Saturday, January 4, 2014

ஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும்!


இன்று காலை தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் எஸ்.ராமகிருஷ்ணனின் "நிமித்தம்" நாவலின் ஒரு அத்தியாயம் வெளியிடப்பட்டிருந்தது. அத்தியாயம் முழுவதும் புலம்பல்களும், அநாவசிய விவரிப்புகளும், சுய கழிவிரக்கத்தை கோருவதுமாக ஆனந்த விகடனில் வரும் நட்சத்திர எழுத்தாளர்களின் அம்சாத்துடன் அது இருந்தது.

அந்த அத்தியாயத்தின் சிறு பகுதி:

1) "யானை தன்னை அறிந்து கொள்ளவே இல்லை. யாரோ கொடுக்கிற வாழைப்பழத்திட்காக அது தனது தும்பிக்கையை தூக்கி ஆசீர்வாதம் செய்கிறது. பாகன் தரும் சோற்றுக் கவளங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது. யானை வாழ்வதட்கான இடம் கோவில் இல்லை. ஆனால், யானை பழகிவிட்டிருக்கிறது."

2) "ஜெயித்தவர்கள் உலகோடு பேரம் பேசத் துவங்கிவிடுகின்றனர்.

மேட்கண்ட வார்த்தைகள்  எஸ்.ராமகிருஷ்ணனின் வியாபார  மனநிலையையே பிரதிபலிக்கின்றன. அவரும் தான் ஒரு காட்டு யானையின் பலம் கொண்டவர் என்பதை மறந்து, வாழைப் பழத்திட்காக (ராயால்டி) கும்பிடு போடுபவராகவும். இலக்கியத் தரத்தை பேரம் பேசுபவரகவும் மாறிவிட்டார்.

நாவலின் அத்தியாயம் முழுவதும் உள்ளுணர்வு சார்ந்து எதுவுமே இல்லாமல், மூன்றாம் தர தமிழ் சினிமா இயக்குராரை போல காட்சிகளாக அடுக்கிக் கொண்டே போகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கவின்கயல் பதிப்பகம் வெளியிட்டுள்ள எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு நாடகங்களின் தொகுப்பை (முதல் தொகுப்பின் பெயர் நினைவில் இல்லை மற்றொன்று 'கலீலியோ') வாங்கி வந்து படிக்கத் தொடங்கினேன். முதல் வார்த்தை "டோய்க் டோய்க் என சப்தம் வர" என்று ஆரம்பித்து கிழவி மாதிரி கதையை நீடித்துக்கொண்டே இருந்தார். வாங்கிய 20 நிமிடத்தில் டிஸ்க்கவரி புத்தக நிலையத்திலேயே திரும்பிக் கொடுத்தேன். அதை அந்த கடைக்கார அண்ணன் மாற்றித் தர வழியில்லை என்றதால், அந்த புத்தகத்தை அவர்களிடமே திரும்பிக் கொடுத்துவிட்டு "தயவு செய்து இதை யாராவது புத்தகம் வாங்க முடியாத நண்பர்களுக்கு அன்பளிபாக கொடுத்துவிடுங்கள். முடிந்தால் எஸ்.ராவிடம் 'உங்கள் புத்தகத்தை படிக்க முடியாமல் ஒருவன் யாருக்காவது இணாமாக கொடுத்து விடச் சொன்னான்’ என சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு வந்தேன். கடைக்கார அண்ணன் செய்வதறியாது நின்றார்.
"எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி நாவலில் உளவியல் ஆய்வு" என்ற தலைப்பில் m.phil ஆய்வை முடித்து விட்டு கட்டுரையை சமர்பிக்கும் போது பேராசிரியர் கேட்டார். " எஸ்.ராவிடம் நீங்கள் நேர்காணல் செய்யவில்லையா?" என்றார். என்னுடைய பதில் "நாவல் எழுதிய போது இருந்த எஸ்.ராமகிருஷ்ணன் இப்போது இல்லை".
-அர்த்தம் புரிந்தவராய் கல்ல சிரி சிரித்தார்.

