Tuesday, December 22, 2009

தமிழ் சினிமாவின் தீர்க்கப்படாத கேள்விகள்...

இந்த பதிவு திருத்தப்பட்டுள்ளதால் மேலும் படிக்க க்ளிக் செய்யவும்!



http://starmakerstudio.blogspot.com/2009/12/blog-post_27.html

Friday, November 27, 2009

கொடுங் கோடையில்!


தார் ஒழுகும் சாலையில்
பாதத்தின் ரேகைகள்...

வெயிலைக் கிழித்து
கிளை தேடும் பறவைகள்.
கிறங்கித் திரியும்
கால் நடைகள்.

இலைகள் உதிர்த்து
மெளனித்திருக்கும்
வேம்பு.
சில் வண்டுகளற்றுப் போன
நகர வீதியில்
தியானத்தை
உடைக்கும் பேருந்து.

காற்று இல்லாத
கட்டிடக் காடுகளுக்கிடையே
கனவுகள் நிரம்பிய
உறக்கத்தில்
எவ்வளவு ஓடியும்
கண்களன்றி
கைகளால்
பிடிக்க முடிந்ததில்லை
கானலை!

Saturday, November 21, 2009

குறும்பட இயக்குனர்கள் கவனத்திற்க்கு....


குறும்படம் எடுப்பது ஒரு இயக்கமாகவே மாறிவரும் இன்றைய சூழலில், இயக்குனர்களுக்கு அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது பெரிய சவாலாகவே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாற்று ஊடகங்களை முன்னிறுத்தும் எங்கள் "மந்திரச்சிமிழ்" இதழ் தற்போது குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் பற்றி பெருவாரியான மக்கள் அறியும் பொருட்டும், பரந்த அளவிலான பார்வையாளர்களை உருவாக்கவும் மிகுந்த ஆர்வமாக உள்ளோம். ஆகவே நண்பர்களே உங்களின் படைப்புகளை CD அல்லது DVD-யாகவும் அனுப்பலாம். அனுப்பும் பொழுது, முகவரி, அலைப்பேசி அல்லது தொலைப்பேசி எண், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரம், இயக்குனரின் முகவரி ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். அடுத்த இதழ் ஜனவரியில் வெளியாகும் என்பதால் டிசம்பர் 10 தேதிக்குள் அனுப்பிவையுங்கள். சிறந்த விமர்சனத்துடன் உங்கள் படைப்புகள் வெளியாகும்.


படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:
பதிப்பாசிரியர்
க. செண்பகநாதன்,
24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.
கே. கே. நகர்.
சென்னை: 600078.
செல் : 9894931312



மிக்க அன்புடன்,
த.கிருஷ்ணமூர்த்தி (உதவி ஆசிரியர்)


"மந்திரச்சிமிழ்" இதழ் பற்றிய விபரங்களுக்கு....
http://starmakerstudio.blogspot.com/2009/11/blog-post_17.html

Tuesday, November 17, 2009

மந்திரச்சிமிழ்

நண்பர்கள் ஒன்றிணைந்து தரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சிறந்ததொரு
சிற்றிதழை (மந்திரச்சிமிழ்) உருவாக்கி உள்ளோம். எக்காரணம் கொண்டும் எழுத்தின் தரம் குறைந்து விடக் கூடாது என்ற காரணத்தால் காலாண்டிதழாக வெளி வருகிறது. நுண் அரசியல், நுண் இலக்கியம் மற்றும் நுண் சினிமா என ஆழ்ந்த பதிவுகளைககொண்டது. தங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பி தங்களின் ஆதரவைதரும் படியும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதழ் தேவைப் படுவோர் அணுக வேண்டிய முகவரி.

க. செண்பகநாதன்,
24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.
கே. கே. நகர்.
சென்னை: 600078.
செல் : 9894931312

ஆசிரியர் குழு:

பதிப்பாசிரியர்
க.செண்பகநாதன்
ஆசிரியர்
செல்வ புவியரசன்
உதவி ஆசிரியர்
கிருஷ்ணமூர்த்தி
ஆலோசகர்
சுமா ஜெயராம்



