Monday, May 11, 2009

நிறம் மாறும் தமிழ் சினிமா!

மாற்று முயற்சிகள் தமிழ் சினிமாவில் அரிதாக நடந்து கொண்டிருக்கையில் மிகுந்த நம்பிக்கையோடு வெளி வந்திருக்கும் படம், பசங்க!

spring, summer, fall, winter and spring என்ற கொரியத் திரைப்படத்தைப் போல பசங்க படத்தில் வரும் கதாபாத்திரங்களின் சூழலும் ஜூன், டிசம்பர் என்று வெவேறு கால நிலைகளில் கதை நகர்வது அழகு.


கதா நாயகியை, ஒரு வேட்டை நாயின் மூர்கத்தோடு நாயகன் மோந்து, மோந்து பார்ப்பது போன்ற அருவருக்கத்தக்க காட்சிகள் எதுவும் இந்த படத்தில் இல்லை என்பது ஆறுதல்.

இது தமிழ் சினிமாவை புரட்டிப் போடும் படமா? உலக சினிமாவை நிமிர்ந்து பார்க்க வைக்கும் படமா? என்றால், இல்லை என்பது தான் உண்மை. ஆனால் பசங்க போன்ற மாற்று முயற்சிகள் வெற்றி பெற்றால், தமிழ் சினிமாவில் பல மசாலா சினிமாக்காரர்கள் காணாமல் பொய் விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. " ஏழை வீட்டு விருந்தில் குறை காணக் கூடாது" என்பார்கள். தமிழ் சினிமாவில் கதை சொல்லும் பாணியில் ஏற்பட்ட தேக்க நிலையை பசங்க படம் உடைத்திருக்கிறது. இந்த படத்தில் குறை காண்பது புதிசாலித்தனமுமல்ல... வணிகத் தந்திரங்களை நம்பாமல் புதிய தளத்தில் பயணித்திருக்கும் இயக்குனர் பண்டிராஜ் மற்றும் தயாரிப்பாளர் சசிக்குமாருக்கும் நம்பிக்கையுடன் கூடிய பாராட்டுக்கள்.

தமிழ் சினிமா நிறம் மாறிக் கொண்டிருக்கிறது. மாஸ் ஹீரோக்களும், மசாலா இயக்குனர்களும் மூட்டை கட்ட வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Wednesday, April 22, 2009

உலகப் பொருளாதாரத்தின் பெரும் சரிவிட்க்குப் பின்...

உலகப் பொருளாதாரத்தின்
பெரும் சரிவிட்க்குப் பின்...

பலர்
வேலையிழந்து வருந்துகின்றனர்
சிலர்
இருக்கும் வேலையை இறுகப் பிடித்தபடி
காலத்தைக் கடத்துகின்றனர்

உண்டும், உண்ணாமலும்
பொருள் தேடியலையும்
ஒரு கூட்டத்தையே
தனிமை வியாபித்திருக்கிறது

நண்பர்கள் கூடி
சிரித்துப் பேசிக் கொள்வது கூட
அதிகப் படியான ஒன்றாக
மாறிப்போயிருக்கிறது

உலகப் பொருளாதாரத்தின்
பெரும் சரிவிட்க்குப் பின்...

அமைதியின்மை துரத்த...
வாழ இயலாத வாழ்கையில்
ஓட முடியாத ஓட்டப்பந்தயத்தின்
இடையிடையே...

"ஒரு வாய் சாப்பிட்டுப் போடா" என்று
சொல்பவளாக
அம்மா மட்டுமே இருக்கிறாள்!..

Thursday, April 16, 2009

விரைவில் உங்கள் பார்வைக்கு...

விளம்பரங்களைத் தேடியலையும் இன்றைய பத்திரிக்கைச் சூழலில், நண்பர்கள் ஒன்றிணைந்து தரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சிறந்ததொரு சிற்றிதழை தங்களுக்கு வழங்க உள்ளோம். எக்காரணம் கொண்டும் எழுத்தின் தரம் குறைந்து விடக் கூடாது என்ற காரணத்தால் காலாண்டிதழாக மலர உள்ளது. நுண் அரசியல், நுண் இலக்கியம் மற்றும் நுண் சினிமா என ஆழ்ந்த பதிவுகளைக் கொண்டது. விரைவில் வெளிவர உள்ள இந்த சிற்றிதழின் முன் அட்டைப் பக்கம் உங்கள் பார்வைக்கு...

Saturday, April 11, 2009

கார்த்திக் அனிதா - கொலை வெறித் தாக்குதல்!

நேற்று கார்த்திக் அனிதா திரைப்படத்தை பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தேன். சரி, புது டைரக்டர் ஏதாவது பாக்கற மாதிரியாவது படம் இருக்கும்னு நினச்சு போன எனக்கு.... வேறு மாதிரியான அனுபவம் காத்திருந்து.

வேலைக்கே ஆகாத படமென்று முதல் பத்து நிமிடத்திலேயே தெரிந்து விட்டது. சீரியல் டைப் மேக்கிங். அதிலும் ஹீரோ, ஹீரோயின் பழி வாங்கும் படலம். உண்மையாவே முடியல டைரக்டர் சார்...

சில படங்கள் எல்லாம் உட்கார முடியாத அளவிற்க்கு சோதித்தால் யோசிக்காம வெளிய எழுந்து வந்து விடுவேன். அப்படி எழுந்து வந்த கடைசிப் படம் படிக்காதவன். அந்த படத்தைப் பத்தி இப்போது பேச வேண்டாம் என நினைக்கிறறேன். எல்லாம் என்னோட நல்லதுக்குத் தான். ஏன்னா ரத்தக் கொதிப்பு வந்திரக் கூடாதில்ல...

ஆனா கார்த்திக் அனிதா படம் எரிச்சல் வரமாதிரியெல்லாம் இல்லை. இது வேற டைப். அதாவது அவங்க சீரியசா நடிப்பாங்க ஆனா நம்ம சிருச்சுக்கிட்டே இருப்போம். ரெம்ம்ப பொறுமையா உட்கார்ந்து இடைவேளை பார்த்து விட்டேன். அதற்க்கு அப்புறம் பார்த்தால் பாதி திரைஅரங்கு காலியாகி விட்டது.

நான் பார்த்த படத்திலேயே இந்த படத்தின் தீம் பாடலுக்கு தான் ஆடியன்ஸ் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இன்னொரு கொடுமை என்னன்னா ஸ்ரீவித்யா போட்டோவ இந்த படத்தில், இறந்து போன ஹீரோவின் அம்மாவா காட்டிஇருக்கிறார்கள். ('செத்தும் விட மாட்டிங்களான்னு' ஆங்காகே ஆடியன்ஸ் குரல்கள்) படத்தின் ஒரே ஆறுதல் மனோகரின் காமெடி மற்றும் சிங்கமுத்துவின் காமெடி. லொள்ளுசபா மனோகர் உண்மையிலேயே பின்னிட்டார்.

அப்புறம் கதைஎன்னன்னா.... கதை என்னன்னா... சத்தியமா தெரியல சார். 'neighbourhood love' ன்னு போஸ்டர்ல போட்ட்ருந்தாங்க, அதே மாதிரி கதை என்னன்னு போட்டாங்கன்னா ரெம்ப சவ்ரியமா இருக்கும். ஹீரோயின் மேக் அப். பார்க்க முடியலங்க... ஹீரோயினுக்கு ஜோதிகானு நெனப்பு. ஹீரோவின் நிலைமை பரிதாபம். கூட்டத்தில் தொலைந்த குழந்தை மாதிரி வந்து போகிறார்.