எதையோ சொல்ல நினைத்து எங்கோ வந்து விட்டேன். ஹிந்துக்கு நன்றி. "நிமித்தம்" நாவல் வாங்கும் காசுக்கு தலப்பாக்கட்டியில் ஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும் சாப்பிடும் ஐடியா உள்ளது.
(எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களை படிக்க விரும்புவோர், அவருடைய 2010க்கு முந்தைய படைப்புகளை மட்டும் படித்து மகிழலாம். பிந்தயத்தற்கு நான் பொறுப்பல்ல.)

Sunday, November 17, 2013

ஒரு தந்தையின், நண்பனின், காதலியின் மரணத்தைப் போல....


  அந்தரங்கமற்ற நெருக்கடியில், அதேவேளையில் கூட்டத்திலிருந்து விடுபட விரும்பும் 12 பேர் நிறைந்த கூட்டுக் குடும்பத்தில் மேலும் ஒருவனாக நான் பிறந்தேன். ஏற்கனவே இருந்த 12 பேரின் நெருக்கடியும், தூங்கும்போது கூட கேட்டுக்கொண்டிருக்கும் இடைவிடாத சப்தங்களும், வெறுப்பும், நிராகரிப்பும், சிறிய தவறுகளுக்கு கூட எல்லோரையும் எதிர்கொள்ளும் ஆளாக நான் இருந்தேன். 

என் குடும்பத்தில் உள்ள பலரும் என் மீது அதீத ஒழுக்கத்தை திணித்துக் கொண்டிருந்த போது, சச்சின் என்ற மந்திரச் சொல்லைக் பின்தொடர்ந்தபோது, சச்சினின் இயல்பான அமைதி மற்றும் இதனை ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் அவர் கடைபிடித்த தீவிர ஒழுக்கத்தால் நான் இயல்பாக ஈர்க்கப்பட்டேன்.

இந்தியாவில் உள்ள பலரைப் போலவே நானும், சச்சின் என்கிற பிம்பத்தோடு தொடர்ந்து நானும் என் கனவுகளை வளர்த்துக்  கொண்டிருந்தேன். கடும் உழைப்பையும், அர்பணிப்பு உணர்வையும், ஒவ்வொரு போட்டியில் களம் இறங்கும் போதும் தன் முதல் போட்டியைப் போலவே அணுகிய அவரது ஆர்வமும், எனக்கு ஒரு தந்தையைப் போல வழிகாட்டுதலும், நண்பனைப் போன்ற இணக்கமும், காதலியைப் போல அந்தரங்கமும் உருவாகக் காரணமாக இருந்தன

என்னுடைய 19வது வயதில் நான் திரைப்படத்துறைக்கு வந்த பின்பு அகிரா குரசவாவையும், ஸ்டான்ட்லி குப்ரிக்கையும் குருவாக ஏற்றுக் கொண்டபோதும் கூட அவர்கள் எனக்குள் 2 மற்றும் 3வது இடன்கையே பிடித்தனர்.

தன்னிறைவு பெற்ற குடும்பத்திலிருந்து வந்த ஒருவருக்கு வேண்டுமானால் டிராவிட் மற்றும் லக்ஷ்மன் ஆகியோரின் இசைவான ஆட்டம் பிடிக்கலாம். ஆனால் சச்சின், நெருக்கடிகளில் அடையாளங்களைத் தொலைத்தவர்களின் கனவு நாயகன். கனவுகளை விதைப்பவன். ரட்சகன். அதனாலேயே கடந்த 25 ஆண்டுகளில், கடுமையாக போராட வேண்டிய வறண்ட இந்திய நிலப்பரப்பில் (கேரளா, மேற்கு வங்காளம் மற்றும்  வடகிழக்கு மாநிலங்கள் நீங்களாக) கிரிக்கெட் மதமாகவும், சச்சின் கடவுளாகவும் இருக்கிறார்.  
அதனாலேயே சச்சினின் பிரிவுஉபச்சார நிகழ்சிகள் சம்பிரதாயமாக இல்லாமல் ஒரு தந்தையின், நண்பனின், காதலியின் மரணத்தைப் போல ஒவோருவரையும் நிலைகுலையச் செய்துள்ளது. இன்று நெருங்கிய உறவினர் இறந்தால் கூட காலம் உணர்த்தும் மரணத்தின் முன்பாக அமைதிகாத்து விடுகிறோம்.  ஆனால், சச்சினின் பிரிவின்போது நிலைகொள்ளாமல் கண்ணீர் பெருகிக்கொண்டே இருக்கிறது. அதனாலேயே காலம் என்கிற பெரும் உண்மை மீது கோபம் வருகிறது. ஏனென்றால், சச்சின் அடையளமற்றவர்களின் அடையாளம்!     பெருங்கனவின் கடவுள்!    