முன்னுரை:
தமிழ்ச்சூழலில் சிறுபத்திரிக்கைகளுக்கான வெளி என்பது தீர்க்கமற்றதாய் இருந்து வருகிறது. காலத்திற்கு ஏற்றதான வெளிப்பாடு என்பது அறவே இல்லை. இத்தகைய நிலையில் தான் இந்த இதழை தொடங்க வேண்டியுள்ளது. அதே போல் இதழ் முழுவதும் நான் வியாபித்திருக்கும் நிலையும் துரதிருஷ்டவசமாக ஏற்பட்டுள்ளது. உரிய படைப்புகளுக்காக 4 மாதங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு நானே சில கட்டுரைகளை எழுதினேன். இத்தகைய சூழலில் உயரிய படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்களுக்கான பஞ்சம் தமிழில் அருகி வருவதை கூர்ந்து கவனித்து வரும் நான் நன்றாகவே உணர்ந்துள்ளேன். சிறு பத்திரிக்கைகளுக்கென்று ஓர் அரசியல் உண்டு. அந்த அரசியல்தான் எழுத்தின் போக்கை எதிர்காலத்திற்கு வித்திடுவது. புறவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அதனால் அகம் சார்ந்து ஏற்படும் விளைவுகள், உலகமயமாதல் குறித்த சந்தேகங்கள், நியாயப்பாடுகள். இன்றைய பொருளாதார சிக்கல்கள், மொழியியல் ஆகியவை குறித்து வரும் இதழ்களில் விரிவாக அலசி ஆராயப்படும். உலகளாவிய படைப்பாக்கம், அரசியல் மற்றும் ஊடகங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்தும், கடந்த மற்றும் நிகழ்கால சிந்தனைப் போக்குகள் குறித்தும் உரிய எழுத்தாக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த இதழை வாசகர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதன் சாதக பாதகங்களை உரிய விமர்சனங்களாக ஒப்படையுங்கள். ஆனால் செம்மையான படைப்புகள் மற்றும் உருப்படியான கட்டுரைகள் மட்டுமே இதழில் பிரசுரம் செய்யப்படும் என்பதை உறுதியுடன் கூற விரும்புகிறேன். மந்திரச்சிமிழ் இதழில் நவநவீன சிந்தனைகள் , மாற்று மற்றும் நுண்ணரசியல், மாற்று ஊடகம்(உலகளாவிய), நேர்கோடற்ற படைப்பாக்கம் ஆகியவையே முதன்மையாக கொள்ளப்படும் என்பதனையும் தெளிவாக்க விரும்புகிறேன். காலாவதியான பிம்பங்களுக்கும், பெரும் கதையாடல்களுக்கும் இங்கே சிறிதும் இடமில்லை என்பதை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். படைப்புகள் மற்றும் கட்டுரைகள் கிடைக்கப்பெறாததற்கு இதுவும் ஒரு காரணமே. அப்படி ஒரு நிலை தொடர்ந்து ஏற்பட்டால், அதனால் எக்காரணத்தைக் கொண்டும் இதழ் நிறுத்தப்பட மாட்டாது. இதழின் அரசியலைக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் கொண்டோ அல்லது நானோ இதழை நிரப்புவோம் என்று கூறிக் கொள்கிறேன். சமகால பிரச்சானைகள் விருப்புவெறுப்பின்றி பிரசுரிக்கப்படும் என்பதையும் கூற விரும்புகிறேன்.

- பதிப்பாசிரியர்


இதழின் உள்ளடக்கம்

பிராந்தியவாதம்: தேசியத்தின் இரட்டைமுகம்-
செல்வ புவியரசன் 4

உலகமயமாதலும் அதன் இயலாமையும்-
க.செண்பகநாதன் 9

வெண்ணிறம் கொண்ட கரும்பறவை-
ஆல்பெரட் டி முஸோட்(தமிழில்:க. செண்பகநாதன் 13

ஷியாம் பெனகல் - மாற்று சினிமாவுக்கான இந்திய முகம்-
க. செண்பகநாதன் 30

பருவ காலங்களுடன் ஊடாடும் வாழ்வின் சரிதம்-
க. செண்பகநாதன் 44

பின்காலனிய நாடகங்கள்:
ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கன்டயரை முன்வைத்து -
தமிழச்சி தங்க பாண்டியன் 50

திருச்சாரணத்து மலைக் கோயில் -
ப. சோழநாடன் 55

Sunday, November 15, 2009

தசாவதாரம் கமலும், சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும்...


தசாவதாரம் படத்தை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படத்தில் வரும் flash back காட்சிகள் ஆதாவது 12-ஆம் நூற்றாண்டு காட்சிகள்; வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. பெருமாள் இருந்த இடத்தில் சோழ மன்னன் சிவனின் திருவுருவை நிறுவ முயற்சிப்பார். பராகிரமசாலியான நம்பி (கமலஹாசன்) தனது புஜ வலிமையால் சோழ மன்னனின் படை வீரர்களை அடித்து துவம்சம் செய்துவிடுவார்.

இந்த படத்தை பார்த்ததிலிருந்தே சிதம்பரம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.அது கடந்த மாதம் தான் நிறைவேறியது.

முந்தைய நாள் இரவே சிதம்பரத்தில் தங்கிவிட்டு விடியற் காலையில் கோவிலுக்குள் நுழைந்தேன். பொதுவாகவே வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் மனது பின்னோக்கி செல்லவது இயல்பானதாகி விடுகிறது.அதுவும் என்னை மாதிரி கனவுலக வாசிகளுக்கு சொல்லவே வேண்டாம். குலோத்துங்க மன்னனின் யானை நிலம் அதிர நடந்து சென்றதும் , படை வீரர்கள் அணிவகுத்து வந்த குதிரைகளின் குளம்படி ஓசைகளும், தீட்சிதர்கள் முணுமுணுத்த மந்திரங்களும் என் காதுகளில் ரிங்காரமிட்டபடியிருந்தது. "லொள்" ஒரு நாய் குலைத்த போது தான் நிகழ் காலத்திற்க்கு வந்தேன். அப்போதுதான் என்னைக் கடந்து இரண்டு நாய்கள் கடந்து ஓடின.