ரயில்வே ஸ்டேஷன் ஐ பார்த்திருப்பீர்களே அதைப் போல ஆடியன்ஸ் திரைஅரங்கினுள் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருந்தார்கள். இன்னும் ரத்தினச் சுருக்காமாக சொல்ல வேண்டுமானால் கார்த்திக் அனிதா படம் ஒரு நவீன கொலைவெறித் தாக்குதல் என்றே சொல்வேன்.

Wednesday, April 8, 2009

மரியாதை ட்ரைலர்: விமர்சனம்!!!

இரண்டு நாட்களிக்கு முன்பாக ரிமோட்டை வைத்துக் கொண்டு எந்த சேனலை பார்ப்பது எனத் தெரியாமல் மாற்றிக் கொண்டே இருந்தேன். அப்போது ராஜ் டி.வி யில் 2000 ல் என டைட்டில் போட்டார்கள். ரிமோட்டை கீழே இறக்கி விட்டு அதை பார்க்க ஆரம்பித்தேன். 'வானத்தைப் போல' படத்தின் ட்ரைலர் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென பார்த்தால் 2009 என ஆரம்பித்து "மரியாதை" ட்ரைலர் ஓட ஆரம்பித்தது. விஜயகாந்த் கருப்பா பயங்கரமாக நடந்து வந்தார். கூடவே அம்பிகாவும் (அகலமாக) நடந்து வந்தார். ஒரு பக்கம் மகன் விஜயகாந்த் (வெளிநாட்டில் ஆர்டர் செய்து வாங்கிய) விக்குடன் மிக நீண்ட....... 'மிக நீண்ட' என்றால் ஒரு பஸ் நீளத்துக்கு??? விசிறி!!! செய்து அப்பா விஜயகாந்துக்கு காற்று வீசி விட்டுக் கொண்டிருக்கிறார்.(அடேகப்பா)

மகன் விஜய்கந்துக்கே வெளிநாட்டில் ஆர்டர் செய்து வாங்கிய விக்கென்றால், அப்பா விஜயகாந்த் என்றால் சும்மாவா? ஒரு கனமான மீசை ("கிடாய் மீசை" என்று எங்க ஊர் பக்கம் சொல்லுவாங்க) அதில் பொங்கலுக்கு அடிக்கும் சுண்ணாம்பு கொஞ்சம் அடித்திருந்தார்கள். ஆதாவது வயதான தோற்றத்தில் நடிக்கிறாராம்???? விஜயகாந்த்...


இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. படத்தில் எம்.ஜி.ஆர் பாடல்(remix) வருகிறது. காண கண் கோடி வேண்டுமென்பார்களே, அதைப் போல எல்லாம் இல்லை. அந்த பாடலைப் பார்ப்பதற்கு பதிலாக நான் கடவுள் அம்சவல்லி போல கண் பார்வை இல்லாமல் போனாலும் சந்தோசமே...

பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலா மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூணைச் சுற்றிவந்து ஆடுவாரே, அதைப் போல மீரா ஜாஸ்மீன் விஜயகாந்தை சுற்றி வந்து ஆடுகிறார். விரைவில்....(அவஸ்தைகள்) என்று திகில் படம் பார்த்த உணர்வோடு அந்த ட்ரைலர் முடிகிறது... விடாது கருப்பு!!.........

Friday, February 20, 2009

தமிழ் சினிமாவில் ரஜினியும்,சிம்புவும் மட்டும் தான் உப்புப் போட்டு சாப்பிடுகிறார்களா?

எம்.ஜி.ஆர்:
தம்பி கணேசா, இப்ப உள்ள நண்டு சுண்டு நடிகனுக்கெல்லாம் உன்னோட நடிப்ப கொஞ்சமாவது சொல்லிக் கொடுத்துட்டுப் போயிருக்கக் கூடாதா? நானும் நடிக்கிறேன் பாருன்னு... ஐயோ அம்மா...

ஏட்டு(அழுதபடியே):
சரியா சொன்னிங்க வாத்தியாரே... நேத்தெல்லாம் ஒரு படம் பாத்தேன்... அதுல்ல நடிச்சவன் மட்டும் என் கையில சிக்குனா... அம்மனக்கட்டயா ரோட்டல போட்டு பொச்சுல அடிச்சுக் கொண்ருவேன்.
-நான் கடவுள் பட வசனம்.

'படிக்காதவன்' படம் பார்க்கும் போது எனக்கும் அதே உணர்வு தான் வந்தது.உங்களுக்கும் வந்திருக்கும்.

நான் கடவுள் திரைப்படத்தை மதுரையில்,காரைக்குடியில்,சென்னையில் 2 முறையென்று மொத்தம் 4 முறை பார்த்தேன். படத்தை ஒவொரு முறை பார்க்கும் போதும் திரை அரங்கில் பெண்கள் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. படிக்காதவன்,வில்லு,சிலம்பாட்டம் மாதிரியான ஆகப் பாடாவதி படங்களுக்கெல்லாம் பெண்கள் கூட்டம் குவியும் போது, நான் கடவுள் மாதிரியான மாற்று முயற்சிகளுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காதது மிகுந்த வேதனையாயிருக்கிறது.

நான் கடவுள் பற்றி ரஜினி கூறுகையில்:
'இந்த படத்தைப் பார்த்த பிறகு, நானும் தமிழ் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்க்காக பெருமைப்படுகிறேன்'.

சிம்பு கூறுகையில்:
பாலா மாதிரி கலைஞன் தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும். தயவு பண்ணி கலைஞனைக் கொண்டாடுங்க.இங்க இருக்கிற யாரையாவது, 'நான் கடவுள்' படத்தின் நாலு ஷாட் கம்போஸ் பண்ணச் சொல்லுங்க. பார்கிறேன்.

தமிழ் சினிமாவில் ரஜினியும்,சிம்புவும் மட்டும் தான் உப்புப் போட்டு சாப்பிடுகிறார்களா? ஏன் சகக் கலைஞனை பாராட்ட யாருக்கும் மானம் வரவில்லை?

'75 வருடங்களாக, 6100 திரைப்படங்களில் (குறிப்பிட்ட சில படங்களைத் தவிர்த்து) நீங்கள் கடை பிடித்து வந்த மட்டரகமான மரபையெல்லாம், பாலா தனது படைப்புச் சுத்தியலால் அடித்து நொறுக்கி விட்டார்' என்ற கோபமா?

'மனநோயாளி(சேது), சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வந்தவன்(நந்தா), வெட்டியான், லங்கா கட்டை உருட்டுபவன், கஞ்சா விற்பவள்(பிதாமகன்), பிணம் தின்னும் அகோரி சாமியார்கள், பிச்சைக் காரர்கள்(நான் கடவுள்)' என்று தமிழ் சினிமாவின் எல்லைகளை பெரும் அதிர்வுடன் கடந்து சென்றவர் பாலா. மறுப்பதற்கில்லை.

பத்திரிக்கையாளர் ஞானி, நான் கடவுளை 'அராஜகமான படம்' என்று குறிப்பிடுக்கிறார். 'ஈரான்' போன்ற மூன்றாம் உலக நாடுகளின் இயக்குனர்கள் மொசான் மாக்மல்பப், மஜீத் மஜிதி ஆகியோர், விளிம்பு நிலை மக்களின் துயர வாழ்க்கையைப் படமாக்கி உலக அளவில் கவனம் பெற்றார்கள். அவர்களையெல்லாம் சிலாகித்துவிட்டு, நம்மவர் பாலா விளிம்பு நிலை மனிதர்களைக் காட்டினால், அராஜகமா? ஞானி அவர்களே தயவு செய்து உளருவதை நிறுத்துங்கள்!

நான் கடவுள் படத்தின் வசனம் ஓன்று...
வயோதிகர்: அழுகாத ராமப்பா. எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பாத்துக்கிட்டு இருப்பான்.