Monday, August 6, 2012

The God of Small Things!

"The God of Small Things" என்ற அருந்ததிராயின் நாவலை தமிழில் மொழிபெயர்க்க உயிர்மை பதிப்பகம் முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்காத சூழலில், "சின்ன விசயங்களின் கடவுள்" என்ற பெயரில் "The God of Small Things " நாவல் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் கடந்த மாதம் 28 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு தொடர்பாக உயிர்மைக்கும், அருந்ததிராய்க்கும் இடையே நடந்த திரைமறைவு விசயங்களை மனுஷ்யபுத்திரன் பலமுறை உயிர்மை இதழிலும், இணையத்திலும் புலம்பித் தீர்த்தார். இந்த நிலையில் நாவலின் வெளியீட்டு விழா மேடையிலேயே கவிஞர் சுகுமாரன், மனுஷ்யபுத்திரனுக்கு வேண்டிய புதிரின் விடையை சொல்லியும் சென்றார். இருந்தும் தன் காழ்புணர்ச்சி குறையாத மனுஷ்யபுத்திரன், வாஸந்தி மாதிரியான அரைகுறை பெண்ணியவாதிகளை வைத்து 1960 -இல் வெளியான 'To Kill a Mocking Bird" நாவலை தழுவி அருந்ததிராயின் நாவல் உள்ளது என்றும், அவருக்கு வழங்கப்பட்ட புக்கர் பரிசு "அருந்ததிராயின் கருத்த சுருண்ட முடியையும் அகன்ற ப்ரௌன் கண்களையும் ப்ரௌன் சருமத்தையும் கண்ட மயக்கத்தில் வழங்கப்பட்டது" என அருவருப்பான ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றனர்.
மேலும் மாவோஇஸ்டுகளுக்கு ஆதரவாக அறிக்கைகள் கொடுப்பதால் "அவர் வாயை மூடிக்கொண்டும் அடுத்த நாவலைப் பற்றி யோசிக்கட்டும் " என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர். அவரை வாயை மூடிக்கொண்டிருக்க சொல்ல, கேவலமான இலக்கிய அரசியலை எப்போதும் கையிலெடுக்கும் உயிர்மைக்கு எந்த அருகதையும் இல்லையோ அதைப் போலவே அவரை அடுத்த நாவலைப் பற்றி யோசிக்கவும் சொல்லவும். "The God of Small Things" போன்ற நாவலுக்கெல்லாம் ஏன் இத்தனை சிரத்தை எடுத்தாய்" என்று சொன்ன அமரர்.சுஜாதா போன்ற அரைகுறை இலக்கியவாதிகளுக்கு கொடி பிடித்து அலையும் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து "ஸ்டீரியோ டைப்" கவிதைகளை தினக் கழிவு போல கொட்டித் தீர்த்துக் கொண்டும் உள்ளார். இன்றைய தினத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் எத்தனையோ சோதனைகளை தங்கிக் கொள்ளும் நாங்கள், உங்களின் கவிதைகளை!!??? படித்துவிட்டு "வாயை மூடிக் கொள்ளுங்கள். பேனாவை கவுத்து வையுங்கள்" என்றெல்லாம் சொல்லாமல் இருப்பது போலவே நீங்களும் இருந்து விடுங்கள். அப்படியே பேச வேண்டும் என்றால் நேர்மையாக பேசக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் தழுவலைப் பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நந்தலாலா (KIKIJIRO) வெளியான போது அதனை கலைஞர் டிவியில் கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் புகழ்ந்தவர் தானே நீங்கள்...? Kikijiro வின் தழுவல்தான் நந்தலாலா என உங்களுக்கு தெரியாது என்றால், சினிமா பற்றிய போதிய அறிவு இல்லாத நீங்கள் அந்த டிவி நிகழ்ச்சிக்கு சென்றதை "மனுஷ்யபுத்திரன் வாய்ப்புக்காகவும் புகழுக்காகவும் அலைபவர்" என்று நாங்கள் கருதிக் கொள்ளலாமா? "The God of Small Things" நாவலில் வரும் "ராஹேல்" கதாபாத்திரம் உங்களுக்கு அருந்ததிராயை ஞாபகப்படுத்தவில்லையா? சுயசரிதையின் சாரம் நாவலில் ஓடுவது உங்களுக்கு தெரியவில்லையா? இதற்கு மேலும் தழுவலைப் பற்றியும் அதன் வரலாறையும் விளக்கிச் சொல்ல வேண்டுமானால் அந்த வரலாற்றின் தொடக்கப் புள்ளியை உயிர்மையிலிருந்தும் அதன் ஆஸ்தான நாயகன் எஸ்.ராமகிருஷ்ணனில் இருந்துமே தொடங்குங்கள்!! இந்த மாதிரியான விசயங்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்குவது என்பது கஷ்டமானதாக இருந்தாலும், இரத்தம் குடிக்கும் கொசுக்களை கொள்ளாமல் ஆழ்ந்த தூக்கம் கைகூடுவதில்லை!