மற்ற கோவில்களைக் காட்டிலும் சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டிருந்தது. நடராஜர் சிலைக்கு காலை ஏழு மணியளவில் பூஜை வெகு சிறப்பாக நடந்தது. அக்காலத்திலேயே மக்கள் கலைகளுக்கு உரிய மரியாதையை அளித்து வந்தது அவர்கள் வாழ்ந்த வளமான வாழ்வின் சான்று என்று தான் சொல்ல வேண்டும்.

அங்குள்ள தீட்சிதருடன் வரலாற்று நிகழ்வு பற்றியும், தற்போதைய அரசியல் நிகழ்வு பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அந்த தீட்சிதர் பார்பதற்க்கு மிகவும் மெலிந்தவராகவும், கேட்ட கேள்விக்கு மட்டுமே அமைதியாக பதில் சொல்பவராகவுமே இருந்தார்.
அப்போது மீண்டும் தசாவதாரத்தின் காட்சிகள் மீண்டும் ஞாபகத்திற்க்கு வந்தது.

ஆளவந்தானின் இரண்டாம் பாகம் போல் எதிரிகளை துவம்சம் கமலஹாசனின் உடலையும், அங்கிருந்த தீட்சிதர்களையும் ஒப்பிட்டு பார்த்த போது சிரிப்பு தான் வந்தது. 12-ஆம் நூற்றாண்டிலேயே தீட்சிதர்கள் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாக காட்டியது படத்தின் சிறந்த காமடி காட்சிகளில் ஓன்று. கடவுளின் பெயரால் விரதங்கள் மேற்கொண்டு, நாமம் பாடும் பக்கதன் 'அர்னால்டின்' தம்பியைப் போலவா இருப்பான். ஆனால் நான் பார்த்த தீட்சிதர்கள், ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டினான் கூட "same to you" என்று சொல்பவராகத்தான் இருந்தார்கள்.

உண்மையிலேயே வரலாறு என்பது "வென்றவர்கள் தங்களுக்கு தாமே வரைந்து கொள்ளும் வரைபடம். நாமும் அதைத்தான் பின்பற்ற வேண்டும். தோற்பவர்களுக்கு அதில் இடம் கிடையாது. வென்றவனின் பொய்களும், தோற்றவனின் உண்மையும் நிரந்தர மவுனம் கொள்ளுமிடம்." என்று மனதிற்க்குள் ஏதேதோ தோன்ற மீண்டும் அந்த நாய்கள் குலைத்துக் கொண்டே என்னைக் கடந்து சென்றன. பொதுவாக வரலாற்றைப் பற்றிய அக்கறை, கவலையெல்லாம் மனிதனுக்குத்தான். நாய்களுக்கு இல்லை.

Wednesday, November 11, 2009

இந்தியா ஒரு poor country-இல்லையா?


சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள குரூஸ் கப்பலில் photographer வேலைக்காக நானும் எனது நண்பர் சரவணனும் தி.நகரில் உள்ள கிளை அலுவலகத்திட்க்குச் சென்றோம். அந்த நிறுவனத்தின் மேலாளர் நாங்கள் எடுத்த புகைப் படங்களைப் பார்த்து விட்டு "உங்கள் புகைப்படங்கள் இந்தியாவை, ஒரு poor country-ன்னு சொல்லற மாதிரி இருக்கு" என்று நிராகரித்து விட்டார்.

இந்த நிகழ்வை மறந்து போன ஒரு நாளில் பாண்டிச்சேரி, சிதம்பரம், தரங்கம்பாடி, காரைக்கால், திருநள்ளார், நாகூர், வேளாங்கண்ணி, தஞ்சை மற்றும் மதுரை என்று நானும் நண்பரும் ஊர் சுற்றக் கிளம்பியிருந்தோம். வழக்கம் போல் இல்லாமல் இந்தமுறை கோவில், கோவிலாக சுற்றிக்கொண்டிருந்தோம். பாண்டிச்சேரியைத் தவிர.

இந்த ஊர் சுற்றலின் போது எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவானது. ஓன்று நம்முடைய தெய்வ நம்பிக்கைகளைப் பற்றியது. இதனை இங்கே பேச இயலாது. சர்ச்சைக்குரியதாக மாறிவிடும்.

இன்னொன்று, பல்வேறு வகையான நில அமைப்புக்களை சார்ந்து வாழும் மக்க்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றியது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லச் செல்ல அப்பகுதி மக்களின் நம்பிக்கைகள், வாழும் முறை, பழக்க வழக்கங்கள், வட்டார மொழி என்று மாற்றங்களின் தொடர்ச்சியாக நீண்டு கொண்டிருந்தது.

சென்ற இடங்களில் எல்லாம் மாறாமல் இருந்தது குடிநீர் பிரச்சனைகளும், நீக்கமற நிறைத்திருக்கும் பிச்சைக்காரர்களும் தான்.