ராமப்பா: பாத்துப் புழுதுறான்.. தேவுடியா மகெ...நம்மள மாதிரி ஈனப் பிறவிக்கெல்லாம் சாமியே கிடையாது.(வெடித்து அழுகிறார்)

இது வெறும் கெட்ட வார்த்தையில்லை. உச்சகட்ட வலியில், வெறுமையில், கிளர்ந்தெழுந்த உக்கிரத்தில் வெடித்த 'ரணம்'. அதனால் தான் திரைஅரங்கில் அதனை பலத்த கைதட்டல். கை தட்டிய பலர் குடும்பத்து ஆட்கள் என்பது இங்கே குறிப்பிட பட வேண்டிய ஓன்று.

படம் நல்லாயிருக்கு, நல்லாயில்லை என்பதையெல்லாம் கடந்து 'கடவுளை' தரிசிக்க வேண்டியது ஆரோக்கியமான பார்வையாளனின் கடமை. நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

Friday, January 9, 2009

சச்சின் மீது திணிக்கப்படும் 'அரசியல்'!

சச்சின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம், பத்திரிக்கைகள் ஓன்று கூடி 'அபார ஆட்டம்', அபார சதம்' என்று கூவுவதும், சிறப்பாக விளையாட இயலாமல் போனால் 'சீனியர் வீரர்கள் ஓய்வு பெறுவார்களா?' என்று கூப்பாடு போடுவதும், ஒரு வகையில் தங்கள் பத்திரிக்கைகளின் விற்பனையை அதிகரிக்க சச்சின் மீது திணிக்கப்படும் 'மறைமுக அரசியல்' இது.

சச்சின் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. அவர் self game விளையாடுகிறார் என்று. இது ஒரு விதமான 'பொது புத்தியில் உருவான வார்த்தை' என்று தான் சொல்ல வேண்டும்.

கிரிக்கெட் விளையாட வருவதற்க்கு முன்பு, 'மகத்தான சாதனைகள் செய்வோம்' என்று சச்சின் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். மகத்தான சாதனைகள் திட்டமிட்டு உருவாவதில்லை. மிக நேர்த்தியான, தன்னை மேம்படுத்திக் கொள்கிற திறமையால் தான் சச்சினுக்கு இத்தனை சாதனைகள் கை கூடியது.


சச்சினின் மிக நீண்ட........ சாதனைப் பட்டியல்!

1. Highest Run scorer in the ODI
2. Most number of hundreds in the ODI 41
3. Most number of nineties in the ODI
4. Most number of man of the matches(56) in the ODI's
5. Most number of man of the series(14) in ODI's
6. Best average for man of the matches in ODI's
7. First Cricketer to pass 10000 run in the ODI
8. First Cricketer to pass 15000 run in the ODI
9. He is the highest run scorer in the world cup (1,796 at an average of 59..87 as on 20 March 2007)
10. Most number of the man of the matches in the world cup
11. Most number of runs 1996 world cup 523 runs in the 1996 Cricket World Cup at an average of 87..16
12. Most number of runs in the 2003 world cup 673 runs in 2003 Cricket World Cup, highest by any player in a single Cricket World Cup
13. He was Player of the World Cup Tournament in the 2003 Cricket World Cup.
14. Most number of Fifties in ODI's 87
15. Appeared in Most Number of ODI's 407
16. He is the only player to be in top 10 ICC ranking for 10 years.
17. Most number of 100's in test's 38
18. He is one of the three batsmen to surpass 11,000 runs in Test cricket, and the first Indian to do so
19. He is thus far the only cricketer to receive the Rajiv Gandhi Khel Ratna, India's highest sporting honor
20. In 2003, Wisden rated Tendulkar as d No. 1 and Richards at No. 2 in all time Greatest ODI player
21. In 2002, Wisden rated him as the second greatest Test batsman after Sir Donald Bradman.
22. he was involved in unbroken 664-run partnership in a Harris Shield game in 1988 with friend and team mate Vinod Kambli,
23. Tendulkar is the only player to score a century in all three of his Ranji Trophy, Duleep Trophy and Irani Trophy debuts
24. In 1992, at the age of 19, Tendulkar became the first overseas born player to represent Yorkshire
25. Tendulkar has been granted the Rajiv Gandhi Khel Ratna, Arjuna Award and Padma Shri by Indian government. He is the only Indian cricketer to get all of them.
26. Tendulkar has scored over 1000 runs in a calendar year in ODI's 7 times
27. Tendulkar has scored 1894 runs in calendar year in ODI's most by any batsman
28. He is the highest earning cricketer in the world
29. He has the least percentage of the man of the matches awards won when team looses a match.. Out of his 56 man of the match awards only 5 times India has lost.
30. Tendulkar most number man of match awards(10) against Australia
31. In August of 2003, Sachin Tendulkar was voted as the "Greatest Sportsman" of the country in the sport personalities category in the Best of India poll conducted by Zee News.
32. In November 2006, Time magazine named Tendulkar as one of the Asian Heroes.
33. In December 2006, he was named "Sports person of the Year
34. The current India Poised campaign run by The Times of India has nominated him as the Face of New India next to the likes of Amartya Sen and Mahatma Gandhi among others.
35. Tendulkar was the first batsman in history to score over 50 centuries in international cricket
36. Tendulkar was the first batsman in history to score over 75 centuries in international cricket:79 centuries
37. Has the most overall runs in cricket, (ODIs+Tests+ Twenty20s) , as of 30 June 2007 he had accumulated almost 26,000 runs overall.
38. Is second on the most number of runs in test cricket just after Brian Lara
39. Sachin Tendulkar with Sourav Ganguly hold the world record for the maximum number of runs scored by the opening partnership. They have put together 6,271 runs in 128 matches
40. The 20 century partnerships for opening pair with Sourav Ganguly is a world record
41. Sachin Tendulkar and Rahul Dravid hold the world record for the highest partnership in ODI matches when they scored 331 runs against New Zealand in 1999
42. Sachin Tendulkar has been involved in six 200 run partnerships in ODI matches - a record that he shares with Sourav Ganguly and Rahul Dravid
43. Most Centuries in a calendar year: 9 ODI centuries in 1998
44. Only player to have over 100 innings of 50+ runs (41 Centuries and 87 Fifties)(as of 18th Nov, 2007)
45. the only player ever to cross the 13,000-14,000 and 15,000 run marks IN ODI.
46. Highest individual score among Indian batsmen (186* against New Zealand at Hyderabad in 1999).
47. The score of 186* is listed the fifth highest score recorded in ODI matches
48. Tendulkar has scored over 1000 ODI runs against all major Cricketing nations.
49. Sachin was the fastest to reach 10,000 runs taking 259 innings and has the highest batting average among batsmen with over 10,000 ODI runs
50. Most number of Stadium Appearances: 90 different Grounds
51. Consecutive ODI Appearances: 185
52. On his debut, Sachin Tendulkar was the second youngest debutant in the world
53. When Tendulkar scored his maiden century in 1990, he was the second youngest to score a century
54. Tendulkar's record of five test centuries before he turned 20 is a current world record
55. Tendulkar holds the current record (217 against NZ in 1999/00 Season) for the highest score in Test cricket by an Indian when captaining the side
56. Tendulkar has scored centuries against all test playing nations.[7] He was the third batman to achieve the distinction after Steve Waugh and Gary Kirsten
57. Tendulkar has 4 seasons in test cricket with 1000 or more runs - 2002 (1392 runs), 1999 (1088 runs), 2001 (1003 runs) and 1997 (1000 runs).[6] Gavaskar is the only other Indian with four seasons of 1000+ runs
58. He is second most number of seasons with over 1000 runs in world.
59. On 3 January 2007 Sachin Tendulkar (5751) edged past Brian Lara's (5736) world record of runs scored in Tests away from home
60. Tendulkar and Brian Lara are the fastest to score 10,000 runs in Test cricket history. Both of them achieved this in 195 innings
61. Second Indian after Sunil Gavaskar to make over 10,000 runs in Test matches
62. Became the first Indian to surpass the 11,000 Test run mark and the third International player behind Allan Border and Brian Lara.
63. Tendulkar is fourth on the list of players with most Test caps. Steve Waugh (168 Tests), Allan Border (158 Tests), Shane Warne (145 Tests) have appeared in more games than Tendulkar
64. Tendulkar has played the most number of Test Matches(144) for India (Kapil Dev is second with 131 Test appearances) .
65. First to 25,000 international runs
66. Tendulkar's 25,016 runs in international cricket include 14,537 runs in ODI's, 10,469 Tests runs and 10 runs in the lone Twenty20 that India has played.
67. On December 10, 2005, Tendulkar made his 35th century in Tests at Delhi against Sri Lanka. He surpassed Sunil Gavaskar's record of 34 centuries to become the man with the most number of hundreds in Test cricket.
68. Tendulkar is the only player who has 150 wkts and more than 15000 runs in ODI
69. Tendulkar is the only player who has 40 wkts and more than 11000 runs in Tests
70. Only batsman to have 100 hundreds in the first class cricket.

