ந்த திப்பையன் என்பவரது முன்னூறு ஆண்டுகள் பழைமையான வீட்டிற்க்கு சென்ற போது, வீடு முழுக்க மயக்கும் வஸ்துவின் வாசனை எழுந்தது. திப்பயனிடம் கேட்டபோது ஜாடி நிறைய கஞ்சா இலைகளை எடுத்து காண்பித்தார்.அன்று முழுக்க திப்பயன்,"சரக்கு வாங்கித்தா, சிகரெட் வாங்கித்தா" என்று எரிச்சலூட்டினான். பொறுமையிழந்த டென்சிங், திப்பயனை அருகில் அழைத்து வந்து திட்டி விட்டான். திப்பையனுக்கு போதை இறங்கிப்போனது.

அன்று மாலை, மலையிலிருந்து கிழே இறங்கிக்கொண்டிருந்தோம். குளுமையான காற்று நாசியில் ஏறி அற்புதமான சுகந்தத்தை தந்து கொண்டிருந்தது. நான்கு நாட்கள் இரவு பகலாக வண்டி ஒட்டிய காரணத்தால் தூக்கத்தை கட்டுப்படுத்திய படி லாரியை ஓட்டிக்கொண்டிருந்தான். மறுநாள் காலை காரைக்குடிக்கு செல்ல வேண்டும் என்பதால் தூக்கத்தை மறந்திருந்தான்.இரவு ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய் கரி அங்காடியில் காரைக்குடிக்கு எடுத்துச்செல்ல சரக்கு ஏதேனும் உள்ளதா என கேட்ட பொழுது ஏற்கனவே சரக்குகள் எடுத்து செல்லப்பட்டிருந்தன.ஏமாற்றத்துடன் காரைக்குடி நோக்கி விரைந்து கொண்டிருந்தது லாரி.


உறவுகள்,உணவு,உறக்கம்,சிரிப்பு என எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு அவன் நாயாய் அலையும் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டது யாரால்? டென்சிங் வசிக்கும் தெருவில் அவனது பெற்றோரைத் தவிர அனேகபேர் ஆசிரியர்கள். டென்சிங் மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு வீரன். இளங்கலை பொருளாதாரத்தில் பல்கலைகழக அளவில் இரண்டாவது மதிப்பெண் பெற்றவன். அவனுடைய கனவுகள் யாவும் தன் ஒரு வழக்கறிஞர் ஆவதே.

அவனது பெற்றோர்கள் அவனை M.B.A., படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். அவர்கள் என்ன செயவார்கள்?சுற்றி உள்ளவர்கள் M.B.A., பொறியாளர் என்று பெருமை பேசும் பொழுது, படிப்பறிவு இல்லாத அவனது பெற்றோர்களுக்கு அப்போது தெரியவில்லை. சிபாரிசு இல்லாத நடுத்தர குடும்பங்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பென்று.

ஒரே ஒரு பையனை வெளியூர் அனுப்பி படிக்க வைக்க விரும்பாத அவனது பெற்றோர்கள் டென்சிங்கின் கல்லூரி சான்றிதழை மறைத்து வைக்க பிரச்சனை பூதாகரமானது.பக்கத்துக்கு வீட்டு ஆசிரியர்கள் நள்ளிரவு பஞ்சாயத்து நடத்தினார்கள். குடித்திருந்த அவனது அப்பா அவனின் தோளை பிடிக்க முயன்று தடுமாறி கீழே உள்ள கல்லில் விழுந்தார்.பின் மண்டையில் அடி பட்ட அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, துணிகளை அள்ளிக்கொண்டு அவனது அம்மாவும் வீட்டை விட்டு வெளியேறஇப்போது அந்த வீட்டிலிருப்பது வெறுமை மட்டும் தான். இந்த அனைத்து பிரச்சனைகளும் நடந்தேறியது, டென்சிங்கின் சட்டக்கல்லூரி நேர்முகத் தேர்வுக்கு முந்தய நாள் இரவு.

எப்போது டென்சிங் வீட்டிற்க்கு சென்றலும் விருந்து பரிமாறும் அவனது அம்மாவையும், "நான் எந்த பொண்ணு பின்னாடி சுத்தி, ஊர் சண்டை போட்டுட்டு இருந்தேன்.படிக்கனும்னு தானே ஆசைப்பட்டேன்" என்று புலம்பும் டென்சிங்கையும் நினைக்கையில் மனது தன்னை அறியாமல் மவுனம் கொள்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னை வந்த டென்சிங் என்னுடைய அறைக்கு வந்திருந்தான். வீட்டருகே புதிதாக திறந்திருந்த உணவகதிட்க்கு அவனை அழைத்துச்சென்றிருந்தேன். ஆரம்ப நாட்களில் சுவையாக உணவு பரிமாறப்பட்ட அந்த உணவகத்தில் அன்று எதுவுமே நன்றாக இல்லை.(அன்றிலிருந்து ஒருநாள் கூட அங்கு பழைய சுவையில் உணவு பரிமாரப்படவே இல்லை என்பது வேறு கதை) காசு, பணம் தான் எல்லோரையும் ஆடவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. அரை குறையாக சாப்பிட்டும்,சாப்பிடாமலும் அவன் காரைக்குடிக்கு திரும்பிய போது, அவனை சூழ்ந்த நெருக்கடிகள் ஒரு இரவைப்போல பிசுபிசுப்புடன் என்னில் இறங்கி அழுத்தத் துவங்கியது.