எங்கு பார்த்தாலும் சுகாதாரமற்ற குடிநீரே கிடைத்தது. இது ஒரு விதமான வாழ்வாதார பிரச்சனை என்றால் இனொரு புறம் பிச்சைக்காரர்கள். கோவில்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் அதனை இடங்களிலும் நோயால் பீடிக்கப்பட்டவர்களும், வயோதிகர்களும், உழைக்க மறந்தவர்களும் பிச்சைக்காரர்களாக சுற்றிதிரிந்தனர்.

வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே உள்ள கேசட் கடைகளில் பக்தி பாடல்களும், நமீதா க்ளாமர் பாடல்களும் ஒரே கடைகளில் சூடு பறக்க விற்பனையானது. தஞ்சை பெரிய கோவிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள், வெளிநாட்டினரை விரட்டி விரட்டி பிச்சை எடுத்தனர். இதற்க்கு ஒரு படி மேலே இருந்தது நாகூர் தர்ஹா. மசூதி முழுக்க மன நோயாளிகள் நிரம்பி வழிந்தனர்.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்க்கும் ஒரு சமூகத்தில், மூத்திரம் பெய்ய இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் குடிநீர் 15 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

இன்றைய சூழலில் "இந்தியா முழுக்க 4 மில்லியன் மக்கள் ரத்தக் கொதிப்பு நோயாலும், 10 மில்லியன் மக்கள் இதய நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

'உலகம் முழுவதிலும் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் வாழக்கூடிய மக்களில் 80% பேர் இந்தியர்கள்' என ஐ.நா அறிக்கை விடுகிறது. தினமும் 4 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது. (இந்த அழகில் வல்லரசு கனவு வேறு.)

இப்படியாக வயிற்றுப்பாட்டிட்க்கே அலையும் பெருந்திரளான மக்கள் கூட்டத்தையும், குஷ்பூ, நமீதாவின் பெருத்த ......களைக் கொண்டாடி கோவில் எழுப்பியும், எழுப்ப முயற்சி செய்துகொண்டிருக்கும் சிந்தனை வறட்சி கொண்டவர்களையும்; வறுமையும், ரோகமும், ஊழலும், பொய்யும், புரட்டும், கொலையும், கற்பழிப்பும் தேசிய அடையாளமாகக் கொண்ட ஒரு நாடு 'poor country' இல்லையா? எனக்கு அப்படிதான் தோன்றுகிறது. உங்களுக்கு?

ரகசியங்கள்!



இலைகளின் நிழல்
இரவில்
அழிந்து போவதில்லை
மாறாக அவை
நீந்தித் திரிகின்றன
இருளில் மூழ்கி
இரவின் தீராத ரகசியங்களை
பேசிய படி...

Wednesday, October 7, 2009

என் ஜன்னலின் வழியே...


எப்போதும் திறந்திருக்கும்
என் ஜன்னலின் வழியே
வெளிச்சத்தைத் தவிரவும்
வேறு சில வந்து செல்கின்றன

வீட்டுக்கார கிழவியின் சப்தம்
கிழவியின் வெள்ளைப் பூனை
பூனையின் குட்டிகள்
புதிதாக புற்றமைத்திருக்கும்
எறும்புக் கூட்டம்
கரையான்
பூரான் தவிர
அவ்வப்போது
காற்று கூட வந்து செல்கிறது.

ஆனால்,
ஒரு போதும் வரவேயில்லை
என் தனிமையை உடைக்கும்
ஒரு பலசாலி!

Saturday, August 29, 2009

மரணத்தின் வாசனை!

மாணிக்கம் அண்ணனுக்கு 90 வயது இருக்கும். ஆம்! நாங்கள் எல்லாம் அவரை 'அண்ணன்' என்று தான் அழைப்போம். என் தாத்தாவும், மாமாவும் அண்ணன் என்று அழைத்ததால் நானும் அப்படியே அழைக்கத் தொடங்கினேன்.

எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே மாணிக்கம் அண்ணனை தெரியும் என்றாலும், அவரின் முகம் என் நினைவில் அழியாமல் நின்றது; ஒரு மரண நிகழ்வின் போது தான்.

எங்கள் வீட்டில் வளர்ந்த மணி (நாய்) வெகு நாளாக ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போதேல்லாம் பெரியவர்களைப் பொறுத்த வரையில் நாய் ஊளையிட்டால் தெருவில் ஒரு பிணம் விழப்போகிறது என்று அர்த்தம். எங்கள் மணி தெருவில் ஊளையிட்டு வயதானவர்களையும், உடல்நிலை சரியில்லாதவர்களும் கதி கலங்க வைத்துக் கொண்டிருந்தது. தெருவில் உள்ளவர்கள் மணி மீது புகார் பத்திரம் வாசிக்க ஆரம்பித்தனர்.

வேறு வழி இல்லாமல் எல்லோருமாக சேர்ந்து மணியின் சாவுக்கு நாள் குறித்தார்கள். 1994 ம் ஆண்டு பொங்கல் விழா முடிந்து கரும்பு சக்கைகள் தெருவெங்கும் சிதறிக் கிடந்தது. மாணிக்கம் அண்ணன் கனமான கடப்பாரையுடன் (குழி தோண்ட உதவும் கருவி) கம்பீரமாக நடந்து வந்தார்.

