எழுத்தாளர் ச.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போயி' என்ற சிறுகதை, இயக்குனர் சசியால் 'பூ'வாக மலர்ந்திருக்கிறது. திலகவதி i.p.s அவர்களால் ச.தமிழ்செல்வனின் சிறந்த பத்து கதைகள் 'முத்துக்கள் பத்து' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது (விலை-ரூ40). அதில் முதல் கதையாக இந்த 'வெயிலோடு போயி' அமைந்துள்ளது. அதை நான் படித்தபோது உண்டான உணர்வு, எவ்வளவு தூரம் திரையில் சாத்தியமாகும் என்ற கவலை இருந்தது. ஆனால் 'பூ' திரைப்படத்தைப் பார்த்தபோது கதை, கவிதையாக மாறி அதில் மாரியாயி(பார்வதி) உயிரூட்டப்பட்ட பிம்பமாக அலைந்து கொண்டிருந்தாள்.
நண்பர்களே முடிந்தால் நீங்கள் சிறுகதையைப் படித்துவிட்டு திரைப்படத்தைப் பாருங்கள். அந்த சிறுகதை உங்களுக்குள் உருவாக்கும் பிம்பம் மிகவும் அற்புதமான தோற்றம் கொண்டது.

ஒரு திரைப்படத்தை அணுகும் முறை அல்லது படம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை:
1) முதலில் திரைப்படத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பாருங்கள்.
2)திரைக்கதையில் ஏதேனும் குளறுபடி இருந்தால் மட்டும் விவாதம் செய்யுங்கள். மற்றபடி உங்கள் கருத்துக்கு திரைப்படத்தை வளைக்கப் பார்க்காதீர்கள்.
3)படம் 'slow'வாக இருக்கிறது என்ற மோசமான மனநிலையைத் தூக்கி எறியுங்கள்.
4)'திரைப்படத்தின் வேகத்தை திரைக்கதைதான் நிர்ணயம் செய்யும்; நிர்ணயம் செய்ய வேண்டும்' என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
5)திரைப்படத்தின் எல்லைகளை தீர்மானிப்பது கதையும், திரைக்கதையும் தான்.
6)இந்த செய்திகள் தரமான சினிமாவிற்க்கு மட்டுமே பொருந்தும். தரமான சினிமா எதுவென்று கேட்கிறீர்களா?
சமீபத்தில் 'பூ'.
மேற்கொண்டு 'பூ' திரைப்படத்தைப் பற்றி நிறைய பேச விரும்பவில்லை. அந்த அற்புதத்தை நீங்கள் நேரடியாக சென்று உணருங்கள். அதுதான் ஒரு நல்ல திரைப்படத்திட்க்கு நாம் கொடுக்கும் மரியாதை.
'தெனாவட்டு' போன்ற மட்டரகமான படங்களையெல்லாம் சன் டி.வி, சூரியன் fm, குங்குமம் மற்றும் தினகரன் போன்ற ஊடகங்கள் மிகையான விளம்பரங்களைக் கொடுத்து நமக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஆனால், நல்ல திரைப்படங்களைப் பற்றி யாரவது நான்கு பேர் தான் பேசுகிறார்கள். நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள். அப்போது தான் தரமான சினிமாவிற்க்கு தரமான ரசிகர்கள் கிடைப்பார்கள். 'பூ' திரைப்படத்தைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். ஆரோக்கியமான விவாதங்களைத் தொடரலாம்.