இரவு சென்னையிலிருந்து கிளம்பியவன் அதிகாலை புதுக்கோட்டை-காரைக்குடி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவனது லாரியில் சிக்கி ஒரு பெரியவர் இறந்து போனார். அன்றிலிருந்து ஒரு வாரம் அவன் லாரியை எடுக்காமல் மதுவில் கரைந்து கொண்டிருந்தான்.

"வாழ்க்கை கருணையற்றது.அது யாவரின் வாழ்க்கையையும் ஒரு வெற்றிலையை மென்று துப்புவதைப் போல உதட்டில் ரத்தச் சாறு வழிய கடந்து போய் விடுக்கிறது" என்று எஸ்.ராமகிருஷ்ணன் நெடுக்குருதி நாவலின் முன்னுரையில் எழுதியிருப்பார். அது உண்மை தானோ என்னவோ?

"காசுக்கும், பணத்துக்கும், ஊரார் பெருமைக்கும் ஆடக் கற்றுக்கொண்டோம். இது எத்தனை பெரிய அவமானம். வாழ்க்கை ஒரு கவிதை புத்தகத்தைப் போலவோ, நாவலைப் போலவோ இயல்புகளின் பதிவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அக்கௌன்ட் நோட்டைப் போல வாழ்க்கை வெறும் வரவு,செலவுகளின் பதிவாக இருப்பின், கணக்குகள் சரி பார்க்கப்பட்டு பின்பு நீங்களோ,நானோ தூர தூக்கி எறியப்படுவோம் என்பதை நினைவில் கொள்ளவோம்.

பின்குறிப்பு:
அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட டென்சிங், ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக கோவை சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டான்.

புதிய தகவல்:

கை செலவுக்காக சென்ற வாரம் டைல்ஸ் கல் ஏற்றிக்கொண்டு கோட்டயம் சென்ற டென்சிங்,

1)ஒற்றை விளக்குடன் வாகனம் ஒட்டியது.
2)முறையான லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஒட்டியது.
3)சீருடை அணியாமல் இருந்தது.
4)ஓவர் ஸ்பீட்.
5)ஓவர் லோடு,
என்று ஐந்து 'கேஸ்' வங்கி வந்திருக்கிறான். கூடிய சீக்கிரமே வக்கீல் ஆகிவிடுவான் போல. என்ன நான் சொல்வது சரிதானே?

8 comments:

கோவி.கண்ணன் said...

டென்சிங், சிக்கல் தீர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள் !

தமிழன்-கறுப்பி... said...

வாழ்க்கை கருணையற்றிருப்பதும் சில வேளைகளில் சுவாரஸ்யம் போலத்தான் இருக்கிறது...

ரணங்கள் பழகி விட்ட மனதுக்கு...

டென்சிங் நல்லாருங்க...

வாழ்த்துக்கள்...:)

மதுரகாரைங்க said...

vazhkai karunai yatradhu sollalama nu yosikiren. Rajini padam parka poi ticket kidaikama counterla sanda vandhuduchu , Ok adutha show ticket kidaichiduchu padamum parthuttenga . Ippa rajini padatha vaazhnaal fulla marakkama vachirukaradhu andha counter sandai thaan.Vazhkaiya suvarasiyam aakuradhu couner sanda thaan .

Raj said...

//அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட டென்சிங், ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக கோவை சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டான்.
//

யப்பா...இதை படிச்ச பிறகுதான் மனசுக்கு நிம்மதியாச்சு

Ilaya said...

டென்சிங் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ......

ஈரோடு கதிர் said...

கிளைமேக்ஸ் படிக்கிற வரைக்கும்.... கொஞ்சம் பதட்டம் தான்..... அப்புறம் நிம்மதி.... டென்சிங்கிற்கு வாழ்த்துக்கள்

மனசு... said...

Densing- vazhalthukkkal, vazhalkaila periya aala vanga... unga nanbanai eppovum marakkadinga.... ungalukkaga ennama urugi ezhuthirukkar...

பொன்மாறன் said...

டென்சிங் என்ற முகம் தெரியத நபருக்கு என்னுள் ஒரு பெரிய மரியாதையை வளர்த்துவிட்டது உங்கள் கட்டுரை. இப்படி வாழ்க்கையினை வாய்த்த படி வாழாமல் எதிர்த்துப் போராடுகிற இப்படிப்பட்டோரையும் குடி விட்டு வைக்கவில்லை என்பதைக் காண வருத்தமே மேலிடுகிறது. அது ஒரு தவறே இல்லை என்ற பிம்பத்தை நம் சமூகம் கொண்டுவந்துவிட்டது. அவரைச் சொல்லி குற்றமில்லை.
வாழ்க்கையின் கோரமுகங்களை கண்டுவிட்ட டென்சிங் பின்னாளில் சிறந்த வழக்கறிஞராக எனது வாழ்த்துக்கள்.