ஜனவரி மாத வெயில் தெருவில் இறங்கி உலாவிக் கொண்டிருந்தது. வீட்டு வாசலில் படுத்திருந்தது மணி. கடப்பாரைக் கம்பியுடன் மாணிக்கம் அண்ணன் வருவதை கண்டு குலைத்துக் கொண்டே நடுத் தெருவுக்கு வந்தது. அவர் கம்பியால் மணியை அடிக்கும் வரை, மணியைக் கொல்லப் போவது அவர் தான் என்பது எனக்குத் தெரியாது.


கண்ணிமைக்கும் நேரத்தில் மணியின் மூளை சிதறியது. வாயிலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. மணியின் இரண்டு மூன்று பற்கள் நொறுங்கிய நிலையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. வார்த்தைகளற்று நின்று கொண்டிருந்தேன். மணியின் துடிப்பு சிறிது நேரத்தில் அடங்கியது. கொசுவை அடித்து தூக்கிப் போடுவது மாதிரி சர்வ சாதாரணமாக மணியின் கால்களை பிடித்து தரத் தரவென இழுத்துச் சென்றார் மாணிக்கம் அண்ணன்.

தெருவே பெருமூச்சு விட்டது. அன்றைய நாளில் எங்கள் வீட்டை அழ்ந்த மவுனம் கவ்விக்கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவது கூட வேதனையை அதிகரிப்பதாக இருந்தது. நாய் விளையாடித் திரிந்த இடங்களை பார்த்து தனிமை பரிகாசம் செய்து கொண்டிருந்தது. மாணிக்கம் அண்ணனின் முகம் அன்றைய நாள் என் நினைவிலிருந்து அகலாத ஒரு முகமாக பதிந்துவிட்டது.

பின்பு, 'தென்னங்கன்று நடுவது, இளநீர் பறிப்பது, கிணறு தூர் வாருவது, வீடு கட்ட மணல் அள்ளுவது, தாத்தாவுக்கு மருத்துவமனையில் உதவியாக இருப்பது' என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எங்கள் வீட்டுக்கு மாணிக்கம் அண்ணன் வந்து செல்லவது உண்டு. மாணிக்கம் அண்ணன் எந்த வேலையாக எப்போது வந்தாலும் சரி, கடப்பாரைக் கம்பி விழுந்து மூளை சிதறிய மணியின் முகம் தான் என் நினைவுக்கு வரும்.

நாயை அடிக்கும் போது இருந்த கொடூர முகம் மாணிக்கம் அண்ணனின் நிஜமான முகம் கிடையாது. திடமான உடலமைப்புக் கொண்டவர். பழகுவதற்க்கு மிகவும் இனிமையானவர். குரல் கூட அதிராத வண்ணம் இருக்கும்.

அதன் பிறகு 'பள்ளி ஹாஸ்டல், சென்னை வாழ்க்கை' என்று பத்து வருடங்கள் உருண்டோடிவிட்டன.

சமீபத்தில் நான் ஊருக்கு சென்றிருந்த போது எங்கள் தெருவை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு டீ கடை அருகே ஒரு கனமான கம்பை தாங்கிய படி சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்தார் மாணிக்கம் அண்ணன்.

அவருக்கு பக்கத்தில் சென்றேன். கண்கள் பழுபேறியிருந்தன. வயோதிகத்தால் உடல் மிகவும் தளன்று போயிருந்தது. என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. என் தாத்தாவின் பெயரைச்சொல்லி சொன்னதும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். ரெம்பவும் தடுமாறி "நல்லா இருக்கீங்களா தம்பி?"என்றார். தலையாட்டினேன். கையில் இருபது ரூபாய் கொடுத்தேன் வாங்கிக் கொண்டார்.

பிறகு நான் அவரைப் பார்க்கும் சமயங்களில் எல்லாம் சாலையின் ஓரமாக மாமர நிழலில் அமர்ந்து சாலைகளில் செல்பவர்களையெல்லாம் இமைகளை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். யாரிடமும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதில்லை. சாலைகளில் யார் இரைச்சலை எழுப்பிக்கொண்டிருந்தாலும் அதை சலனமே இல்லாமல் அவதானித்துக் கொண்டிருப்பார். துடிதுடித்துக் கொண்டிருந்த மணியின் கால்களைப் பிடித்து நடந்து சென்ற மாணிக்கம் அண்ணனின் கம்பீரத்தை முழுவதுமாக முதுமை விழுங்கிக் கொண்டது.

கடைசியாக அவரை ஒரு சாவு வீட்டில் வைத்துப் பார்த்தேன். "மவுனத்தை எதிர் கொள்வதும், புரிந்து கொள்வதும் தான் முதுமை" என்பது போல அவரின் கண்கள் அந்த சடலத்தின் மீது நிலை குத்தி நின்றது. அந்த தருணத்தில் 'கைகளை முறுக்கிக் கொண்டு நாயின் மூளையை சிதறடித்த மாணிக்கம் அண்ணனுக்கு இதனை வருடம் கழித்து அந்த நாயின் ரத்தக் கவிச்சி அடித்திருக்கும்' என்றே நினைக்கிறன்.