7-13 ஏப்ரல் 2008 த சன்டே இந்தியன் பத்திரிக்கையில், யார் சிறந்த ஆட்டக்காரர்? சச்சினா? திராவிடா? என்றொரு அலசல் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
"10 ஆயிரம் ரன்களைக் குவிப்பது சாதாரணமான விஷயமல்ல. திராவிட் ஒன்றும் சாதாரணமான வீரர் அல்ல. திராவிட் பல மகத்தான சின்னங்களை உருவாகிய நிபுணர். அவர் இந்திய அணியை தன் தோளில் சுமந்திருக்கிறார். ஆனால், கிரிக்கெட் ஆட்டத்தை தன் தோளில் சுமக்க சச்சின் போன்ற ஒருவர் தேவைப்படுகிறார்".

மேலும், 1998ல் நடந்த சார்ஜா போட்டியில் இந்திய அணியிடம் மிக மோசமாக விளையாடித் தோற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக் சொன்னது:
"நாங்கள் இந்திய அணியிடம் தோற்க்கவில்லை. மாறாக 'சச்சின்' என்ற தனி நபரிடம் தோற்று நாடு திரும்புகிறோம்".

self game விளையாடி இத்தனை பாராட்டுக்களை சம்பாதிக்க முடியுமா என்ன? பொது புத்தியில் பேசுவது என்றுமே தவறானது. பத்திரிக்கை அரசியலைத் தாண்டி சிந்தித்து பேசுவதே நலம். சச்சின் நம்நாட்டின் அடையாளச் சின்னம். அவர் இந்தியாவிட்க்காக விளையாடுவதில் நாம் பெருமை கொள்வோம்.

Thursday, January 1, 2009

நான் கடவுள்! (அஹம் பிரம்மாஸ்மி)



பாலாவின் படைப்பாளுமையைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. கங்கை நதியின் ஓரத்தில் வாழும் அஹோரி (aghoris) என்னும் பிணம் தின்னும் மனிதர்களைப் பற்றிய கதைதான் 'நான்கடவுள்'.

மேலும் இந்தக் கதை, எழுத்தாளர் ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். 'ஏழாம் உலகம்' நாவலில் முக்கிய கதாபாத்திரங்களான பிச்சைக்காரர்களைப் பற்றிய வருணனைகள் மிகவும் அந்தரங்கமான முறையில் எழுதப்பட்டிருக்கும். சகிக்க முடியாத உணர்வுகளின் தொகுப்பாக, விளிம்புநிலை மக்களின் பதிவாகவும் இருக்கும். படிக்கவே திணறும் இந்த நாவலைத் தழுவி திரைப்படமே உருவாக்கியிருக்கிறார்,பாலா. "பேசாப் பொருளைப் பேசத்துணிந்தேன்" என்று சொன்ன பாரதியைப் போல.


நேற்று இரவு பாலாவின் "நான் கடவுள்" பாடல் வெளியீட்டு விழாவைப் பார்த்ததிலிருந்தே, மனதுக்கு என்னமோ போல் இருந்தது. பாலாவைப் பற்றியே வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். 'பாலாவின் படைப்பாளுமை பேசித் தீராது' என்று தெரிந்தும்.
இடைமறித்து, நண்பன் சொன்னான்: மச்சி எதையும் குழப்பிக்காத. வில்லு ட்ரைலர் பாரு எல்லாம் சரியாகிரும்...

ஒன்றும் சொல்வதற்கில்லை என்பதைப் போல வாயை மூடிக்கொண்டேன்.


Aghori @ AGHORIES (YouTube)
http://in.youtube.com/watch?v=9GlKmMVzrK0

Monday, December 22, 2008

ஒரு கோப்பை மதுவும், விடுதலைக்கான வழியும்!

இறுக்கம் தளர்ந்து
கண்கள் பணிகின்றன

சூழ்ந்தவை யாவும்
நீர்க்குமிழ்களைப் போல
காணாமல் போகின்றன

போகிற போக்கில்
போய்விட்டால்
வலி ஏதுமில்லை

வளைக்கிற போதெல்லாம்
வளைய மறுக்கிறது
மனதும், உடம்பும்

மன்றாடினாலும்
காதுக்குக் கேட்பது
மனதுக்குக் கேட்பதில்லை

மனம் தூங்கிவிட்டால்
துக்கமேதுமில்லை

இருப்பதால் தான்
எல்லாம்.
இல்லாமல் போய்விட்டால்...

அதற்க்காகத்தான்
கொஞ்சம்
கொஞ்சமாக
ஓன்று
இரண்டு என்று
பல அவுன்ஸ்களாய்
பிராந்திப் புட்டிக்குள்
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்










ஓருலகம் உடைந்து
சில்லுச் சில்லாய்
சிதறிக் கிடைக்கிறது

எந்தப் பிரங்கையுமற்று
கண்கள்
தூக்கதிட்க்காக ஏங்குகின்றன.

Saturday, December 20, 2008

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகும்- பாகம்2

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
நேர்பட பேசு
குற்றென நிமிர்ந்துநில்
தாழ்ந்து நடவேல்
தீயோர்க் கஞ்சேல்
ரவுத்திரம் பழகு
_ மகாகவி சுப்பிரமணியபாரதியார்.

'ராஜிவை விடுதலைப் புலி கொன்னுட்டாங்க'ன்னு காங்கிரஸ்காரர்கள் பல்லவி பாடுகிறார்கள். அவர்கள் தீவிரவாதி என்கிறார்கள். ஒட்டு மொத தமிழ் இனத்தையே அழிப்பதட்க்காக அமைதிப்படை என்ற பெயரில், இலங்கைக்கு இரண்டு லட்சம்பேரை அனுப்பினார் ராஜிவ்; இது சர்வதேச தீவிரவாதமில்லையா? பெரியாரின் குச்சிதான் இன்று நிமிர்ந்து துப்பாக்கியாக பிரபாகரன் கையில் உள்ளது. அவன் நமது குலதெய்வம் -சீமான்.

ஒரு தேசத் தலைவரின் கொலைக்காக தமிழ் இனத்தையே அழிக்கத் துணை போவதில் எந்த நியாயமும் இல்லை. சீமான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. உண்மையச் சொன்னால் காங்கிரசுக்கு வலிக்கிறதா?

சீமான், தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியது சட்டத்திற்கு புறம்பானது என்றால், காங்கிரஸ்காரர்கள் சீமானின் காரைக் கொழுத்தியது சுத்த அயோக்கியத்தனம்!


