Saturday, August 29, 2009

மரணத்தின் வாசனை!

மாணிக்கம் அண்ணனுக்கு 90 வயது இருக்கும். ஆம்! நாங்கள் எல்லாம் அவரை 'அண்ணன்' என்று தான் அழைப்போம். என் தாத்தாவும், மாமாவும் அண்ணன் என்று அழைத்ததால் நானும் அப்படியே அழைக்கத் தொடங்கினேன்.

எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே மாணிக்கம் அண்ணனை தெரியும் என்றாலும், அவரின் முகம் என் நினைவில் அழியாமல் நின்றது; ஒரு மரண நிகழ்வின் போது தான்.

எங்கள் வீட்டில் வளர்ந்த மணி (நாய்) வெகு நாளாக ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போதேல்லாம் பெரியவர்களைப் பொறுத்த வரையில் நாய் ஊளையிட்டால் தெருவில் ஒரு பிணம் விழப்போகிறது என்று அர்த்தம். எங்கள் மணி தெருவில் ஊளையிட்டு வயதானவர்களையும், உடல்நிலை சரியில்லாதவர்களும் கதி கலங்க வைத்துக் கொண்டிருந்தது. தெருவில் உள்ளவர்கள் மணி மீது புகார் பத்திரம் வாசிக்க ஆரம்பித்தனர்.

வேறு வழி இல்லாமல் எல்லோருமாக சேர்ந்து மணியின் சாவுக்கு நாள் குறித்தார்கள். 1994 ம் ஆண்டு பொங்கல் விழா முடிந்து கரும்பு சக்கைகள் தெருவெங்கும் சிதறிக் கிடந்தது. மாணிக்கம் அண்ணன் கனமான கடப்பாரையுடன் (குழி தோண்ட உதவும் கருவி) கம்பீரமாக நடந்து வந்தார்.

ஜனவரி மாத வெயில் தெருவில் இறங்கி உலாவிக் கொண்டிருந்தது. வீட்டு வாசலில் படுத்திருந்தது மணி. கடப்பாரைக் கம்பியுடன் மாணிக்கம் அண்ணன் வருவதை கண்டு குலைத்துக் கொண்டே நடுத் தெருவுக்கு வந்தது. அவர் கம்பியால் மணியை அடிக்கும் வரை, மணியைக் கொல்லப் போவது அவர் தான் என்பது எனக்குத் தெரியாது.


கண்ணிமைக்கும் நேரத்தில் மணியின் மூளை சிதறியது. வாயிலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. மணியின் இரண்டு மூன்று பற்கள் நொறுங்கிய நிலையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. வார்த்தைகளற்று நின்று கொண்டிருந்தேன். மணியின் துடிப்பு சிறிது நேரத்தில் அடங்கியது. கொசுவை அடித்து தூக்கிப் போடுவது மாதிரி சர்வ சாதாரணமாக மணியின் கால்களை பிடித்து தரத் தரவென இழுத்துச் சென்றார் மாணிக்கம் அண்ணன்.

தெருவே பெருமூச்சு விட்டது. அன்றைய நாளில் எங்கள் வீட்டை அழ்ந்த மவுனம் கவ்விக்கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவது கூட வேதனையை அதிகரிப்பதாக இருந்தது. நாய் விளையாடித் திரிந்த இடங்களை பார்த்து தனிமை பரிகாசம் செய்து கொண்டிருந்தது. மாணிக்கம் அண்ணனின் முகம் அன்றைய நாள் என் நினைவிலிருந்து அகலாத ஒரு முகமாக பதிந்துவிட்டது.

பின்பு, 'தென்னங்கன்று நடுவது, இளநீர் பறிப்பது, கிணறு தூர் வாருவது, வீடு கட்ட மணல் அள்ளுவது, தாத்தாவுக்கு மருத்துவமனையில் உதவியாக இருப்பது' என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எங்கள் வீட்டுக்கு மாணிக்கம் அண்ணன் வந்து செல்லவது உண்டு. மாணிக்கம் அண்ணன் எந்த வேலையாக எப்போது வந்தாலும் சரி, கடப்பாரைக் கம்பி விழுந்து மூளை சிதறிய மணியின் முகம் தான் என் நினைவுக்கு வரும்.

நாயை அடிக்கும் போது இருந்த கொடூர முகம் மாணிக்கம் அண்ணனின் நிஜமான முகம் கிடையாது. திடமான உடலமைப்புக் கொண்டவர். பழகுவதற்க்கு மிகவும் இனிமையானவர். குரல் கூட அதிராத வண்ணம் இருக்கும்.

அதன் பிறகு 'பள்ளி ஹாஸ்டல், சென்னை வாழ்க்கை' என்று பத்து வருடங்கள் உருண்டோடிவிட்டன.

சமீபத்தில் நான் ஊருக்கு சென்றிருந்த போது எங்கள் தெருவை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு டீ கடை அருகே ஒரு கனமான கம்பை தாங்கிய படி சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்தார் மாணிக்கம் அண்ணன்.

அவருக்கு பக்கத்தில் சென்றேன். கண்கள் பழுபேறியிருந்தன. வயோதிகத்தால் உடல் மிகவும் தளன்று போயிருந்தது. என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. என் தாத்தாவின் பெயரைச்சொல்லி சொன்னதும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். ரெம்பவும் தடுமாறி "நல்லா இருக்கீங்களா தம்பி?"என்றார். தலையாட்டினேன். கையில் இருபது ரூபாய் கொடுத்தேன் வாங்கிக் கொண்டார்.

பிறகு நான் அவரைப் பார்க்கும் சமயங்களில் எல்லாம் சாலையின் ஓரமாக மாமர நிழலில் அமர்ந்து சாலைகளில் செல்பவர்களையெல்லாம் இமைகளை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். யாரிடமும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதில்லை. சாலைகளில் யார் இரைச்சலை எழுப்பிக்கொண்டிருந்தாலும் அதை சலனமே இல்லாமல் அவதானித்துக் கொண்டிருப்பார். துடிதுடித்துக் கொண்டிருந்த மணியின் கால்களைப் பிடித்து நடந்து சென்ற மாணிக்கம் அண்ணனின் கம்பீரத்தை முழுவதுமாக முதுமை விழுங்கிக் கொண்டது.

கடைசியாக அவரை ஒரு சாவு வீட்டில் வைத்துப் பார்த்தேன். "மவுனத்தை எதிர் கொள்வதும், புரிந்து கொள்வதும் தான் முதுமை" என்பது போல அவரின் கண்கள் அந்த சடலத்தின் மீது நிலை குத்தி நின்றது. அந்த தருணத்தில் 'கைகளை முறுக்கிக் கொண்டு நாயின் மூளையை சிதறடித்த மாணிக்கம் அண்ணனுக்கு இதனை வருடம் கழித்து அந்த நாயின் ரத்தக் கவிச்சி அடித்திருக்கும்' என்றே நினைக்கிறன்.

1 comment:

முடிவிலி said...

அருமையான ஒரு பதிவு .........