விஜய் ஏன் கேலிப் பொருளானார்?

இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.

Tuesday, August 11, 2009

திருமதி. ஜெயலலிதா - கலைஞர் கருணாநிதி !



நிருபர்: சத்துணவு ஊழியர்கள் தங்களை முழு நேர ஊழியர்களாக்க வேண்டுமென்று நடத்திய போராட்டம் பற்றி?

கலைஞர்: சத்துணவு ஊழியர்கள் பகுதி நேர ஊழியர்கள்தான். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அவர்கள் அந்தப் பணிக்கு வரும் போது, பகுதி நேரம் என்று தெரிந்தே வந்தார்கள்.

அதற்க்குப் பிறகு திருமதி ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் அதற்க்குப் பிறகும் பகுதி நேர ஊழியர்கள் என்ற முறையிலே ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தார்கள். இப்பொது, பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றுவோம். முழு நேரத்திட்க்காக ஊதியம் வேண்டும் என்று சொன்னால், அது எப்படி பொருத்தமாகும்?

நிருபர்: எல்லோரும் 'செல்வி ஜெயலலிதா' என்று தான் அழைக்கிறார்கள். நீங்கள் 'திருமதி ஜெயலலிதா' என்று சொல்ல்கிறீர்களே?

கலைஞர்: இதை மைனாரிட்டி அரசு என்று அவர் திரும்பத் திரும்ப சொல்கிறாரே, அதை எப்படிச் சொல்கிறார். அவர் அப்படிச் சொல்கிறவரை, நானும் இப்படிதான் சொல்வேன்.
.....................................................................

ஜெயலலிதா ஒரு வலு மிக்க எதிர் கட்சியாக நின்று மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க தவறிவிட்டார். இடைத் தேர்தலில் தோல்வி பயம் காரணமாக தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்த ஜெயலிதா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. எனும் மிகப் பெரிய அஸ்திரத்தை ஒரு கசப்பான முடிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்.


எம்.ஜி.ஆர். தனது சுய சரிதையில் " என்னருகில் யார் வர வேண்டும். என்னைச் சுற்றிலும் யார் இருக்க வேண்டும் என்று ஒரு வட்டம் போட்டுக் கொண்டேன். அந்த வட்டமே எனக்கு சிறையாக அமைந்து விட்டது" என்றார்.

அப்படி ஒரு வட்டத்தை ஜெயலலிதா போட்டுக் கொண்டு வெகு நாட்களாகி விட்டது. அந்த வட்டத்துக்குள் அதிகார மையம் அவரே. அந்த வட்டத்துக்குள் ஒரு விளையாட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வட்டத்துக்குள், அதிகார மையத்தை நெருங்கவோ, நெருங்க நினைக்கவோ ஆசைப்பட்டால் அந்த நபர் விளையாட்டிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார். ஏன்? எதற்க்கு? எப்படி? என்ற கேள்விகள் எல்லாம் இங்கில்லை. இந்த விளையாட்டு இப்படியே தொடர்ந்தால் கூடிய விரைவில் இது தனிநபர் விளையாட்டாக மாறிவிடும். அப்போது உங்களை "திருமதி ஜெயாலலிதா" என்று சொல்லி கேலி செய்ய கருணாநிதியும் இருக்க மாட்டார். "அம்மா" என்று அழைக்க அடிமட்ட தொண்டனும் இருக்க மாட்டான்.

Monday, June 29, 2009

சாருநிவேதிதாவும், தெருச் சண்டையும்!

நான் கடந்த ஐந்து வருடங்களாக சாருவின் எழுத்துக்களை தொடந்து படித்து வருகிறேன். 'உயிர்மை' இலக்கிய இதழின் வாயிலாகத்தான் முதலில் நான் சாருவை அறிந்தேன். முதன் முறையாக அவரது கட்டுரைகளை படித்த பொழுது எல்லையற்ற பரவசம் அடைந்தேன். அரேபிய இலக்கியங்களை தொடந்து அறிமுகப்படுத்திய விதம் மிகவும் சிறந்த முயற்சியாகும்.

ஆனால், சமீப காலமாக உயிர்மையின் பக்கங்களை a.r.ரகுமானுக்கு பாராட்டுப் பத்திரம் எழுதுவதிலும், இளையராஜாவை திட்டித் தீர்ப்பதிலுமே ஓட்டிக்கொண்டிருக்கிறார். சாருவின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதன் மூலமாக அவருடைய உளறல்கள் எனக்கு புரிய ஆரம்பித்தது.