தினமலர் பத்திரிக்கையைப் பொறுத்த வரையில், தன் அரிப்பிற்கு யாரையாவது சொறிய வேண்டும். 18.12.08 அன்றைய தினமலரின் தலைப்புச் செய்தி: சீமான் கைது ஆவாரா? என்பது. தமிழ் உணர்வாளர்களை, கலகக்காரர்களாக அடையாளப் படுத்துவதில் யாருக்கு லாபம்? தினமலர் காசுக்கு 'பீ' தின்பதை நிறுத்த வேண்டும்.

பாவம். தினகரன் பத்திரிக்கைக்கு 'சீமான் காரை கொழுத்தியது யார்?' என்றே தெரியாது. 20.12.08 அன்று 'காரை கொழுத்திய மர்ம ஆசாமிகள்' என்று எழுதுகிறார்கள். தொலையட்டும்.

தேர்தலுக்காக பெட்டியை மாற்றிக் கொண்டும், கூட்டணி வைத்துக் கொண்டும், மரியாதை தெரியாமல் பேசும் ஜெயலலிதா போன்ற தேசத்துரோகிகள், விடுதலைப் புலிகளை வார்த்தைக்கு வார்த்தை 'தீவிரவாதிகள்' என்று தூற்றுகிறார்கள். கொள்கைக்காக போராடுபவர்களை, பணத்திற்காக மாரடிப்பவர்களால் ஒருபோதும் வெல்ல முடியாது. முடியவே முடியாது.

ஈழப் பிரச்சனையில் விஜயகாந்தின் கருத்தைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. அவரின் பிதற்றல்களை எல்லாம் விகடன் வரிந்து கட்டிக் கொண்டு வெளியிடுகிறது. நாட்டின் சாபக்கேடு.

சினிமா கூட்டத்தில் பேசி கைது ஆனால் தான் நடிகர்கள் எல்லாம் போராடுவார்களா? உணர்ச்சிவயப்பட்ட தமிழன் என தனக்குத்தானே போலிச் சயாங்களைப் பூசிக்கொண்டு அலையும் புரட்சிதமிழன் சத்தியராஜ் எங்கே போனார்? தனி ஆளாக உண்ணாவிரதம் இருந்து அரசியல் கணக்குப் போட்ட 'ஒன்டிப்புலி' விஜய் எங்கே போனார்? யோசியுங்கள்!

காது கேளாதவர்கள் அல்லது காது கேளாது போல் நடிப்பவர்களுக்கு:

1) மக்களுக்க்காகதான் அரசாங்கம்.
2) கொள்கைக்காக போராடுபவர்களை, பணத்திற்க்கு மாரடிப்பவர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது.
3) பிரதமர் மன்மோகன்சிங் தலைமைக்கு டப்பிங் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
4) ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கைத்துறை பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
5) அடிப்படை பேச்சுரிமைச் சட்டம் அமலுக்கு வரவேண்டும்.
6) இல்லையென்றால் இந்தியாவை 'பாசிச' நாடு என்றழைக்க உரிமை கொடுங்கள்.

Friday, December 12, 2008

சென்னைக்கு வந்து போனவர்கள் சொன்னது...


இந்த நகரத்திற்க்கு
வந்து போனவர்களெல்லாம்
என்னிடம்
சிலாகித்துப் பேசுவதுண்டு

மெரினா கடற்க்கரை
அண்ணா சமாதி
ஸ்பென்சர் பிளாசா
ரங்கநாதன் தெரு
போகவர
நிமிடத்திட்க்கொரு ரயிலென்று

அவர்களுக்கென்ன தெரியும்
வாடகை வீடு
தேடியலைவதிலும்
மின்சார ரயிலின்
தொங்களிலுமே
என் காலம் போன கதை.

Monday, December 8, 2008

நண்பா இந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு!

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்டிக்
நிறைய ஐஸ்
ஒரு புட்டி
பிராந்தி
வத்திப்பெட்டி\சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்க்கு நீ
நண்பா
இந்த சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
-கவிஞர் நகுலன்

2004ம் ஆண்டு கல்லூரி ஹாஸ்டலில் தான் முதன் முறையாக விஜேந்திரனைச் சந்தித்தேன். அப்போது விஜேந்திரன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, "உனக்கு என்னன்ன கெட்ட பழக்கம் இருக்கு?" சற்று தடுமாறிய நான் "ரெம்ப பேசுவேன்" என்றேன். மறுத்த விஜேந்திரன் "அது இல்ல தண்ணி, தம் வேற ஏதாவது?" என்று கேட்க, நான் இல்லை என தலையாட்டினேன். அன்று அவன் பார்த்த பார்வைக்கு இன்று தான் அர்த்தம் புரிகிறது.(சரியான 'பழம்' வந்து மாட்டிக்கிட்டான் என்பதே அது)


பின் நாட்களில் ஹாஸ்டல் வார்டன் மற்றும் வாட்ச்மேனிடம் சிக்காமல் சரக்கை பாதுகாப்பாக அறைக்குக் கொண்டுவருவதில் நான், விஜயின் வலது கரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.(ஒரு 'பாடிகாட்' போல) இதில் கவனிக்க வேண்டிய ஓன்று நாங்கள் ஒரு நாளும் மாட்டிக் கொண்டதில்லை.

விஜயின் விருப்பமான ப்ராண்ட் 'signature' விஸ்கி. கைச் செலவு குறையக் குறைய 'vintage'ஆக மாறி கடைசியில் 'nepoleon'இல் வந்து நிற்கும். 2005 மார்ச் 3ம் தேதி விஜயின் பிறந்த நாள். ஹாஸ்டலின் முதல் மாடியே போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. யாவரும் போதையில் மூழ்கிப் போன பின்னிரவில், " விஜேந்திரன் பிறந்த நாள்னா பசங்களுக்கு மறக்க முடியாத நாளா இருக்கணும்!" என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான், நான் 'யாருக்காவது உதவலாமே?' என்றேன். ( விஜயின் அடுத்த இரண்டு பிறந்த நாளுக்கும் பல்லாவரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்க்கு அரிசி மூட்டைகள் வங்கிக் கொடுத்தான்.)

எனக்குத் தெரிந்து விஜயுடனான மூன்றாண்டுகளில் அவன் குடிக்காமல் இருந்தது, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதங்கள் மட்டும் தான்.

விஜயின் வகுப்பு நண்பர்களில் ஒரு சிலரைத் தவிர பலரும் ஓசியில் குடிப்பதற்காகவே அவனோடு அலைந்து கொண்டிருந்தனர். ஓசிக் குடியோடு நிறுத்தாமல் அறைகளில் வாந்தி எடுத்து வைப்பதும், நான் சுத்தம் செய்வதுமாக சில விஷயங்களில் விஜயோடு சண்டை போட்டிருக்கிறேன்.'ஓசிக் குடிகளிடம்' நான் எத்தனையோ முறை சொல்லியும் அவர்கள் எங்கள் அறைக்கு வருவதை நிறுத்தவே இல்லை.

விஜய் ஒரு முறை 'காக்டெயில்' கலக்குவதாகச் சொல்லி பிராந்தி+விஸ்கி+ஒயின்+பழச்சாறு+உப்பு என எல்லாவற்றையும் கலந்து கொடுக்க அறையில் உள்ள எல்லோரும் வாந்தியும், பேதியுமாக அலைந்தது போன்ற சம்பவங்களும் உண்டு.

குடித்து விட்டு போதையில் விழுந்து கிடப்பவர்களை மட்டுமே பார்த்த எனக்கு, மது அருந்தி விட்டு விஜய்,கோகுல்,வினோத்,பாண்டி என்று யாவரும் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும், வெளிநாடுகளில் உள்ள வாய்ப்புகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தது, ஆச்சரியத்தை தருவதாகவே இருந்தது.