Friday, August 12, 2011

பொதுவான உணர்சிகள்!


நீங்கள் வேற்று மொழி தெரிந்த ஆட்களுக்கு மத்தியில் வேலை செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. நண்பர்களாக அருகில் வருபவர்கள் கூட உங்களின் பலகீனங்களை தேடி அலைவார்கள். "நீங்கள் எவ்வளவு உணவு அருந்துகிறீர்கள்? எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள்? எத்தனை நேரம் கழிவறையை பயன்படுத்துகிறீர்கள்? எல்லோரையும் விட அதிகமாக உழைக்கிரீர்களா?" என்று!
சில நேரங்களில் உங்களுக்கு தெரியாது என்றெண்ணி மனம் நொறுங்கச் செய்யும் வார்த்தைகளால் உங்களை நோகடிக்கக் கூடும். அப்போது நீங்கள் உணர்சிகளற்ற நிலையில், எதுவுமே தெரியாதது போல் நடிக்க வேண்டும். நீங்கள் நடிப்பதும் அவர்களுக்கு தெரியக்கூடாது. தெரிந்தாலும் அதைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. உங்களைப் பார்த்து பரிகசிக்க நிறைய ஆள் கிடைக்கும். உங்களுக்காக வருத்தப் பாடவும், ஆறுதல் சொல்லவும் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். அவர்களுக்கு ஓன்று மட்டும் புரிவதில்லை. "உலகம் முழுதும் சந்தோசப்படுவதற்கும், அழுவதற்கும் காரணமான உணர்சிகள் பொதுவானவை" என்று!

Wednesday, July 27, 2011

தமிழர்கள் செய்யும் கருணைக் கொலை!

உண்மையைத் தேடுவதே கலையின் நோக்கமாக இருக்கக் கூடும் - ஆந்த்ரே தார்கோவெஸ்கி

கடந்த மாதம் வெளிவந்த ஆரண்ய காண்டம் திரைப்படத்தை சென்னையில் உதயம், pvr , சாந்தி, inox மற்றும் மதுரையில் பிக் சினிமாஸ் என ஐந்து முறை கண்டுகளித்தேன். ஒவொரு முறையும் ஆரண்ய காண்டம் புதிய அனுபவங்களைத் தந்தது. கடந்த ஒரு நூற்றாண்டு இந்திய சினிமாவில் மிகச்சிறந்த படங்களின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய படம் ஆரண்ய காண்டம்!