அவரது உளறல்களுக்கு உதாரணமாக, 'நான் கடவுள்' திரைப்படத்தின் விமர்சனக் கட்டுரையில் "எனக்கு பிடிக்கவே பிடிக்காத இளையராஜாவும், ஜெயமோகனும் இந்த படத்தில் வேலை பார்த்தாலே, நான் அந்த திரைப் படத்தைப் பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டு கட்டுரையைப் ஆரம்பிக்கிறார். 'விமர்சனம்' என்பது நடுநிலையான கருத்துக்களை வாசகர்கள் முன்னிலையில் வைப்பதாகும். இந்த சின்ன நடைமுறை கூட தெரியாதவரா சாருநிவேதிதா?.. அடுத்ததாக 'பசங்க' திரைப்பட விமர்சனம்; உலக அபத்தம்! நம்ம ஊரில் சிறந்த படமாக 'பசங்க' படம் அமைந்தால் பாராட்ட வேண்டியதுதான். அதற்க்காக "childran of heaven" எனும் உலகின் ஒப்பற்ற திரைப்படத்தைவிட 'பசங்க' படம் பல மடங்கு உயர்ந்தது' எனும் கோமாளித்தனமான (கேவலமான) கட்டுரையைக் குறிப்பிடலாம்.

தன்னுடைய சரக்கு(அறிவு) காலியாகிவிட்டதை வாசகன் அறிந்து கொள்ளக்கூடாது என்பதை மிகுந்த கவனத்தில் கொண்டு, உளறல்களையும், அபத்தங்களையும் கிடைத்த பத்திரிக்கைகளில் எல்லாம் தொடர்ந்து எழுதி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சாரு தன் அபத்தங்களை குமுதத்தில் 'கோணல் பக்கங்கள்' என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து பாதியில் நின்று போனது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதன் விளைவாக, மற்ற எழுத்தாளர்களை திட்டி எழுதி பெரிய ஆளாக ஆகிவிடலாம் என்ற நினைப்பும் இப்போது தலை தூக்கி வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு எஸ்.ராமகிருஷ்ணனின் "உறுபசி" குறுநாவலை 'வெறும் காட்சிகள் மட்டுமே உள்ளது. நாவலை காணவில்லை' என்றும்; "நெடுங்குருதி" நாவலை 'தலையணை அளவிற்க்கு உள்ளதே தவிர வேறொன்றும் இல்லை' எனக் குறிப்பிட்டார். மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு ராமகிருஷ்ணனின் நாவல்களையும், சாருவின் 'ஜீரோ டிகிரி மற்றும் ராசலீலா' நாவல்களையும் படித்துப் பாருங்கள். சாரு, ராமகிருஷ்ணனின் நாவல்களை விமர்சிக்கும் தகுதி அற்றவர் என்பது புரியும்.

மேலும், ஜெயமோகனை தனது தளத்தில் மிகவும் தரக்குறைவாக குறிப்பிட்டு, ஒரு தெருச் சண்டைக்கு தயாராகி வருகிறார் சாரு.
http://www.charuonline.com/June2009/jeya.html
உலக இலக்கியங்களை உயர்வாகக் குறிப்பிடும் நீங்கள் இப்படி தெருச் சண்டைக்கு முனைப்பாக இருந்தால் எப்போது நம் தமிழ் இலக்கியம் உலக அளவில் பேசப்படும். உங்களின் தெருச் சண்டையைக் கைவிடுங்கள். சாளரங்களில் இரைச்சல்களை எழுப்பாதீர்கள்!

Sunday, June 7, 2009

தமிழகத்தில் திறந்தவெளி விபச்சாரம்!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அலுவல் காரணமாக நள்ளிரவு 1:30 மணியளவில் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு, நண்பனுடன் காரில் பயணித்தேன். பயண அழுப்பு தெரியாமல் இருக்க இருவரும் பேசிக் கொண்டே சென்றுகொண்டிருந்தோம்.

பின்னிரவு வேளையில் எங்களது வாகனம் திண்டிவனத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது ஊரைத் தாண்டிய ஒரு வெளியில் டார்ச் லைட் வெளிச்சம் எங்கள் வாகனத்தின் மீது விழுந்தது. நாங்கள் வந்து கொண்டிருந்தவேகத்தில் வெளிச்சம் வந்த இடத்தைக் கடந்து சென்றோம். மீண்டும் சிறிது நேரம் கழித்து அதே போல எங்கள் வாகனத்தை நோக்கி டார்ச் லைட்டின் வெளிச்சம் வரவே, நண்பன் வாகனத்தின் வேகத்தைக் குறைத்து வெளிச்சம் வரும் திசையை நெருங்கினான். அப்போது அங்கே 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் எங்களை நெருங்கி வந்து என்னையும் என் நண்பனையும் நோட்டமிட்டாள். அப்போது அவள் எங்களை நோக்கி "வரிங்களா?" என்றாள். ஆம்; அவள் ஒரு விபச்சாரி! ஒருநிமிடம் அதிர்ச்சி தாளாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, 'வேண்டாம்' என தலையசைத்தவாறே வாகனத்தை அங்கிருந்து நகர்த்தினான் நண்பன்.