கோழியின் கால்கள் குப்பையைக் கிளறுவதைப் போல, மது பலருக்கும் வேதனையான நினைவுகளை கிளறிவிடுகிறது. அப்போதெல்லாம் அவர்கள் ஏதாவது புலம்புவதும்,வாய் விட்டு அழுவதும், விழுந்தடித்து தூங்கிவிடுவதுமாக அமைந்து விடுகிறது. ஆனால், விஜயைப் பொறுத்த வரை 'மது' என்பது கண்ணுக்குத் தெரியாத உற்சாகத்தை கொணரும் ஒரு மாயத் திரவமாகவே இருந்து வந்தது. அதை பல நேரங்களில் நான் நேரடியாகவே பாத்திருக்கிறேன்.

விஜய் குடிப்பதோடு மட்டுமே நிறுத்தி விடாமல் படிப்பிலும் சிறந்து விளங்கினான். சென்னையில் B.com., முடித்தான். சிங்கப்பூரில் M.B.A., முடித்து விட்டு தற்போது அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். இப்போது குடிப்பதில்லயாம்!? நம்புகிறோம்!

விஜய் தன்னையும் அறியாமல் ஒரு பழமொழியைப் பின் பற்றியிருக்கிறான்.'களவும் கற்று மாற' என்பதே அது.

இவை எல்லாம் நேற்று நடந்ததைப் போலவே இருக்கிறது. ஆனால், காலம் நமக்கு மிச்சம் வைப்பது வெறும் நினைவுகளை மட்டும் தான். அந்த நினைவில் விஜயின் உற்சாகமும், பிராந்தி கிளாசின் மனமும் நிறைந்திருக்கிறது. நினைவில் அமிழ்ந்து போவது போல சுகம் எதுவும் உன்ன்டா இந்த உலகில்?

Sunday, November 30, 2008

தரமான படம் பார்க்க விரும்புகிறவர்கள் மட்டும் வரட்டும்!

'தங்கராசு மாமா, தங்கராசு மாமா' என்று ஒவ்வொரு நொடியும் உருகும் 'மாரியாயி' என்ற தூய ஆத்மாவின் கதை தான் 'பூ'.

எழுத்தாளர் ச.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போயி' என்ற சிறுகதை, இயக்குனர் சசியால் 'பூ'வாக மலர்ந்திருக்கிறது. திலகவதி i.p.s அவர்களால் ச.தமிழ்செல்வனின் சிறந்த பத்து கதைகள் 'முத்துக்கள் பத்து' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது (விலை-ரூ40). அதில் முதல் கதையாக இந்த 'வெயிலோடு போயி' அமைந்துள்ளது. அதை நான் படித்தபோது உண்டான உணர்வு, எவ்வளவு தூரம் திரையில் சாத்தியமாகும் என்ற கவலை இருந்தது. ஆனால் 'பூ' திரைப்படத்தைப் பார்த்தபோது கதை, கவிதையாக மாறி அதில் மாரியாயி(பார்வதி) உயிரூட்டப்பட்ட பிம்பமாக அலைந்து கொண்டிருந்தாள்.

நண்பர்களே முடிந்தால் நீங்கள் சிறுகதையைப் படித்துவிட்டு திரைப்படத்தைப் பாருங்கள். அந்த சிறுகதை உங்களுக்குள் உருவாக்கும் பிம்பம் மிகவும் அற்புதமான தோற்றம் கொண்டது.



ஒரு திரைப்படத்தை அணுகும் முறை அல்லது படம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை:

1) முதலில் திரைப்படத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பாருங்கள்.
2)திரைக்கதையில் ஏதேனும் குளறுபடி இருந்தால் மட்டும் விவாதம் செய்யுங்கள். மற்றபடி உங்கள் கருத்துக்கு திரைப்படத்தை வளைக்கப் பார்க்காதீர்கள்.
3)படம் 'slow'வாக இருக்கிறது என்ற மோசமான மனநிலையைத் தூக்கி எறியுங்கள்.
4)'திரைப்படத்தின் வேகத்தை திரைக்கதைதான் நிர்ணயம் செய்யும்; நிர்ணயம் செய்ய வேண்டும்' என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
5)திரைப்படத்தின் எல்லைகளை தீர்மானிப்பது கதையும், திரைக்கதையும் தான்.
6)இந்த செய்திகள் தரமான சினிமாவிற்க்கு மட்டுமே பொருந்தும். தரமான சினிமா எதுவென்று கேட்கிறீர்களா?
சமீபத்தில் 'பூ'.

மேற்கொண்டு 'பூ' திரைப்படத்தைப் பற்றி நிறைய பேச விரும்பவில்லை. அந்த அற்புதத்தை நீங்கள் நேரடியாக சென்று உணருங்கள். அதுதான் ஒரு நல்ல திரைப்படத்திட்க்கு நாம் கொடுக்கும் மரியாதை.

'தெனாவட்டு' போன்ற மட்டரகமான படங்களையெல்லாம் சன் டி.வி, சூரியன் fm, குங்குமம் மற்றும் தினகரன் போன்ற ஊடகங்கள் மிகையான விளம்பரங்களைக் கொடுத்து நமக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால், நல்ல திரைப்படங்களைப் பற்றி யாரவது நான்கு பேர் தான் பேசுகிறார்கள். நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள். அப்போது தான் தரமான சினிமாவிற்க்கு தரமான ரசிகர்கள் கிடைப்பார்கள். 'பூ' திரைப்படத்தைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். ஆரோக்கியமான விவாதங்களைத் தொடரலாம்.

Monday, November 24, 2008

நடிகர் விஜய் அவர்களே தயவுசெய்து அரசியலுக்கு வராதீர்கள்!

நடிகர் விஜய் அவர்களுக்கு,
எந்த ஒரு நாட்டில் கலையும், அரசியலும் சிறந்து விளங்குகிறதோ அந்த நாட்டில் உள்ள மக்கள் அறிவிலும், செல்வதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், நமது தமிழ்நாட்டில் 'திரைப்படம்' எனும் 20ம் நூற்றாண்டின் ஒரு ஆகச்சிறந்த கலையை மிகமோசமாக பயன்படுத்தியவர்களில் நீங்களும் ஒருவர் என்பது மறுப்பதற்கில்லை.

வாழ்க்கையை பதிவுசெய்யும் கலையை பொழுதுபோக்குக் களமாக, நடனம் எனும் நளினத்தை குரங்காட்டமாக மாற்றிய பெருமை உங்களையே சேரும்.

ஒரு மனிதன் எந்தத் துறையைச் சார்ந்திருக்கிறானோ அந்தத் துறையை தன்னால் இயன்றவரை சில கட்டங்களாவது உயர்த்துவானேயானால், அவன் மதிப்பிற்குரியவன் ஆவான். பாலுமகேந்த்ரா, மகேந்திரன், மணிரத்னம், பாலா போன்ற சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் உயரத்தை அதிகரிக்க முயலும் போதெல்லாம் குரங்காட்டம் மூலம் நிங்கள் அதனை தெருவுக்கு இழுத்து வந்து விடுகிறீர்கள். இந்த உண்மையை எந்த ஒரு தரமான சினிமா விரும்பியும் மறுக்கமாட்டான்.

அடுத்ததாக அரசியல். அரிசி கொடுத்தவன், அயன் பாக்ஸ் கொடுத்தவன், காலை ஏழு மணிக்கே மட்டன் பிரியாணி சாப்பிட்டு விட்டு 8லிருந்து 4மணிவரை உண்ணாவிரதம் இருந்தவனெல்லாம் அரசியல் நடத்தினா நாடு எப்படி இருக்கும்.