நம்புங்கள் தமிழில் எடுக்கப்பட்ட!!??? ஆரண்ய காண்டம் NEW YORK FESTIVAL -ல் GRAND JURY PRIZE பெற்றுள்ளது! மேலும் உலகின் சிறந்த படங்களை பட்டியலிடும் IMDB வலைத்தளம் கடந்தவாரம் 9.1 வரை அந்த இணையத் தளம் RATING கொடுத்தது. உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களுக்கே 9.4 தான் RATING . என் விருப்பதிட்குரிய இயக்குனர்கள் ஸ்டான்ட்லி குப்ரிக் மற்றும் குரசாவாவின் படங்களுக்கே இந்த இடம் கிடைக்க வில்லை. ஆனால் ஆரண்ய காண்டம் ப்ளாப்!

நமது ஆனந்த விகடன் போக்கிரி, காவலன், மன்மதன் அம்பு போன்ற மட்டரகமான படங்களுக்கு கொடுக்கும் 44 மதிப்பெண்களையே வழங்கியது. காரணம் படத்தின் வன்முறை என்கிறது விகடன். எது வன்முறை? நல்ல படத்துக்கு மார்க் கொடுக்காமல் இருப்பதா? அட்டையில் பொம்பளைப் படத்தைப் போட்டு சம்பாதிப்பதா? COPY அடித்த தெய்வத் திருமகள் படத்திற்கு 50 கொடுப்பதா? தமிழ் நாடு உருப்பெருவதட்க்கு உங்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அறிகுறி ஏதாவது தெரிகிறா? நிச்சயம் தெரியாது. தமிழ் நாட்டில் எப்படி தெரியும்?

இதில் நிறைய "அறிவுஜீவிகள்" 'இதுவரை வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே copy அடிக்கப்பட்டவை' என்று கமென்ட் எழுதுகிறார்கள். 'கமலை'ப் பற்றி நிறைய எழுதியும், "கமல் மட்டு copy அடிக்கவில்லையா?" என சப்பைக் கட்டு காட்டுகின்றனர். யார் திருடினாலும் திருட்டு திருட்டு தான்! இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் திராணி இல்லாத, நெஞ்சில் உண்மையில்லாத, யாரையேனும் அண்டிப் பிழைப்பு நடத்தும், காசுக்காக எதையும் திண்ண தயாராக இருப்பவர்களுக்குமே உரித்தான வார்த்தைகள் இவை. மேலும் குறைந்தபட்ச அறத்தோடு செயல்படுகிரவர்களையும் நம்பிக்கை இழக்கச்செய்யும்!

நண்பர்களே,அற்புத கவிஞன் பாரதியை 39 வயதில் கொன்றோம். அருமையான கதை சொல்லி புதுமைப்பித்தனை 38 வயதில் கொன்றோம். நவீனக் கவிஞன் பிரமிளை புற்று நோய்க்கு தின்னக் கொடுத்தோம். நல்ல படங்களை எடுத்த மகேந்திரனை இன்று எங்கே? அந்த வரிசையில் தான் "ஆரண்யகாண்டம்" இயக்குனரையும், தயாரிப்பாளரையும் சேர்க்கவேண்டும். ஏன் என்றல் அவர்கள் தமிழர்களின் ரசனை புரியாமல் உலகத்தரத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து விட்டார்கள். இப்படியாக கலைஞர்களை தமிழர்களாகிய நாம் கொலை செய்து கொண்டே போனால், தமிழ் நாட்டில் எப்படி கலை வளரும்?

இப்போது சொல்லுங்கள் தமிழ் நாட்டில் தமிழ்நாட்டில் சூடு, சுரணையோடு வாழ்ந்தால் ஏன் நமது சமநிலை குலையாது என்று?
.............................