தொடர்ந்து நாங்கள் செல்லச் செல்ல உளுந்தூர்பேட்டை எல்லை முடிவு வரையிலும் டார்ச் லைட்டின் வெளிச்சம் எங்களையும், எங்களோடு பயணிக்கும் கார், மற்றும் லாரிகளை நோக்கியும் அந்த ஒளி நீண்டு கொண்டே வந்தது. அன்றைய பயணத்தில் நாங்கள் கண்ட பெண்கள் 13 வயதிலிருந்து 45 வயது மதிக்கதக்கவர்களாக இருந்தார்கள்.

என்னுடைய நண்பன் ஒரு டிரைவர் என்பதாலும், இது போல பல வெளிச்சங்களை கடந்து சென்றவன் என்பதாலும், இந்த நிகழ்வை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எங்கள் பயணம் முடியும் வரையிலும் இது போல பல கதைகளை சொல்லிக் கொண்டேவந்தான். அன்றைய இரவு, என்னுள் மிகுந்த பிசுபிசுப்புடனும், ஆழ்ந்த துயரத்தோடும் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

நண்பன் சொன்ன பல சம்பவங்களில் வரும் வேசைகள் 50க்கும், 100க்கும் படுக்கையை பகிர்ந்து கொள்பவர்களாகவும், கணவர்களால் கைவிடப்பட்டவர்களும், சிறுமிகளும், விதவைகளும், குறைந்த பட்ச கூலி வேலை கூட கிடைக்காதவர்களும் தான். இதில் பாலியல் நோய்களால் பீடிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

இந்த நிகழ்வுகள் வெறும் சம்பவங்கள் மட்டுமல்ல... மிகப் பெரிய அரசியல்! கடந்த ஆட்சியில் 10க்கும் மேற்பட்ட மத்திய மந்திரிகள் தமிழகத்தில் இருந்தும் அந்த பகுதியில் எந்த ஒரு தொழில் சாலைகளும் துவக்கப்படவில்லை. எல்லா தொழில் வளங்களும் சென்னையில் தான் குவிக்கப்படுக்கிறது. சென்னையைத் தவிர்த்த மற்ற தமிழகத்தின் பல பகுதிகளும் வெகுவாக புறக்கணிக்கப்படுகின்றன. இம்முறையும் தமிழகத்திலிருந்து 9 மத்திய அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

கடத்த முறையைப் போல இம்முறையும் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப் பட்டால் கூடிய விரைவில் தமிழகம் ஒரு திறந்தவெளி விபச்சார விடுதியாக மாறிவிடும். எல்லா தொழில் வளங்களும் சென்னையிலேயே அமையும் பட்சத்தில், ஒட்டு மொத்த தமிழ் மக்களும் சென்னைக்கு படையெடுக்க வேண்டி வரும். அப்புறம் எழுத்தாளர் கோணங்கி சொன்னதைப் போல " ஒருநாள் வெளி ஊரிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, அவர்கள் பெய்யும் மூத்திரத்தில் சென்னை முழ்கிப் போகப்போகிறது".

Monday, May 11, 2009

நிறம் மாறும் தமிழ் சினிமா!

மாற்று முயற்சிகள் தமிழ் சினிமாவில் அரிதாக நடந்து கொண்டிருக்கையில் மிகுந்த நம்பிக்கையோடு வெளி வந்திருக்கும் படம், பசங்க!

spring, summer, fall, winter and spring என்ற கொரியத் திரைப்படத்தைப் போல பசங்க படத்தில் வரும் கதாபாத்திரங்களின் சூழலும் ஜூன், டிசம்பர் என்று வெவேறு கால நிலைகளில் கதை நகர்வது அழகு.


கதா நாயகியை, ஒரு வேட்டை நாயின் மூர்கத்தோடு நாயகன் மோந்து, மோந்து பார்ப்பது போன்ற அருவருக்கத்தக்க காட்சிகள் எதுவும் இந்த படத்தில் இல்லை என்பது ஆறுதல்.

இது தமிழ் சினிமாவை புரட்டிப் போடும் படமா? உலக சினிமாவை நிமிர்ந்து பார்க்க வைக்கும் படமா? என்றால், இல்லை என்பது தான் உண்மை. ஆனால் பசங்க போன்ற மாற்று முயற்சிகள் வெற்றி பெற்றால், தமிழ் சினிமாவில் பல மசாலா சினிமாக்காரர்கள் காணாமல் பொய் விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. " ஏழை வீட்டு விருந்தில் குறை காணக் கூடாது" என்பார்கள். தமிழ் சினிமாவில் கதை சொல்லும் பாணியில் ஏற்பட்ட தேக்க நிலையை பசங்க படம் உடைத்திருக்கிறது. இந்த படத்தில் குறை காண்பது புதிசாலித்தனமுமல்ல... வணிகத் தந்திரங்களை நம்பாமல் புதிய தளத்தில் பயணித்திருக்கும் இயக்குனர் பண்டிராஜ் மற்றும் தயாரிப்பாளர் சசிக்குமாருக்கும் நம்பிக்கையுடன் கூடிய பாராட்டுக்கள்.

தமிழ் சினிமா நிறம் மாறிக் கொண்டிருக்கிறது. மாஸ் ஹீரோக்களும், மசாலா இயக்குனர்களும் மூட்டை கட்ட வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.