சினிமாவைக் கெடுத்து போதாதென்று அரசியல் வேறு. விஜய் அவர்களே உங்கள் தந்தையைப் போன்று குடும்ப உறவுகளை!? சித்தரிக்கும் (கற்பழிப்பு காட்சிகள் நிறைந்த) படங்களை எடுக்கும் சிந்தனைவாதிகள் உங்கள் பின்னே இருப்பது தான் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

உங்களுக்காக ரசிகர்கள் 37ஊர்களில் உண்ணாவிரதமிருந்தார்கள். சராசரியாக 50 பேர் என்று கணக்கிட்டால் மொத்தம் 37 X 50 = 1850 பேர். டெப்பாசிட் பணம் கூட கிடைக்காது சார்.

நான் கூறுவது இல்லாமல், உங்கள் கணக்கு சரியாகுமானால் எங்கள் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. ஏற்கனவே அரசியல் கெட்டுவிட்டது. நீங்களும் கெடுக்க வேண்டாம். உங்களுக்கு உரிமை இருக்கிறது தான். மறுப்பதற்கில்லை. நேர்மையானவர்கள் வரட்டும்.

நிஜத்தில் நடித்தது போதும்; இனியாவது சினிமாவில் நடிக்க முயற்சி செய்யுங்கள். நான் வேண்டுமானால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களில் பயன்படுத்திய 'ஒரே பாடலில் பணக்காரனாகும்' பாடல் கேசட்டை வாங்கித்தருகிறேன். வைத்துக்கொண்டு பெரிய ஆள் ஆகிவிடுங்கள்.

"சேரி இல்லா ஊருக்குள்ள
பொறக்க வேண்டும் பேரப்புள்ள" என்று உங்கள் படங்களுக்கு தொடர்ந்து ஜால்ரா பாடல்களை எழுதி வரும் பா. விஜய்யைப் போலவே நானும் ஆசைப்படுகிறேன். அதனால் தான் சொல்கிறேன்.நீங்கள் அரசியலுக்கு வராதீர்கள்!

Saturday, November 15, 2008

அந்த அயோக்கியனை தேடிக் கொண்டிருக்கிறேன்!


இந்த உலகத்தில்
யாரைவிடவும்
என்னை அதிகமாய் வெறுப்பவன்
ஒருவன் இருக்கிறான். அவன்,
நான் சிரிக்கும் பொழுது
என்னை உறுத்தும்படியாகப் பார்க்கிறான்
நிலைகுலைந்து கண்கள் கலங்கும் தருணங்களில்
பரிகாசம் செய்கிறான்.

வெயில் எரிக்கும் சமயங்களில்
மூச்சுக் காற்றால்
மேலுமென்னை சுட்டெரிக்கவும்,
இரவுகளில் தனிமைப்படுத்தவும்
அவன் தயங்குவதேயில்லை.

முற்றங்களில் தொலைத்துவிட்டுப் போகவும்
நான் வாழ்நாள் முழுக்க நோகவும்
அவன் தன்னை உரமேற்றிக் கொண்டிருக்கிறான்.

என்னைப் பலகீனப்படுத்தும்
அவனிடம் ஒரே ஒரு உதவிகேட்டேன்.
"நான் மீள முடியாதபடி
தயக்கம் என்னை
இரு கரங்களாலும் பற்றிக் கொண்டுள்ளது.
என்னைத் தயக்கங்களிலிருந்தும், தனிமையிலிருந்தும்
விடுவிக்கும் ஒருத்தி இருக்கிறாள்.
அவளிடம் என் காதலைச் சொல்ல
உதவி செய்" என்றேன்.
மறுத்தான் அவன்.

அவன் கால்களில் விழுந்து அழுதேன்.
எந்த அசைவுமின்றி நின்றுகொண்டிருந்தான்.

அந்த அயோக்கியன் எனக்குள் இருக்கிறான்,
நான் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!

Tuesday, November 11, 2008

வாழ்க்கை கருணையற்றது!


டென்சிங். இரண்டாம் உலகப் போரில் விமானத்தில் பறந்தபடி குண்டு மழை பொழிந்த அமெரிக்க வீரரென நினைத்து விடாதிர்கள். காரைக்குடியில் எனது சிறு வயது தோழன்.இப்போது மினி லாரி ஓட்டுனராக உள்ளான்.

நீலகிரி மாவட்டம் உயிலட்டி கிராமத்திற்க்கு, காரைக்குடியிலிருந்து தேக்கு கட்டைகளை எடுத்துக்கொண்டு ஒரு இரவில் இருவரும் பயணமானோம். அன்றைய இரவு பேசிக் கழித்த படியே இருளில் கரைந்தது. எதிரே வரும் வாகனங்களின் விளக்கொளிகள், கண்களில் வலிஏறச் செய்திருந்தன. தூக்கம் கண்களை அழுத்த தேநீர் அருந்தி விட்டு மீண்டும் உதகை நோக்கி பயணித்தோம். காற்றைக் கிழித்தபடி லாரி விரைந்து கொண்டிருந்தது.

லாரி ஓட்ட ஆரம்பித்த புதிதில் தடுமாறிய டென்சிங், இப்போது ஒரு இரும்புக் குதிரையை போல் லகுவாக செலுத்தினான்.அவனுக்கு முதல் மலை பயணம் என்பதால் இயற்கையை ரசிக்க விடாத படி பயம் குளிரைப்போல இருவரின் உடலுக்குள்ளும் கசிந்து கொண்டிருந்தது.

உயிலட்டி நாங்கள் நினைத்ததை விடவும் மிகவும் அழகாக இருந்தது. தேக்கு கட்டைகளை இறக்கி வைத்த பின்பு படுகர் இனத்தை சேர்ந்த திப்பையன் என்பவரது முன்னூறு ஆண்டுகள் பழைமையான வீட்டிற்க்கு சென்ற போது, வீடு முழுக்க மயக்கும் வஸ்துவின் வாசனை எழுந்தது. திப்பயனிடம் கேட்டபோது ஜாடி நிறைய கஞ்சா இலைகளை எடுத்து காண்பித்தார்.அன்று முழுக்க திப்பயன்,"சரக்கு வாங்கித்தா, சிகரெட் வாங்கித்தா" என்று எரிச்சலூட்டினான். பொறுமையிழந்த டென்சிங், திப்பயனை அருகில் அழைத்து வந்து திட்டி விட்டான். திப்பையனுக்கு போதை இறங்கிப்போனது.

அன்று மாலை, மலையிலிருந்து கிழே இறங்கிக்கொண்டிருந்தோம். குளுமையான காற்று நாசியில் ஏறி அற்புதமான சுகந்தத்தை தந்து கொண்டிருந்தது. நான்கு நாட்கள் இரவு பகலாக வண்டி ஒட்டிய காரணத்தால் தூக்கத்தை கட்டுப்படுத்திய படி லாரியை ஓட்டிக்கொண்டிருந்தான். மறுநாள் காலை காரைக்குடிக்கு செல்ல வேண்டும் என்பதால் தூக்கத்தை மறந்திருந்தான்.இரவு ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய் கரி அங்காடியில் காரைக்குடிக்கு எடுத்துச்செல்ல சரக்கு ஏதேனும் உள்ளதா என கேட்ட பொழுது ஏற்கனவே சரக்குகள் எடுத்து செல்லப்பட்டிருந்தன.ஏமாற்றத்துடன் காரைக்குடி நோக்கி விரைந்து கொண்டிருந்தது லாரி.


உறவுகள்,உணவு,உறக்கம்,சிரிப்பு என எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு அவன் நாயாய் அலையும் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டது யாரால்? டென்சிங் வசிக்கும் தெருவில் அவனது பெற்றோரைத் தவிர அனேகபேர் ஆசிரியர்கள். டென்சிங் மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு வீரன். இளங்கலை பொருளாதாரத்தில் பல்கலைகழக அளவில் இரண்டாவது மதிப்பெண் பெற்றவன். அவனுடைய கனவுகள் யாவும் தன் ஒரு வழக்கறிஞர் ஆவதே.

அவனது பெற்றோர்கள் அவனை M.B.A., படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். அவர்கள் என்ன செயவார்கள்?சுற்றி உள்ளவர்கள் M.B.A., பொறியாளர் என்று பெருமை பேசும் பொழுது, படிப்பறிவு இல்லாத அவனது பெற்றோர்களுக்கு அப்போது தெரியவில்லை. சிபாரிசு இல்லாத நடுத்தர குடும்பங்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பென்று.

ஒரே ஒரு பையனை வெளியூர் அனுப்பி படிக்க வைக்க விரும்பாத அவனது பெற்றோர்கள் டென்சிங்கின் கல்லூரி சான்றிதழை மறைத்து வைக்க பிரச்சனை பூதாகரமானது.பக்கத்துக்கு வீட்டு ஆசிரியர்கள் நள்ளிரவு பஞ்சாயத்து நடத்தினார்கள். குடித்திருந்த அவனது அப்பா அவனின் தோளை பிடிக்க முயன்று தடுமாறி கீழே உள்ள கல்லில் விழுந்தார்.பின் மண்டையில் அடி பட்ட அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, துணிகளை அள்ளிக்கொண்டு அவனது அம்மாவும் வீட்டை விட்டு வெளியேறஇப்போது அந்த வீட்டிலிருப்பது வெறுமை மட்டும் தான். இந்த அனைத்து பிரச்சனைகளும் நடந்தேறியது, டென்சிங்கின் சட்டக்கல்லூரி நேர்முகத் தேர்வுக்கு முந்தய நாள் இரவு.

எப்போது டென்சிங் வீட்டிற்க்கு சென்றலும் விருந்து பரிமாறும் அவனது அம்மாவையும், "நான் எந்த பொண்ணு பின்னாடி சுத்தி, ஊர் சண்டை போட்டுட்டு இருந்தேன்.படிக்கனும்னு தானே ஆசைப்பட்டேன்" என்று புலம்பும் டென்சிங்கையும் நினைக்கையில் மனது தன்னை அறியாமல் மவுனம் கொள்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னை வந்த டென்சிங் என்னுடைய அறைக்கு வந்திருந்தான். வீட்டருகே புதிதாக திறந்திருந்த உணவகதிட்க்கு அவனை அழைத்துச்சென்றிருந்தேன். ஆரம்ப நாட்களில் சுவையாக உணவு பரிமாறப்பட்ட அந்த உணவகத்தில் அன்று எதுவுமே நன்றாக இல்லை.(அன்றிலிருந்து ஒருநாள் கூட அங்கு பழைய சுவையில் உணவு பரிமாரப்படவே இல்லை என்பது வேறு கதை) காசு, பணம் தான் எல்லோரையும் ஆடவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. அரை குறையாக சாப்பிட்டும்,சாப்பிடாமலும் அவன் காரைக்குடிக்கு திரும்பிய போது, அவனை சூழ்ந்த நெருக்கடிகள் ஒரு இரவைப்போல பிசுபிசுப்புடன் என்னில் இறங்கி அழுத்தத் துவங்கியது.

இரவு சென்னையிலிருந்து கிளம்பியவன் அதிகாலை புதுக்கோட்டை-காரைக்குடி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவனது லாரியில் சிக்கி ஒரு பெரியவர் இறந்து போனார். அன்றிலிருந்து ஒரு வாரம் அவன் லாரியை எடுக்காமல் மதுவில் கரைந்து கொண்டிருந்தான்.

"வாழ்க்கை கருணையற்றது.அது யாவரின் வாழ்க்கையையும் ஒரு வெற்றிலையை மென்று துப்புவதைப் போல உதட்டில் ரத்தச் சாறு வழிய கடந்து போய் விடுக்கிறது" என்று எஸ்.ராமகிருஷ்ணன் நெடுக்குருதி நாவலின் முன்னுரையில் எழுதியிருப்பார். அது உண்மை தானோ என்னவோ?

"காசுக்கும், பணத்துக்கும், ஊரார் பெருமைக்கும் ஆடக் கற்றுக்கொண்டோம். இது எத்தனை பெரிய அவமானம். வாழ்க்கை ஒரு கவிதை புத்தகத்தைப் போலவோ, நாவலைப் போலவோ இயல்புகளின் பதிவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அக்கௌன்ட் நோட்டைப் போல வாழ்க்கை வெறும் வரவு,செலவுகளின் பதிவாக இருப்பின், கணக்குகள் சரி பார்க்கப்பட்டு பின்பு நீங்களோ,நானோ தூர தூக்கி எறியப்படுவோம் என்பதை நினைவில் கொள்ளவோம்.

பின்குறிப்பு:
அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட டென்சிங், ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக கோவை சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டான்.

புதிய தகவல்:

கை செலவுக்காக சென்ற வாரம் டைல்ஸ் கல் ஏற்றிக்கொண்டு கோட்டயம் சென்ற டென்சிங்,

1)ஒற்றை விளக்குடன் வாகனம் ஒட்டியது.
2)முறையான லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஒட்டியது.
3)சீருடை அணியாமல் இருந்தது.
4)ஓவர் ஸ்பீட்.
5)ஓவர் லோடு,
என்று ஐந்து 'கேஸ்' வங்கி வந்திருக்கிறான். கூடிய சீக்கிரமே வக்கீல் ஆகிவிடுவான் போல. என்ன நான் சொல்வது சரிதானே?

Sunday, November 9, 2008

சூப்பர் ஸ்டாரும்,'என்னத்த' கண்ணையாவும்!


நான்கு நாட்களுக்கு முன்னதாக எந்த சேனலை பார்ப்பது என்ற குழப்பத்துடன் ரிமோட்டை வைத்து சேனலை மாற்றிக் கொண்டிருந்தேன்.அப்போது சன் தொலைக்காட்சியில், ரஜினி தன் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.


ரிமோட்டை கீழே வைத்துவிட்டு, ரஜினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ரஜினியின் முகமானது, நடிகர் 'என்னத்த' கண்ணையாவை நியாபகப்படுத்தியது. எந்திரனில் நடித்துக்கொண்டிருக்கும் ரஜினியும், தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் வரும் 'என்னத்த' கண்ணையாவும் மிக நெருக்கமான உருவ அமைப்புடன் இருந்தார்கள்.

'ரஜினி' என்ற நடிகனை வியாபாரிகள் (தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள்) பன்ச் வசனம் பேசவைத்து வசூல் மன்னனாக மாற்றிவிட்டார்கள். ஆனால் 'என்னத்த' கண்ணையா பேசிய வசனங்கள்...

"என்னத்த...போயீ.., என்னத்த...செய்ய..?" (மன்னன்)
"வரும்... ஆனா வராது..!"
"சும்மா எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு...மின்னுரிங்க..."(தொட்டால் பூ மலரும்) இப்படியே இழுத்து இழுத்து வசனம் பேசி, வெறும் கண்ணையா 'என்னத்த' கண்ணையாவாக மாறிவிட்டார்.
என் நண்பன் மகேஷ் அடிக்கடி சொல்வது மாதிரி எல்லாத்துக்கும் கட்டம்(ஜாதகம்) நல்லா இருக்கணும் போல! நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே கரண்ட் கட் ஆகிவிட்டது. ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கக் கூட கட்டம் நல்லா இருக்கானும் போல.., என்னுடைய கட்டத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்; இருளில் மூழ்கியபடி...